முட்டைகள் உள்ள உணவு
egg is a nutrient food / From Wikipedia, the free encyclopedia
பல்வேறு பெண் உயிரினங்களால் குறிப்பாக பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றால் இடப்படும் முட்டைகளை, மனிதர்களும் அவர்களின் மூதாதையர்களும் பல மில்லியன் ஆண்டுகளாக உணவாக உட்கொண்டு வருகின்றனர். [1] குறிப்பாக கோழிகளின் முட்டைகள் பரவலாக பல்வேறு இனக்குழுக்களால் உணவுப்பொருளாக நுகரப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள் கிமு 1500 வாக்கில் உணவுக்காக கோழி முட்டைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். [2] வாத்து, காடை, கவுதாரி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்ற பிற பறவைகளின் முட்டைகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்களின் முட்டைகளையும் மக்கள் சாப்பிட்டு வந்தாலும் அவைகள் எண்ணிக்கையளவில் கோழிகளின் முட்டைகளை விட மிகக் குறைவு. உணவாக உட்கொள்ளும் மீன் முட்டைகள் ரோ அல்லது கேவியர் என்று அழைக்கப்படுகின்றன.
கோழிகள் மற்றும் பிற முட்டையிடும் உயிரினங்கள் உலகம் முழுவதும் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன, மேலும் கோழி முட்டைகளின் உற்பத்தி ஒரு உலகளாவிய தொழிலாகும். 2009 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 6.4 பில்லியன் கோழிகளின் முட்டையிடும் மந்தையிலிருந்து 62.1 மில்லியன் மெட்ரிக் டன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [3] இதன் புரதத் தேவை மற்றும் எதிர்பார்ப்பில் பிராந்திய அளவில் பல்வேறு பிரச்சினைகளும் உள்ளது, அத்துடன் கோழிகளை முட்டைக்காகவே வளர்க்கும் வெகுஜன உற்பத்தி முறைகள் குறித்த விவாதங்களும் தற்போது உள்ளன. 2012 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம் கோழிகளை அடைக்கப்பட்ட கூண்டுகளில் முட்டைகளுக்காக வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது.