கியூபா
From Wikipedia, the free encyclopedia
கியூபா அல்லது அலுவல்முறையாக கியூபாக் குடியரசு (Cuba, எசுப்பானிய ஒலிப்பு: கூபா) கியூபாத் தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த கரிபியன் தீவு நாடு ஆகும். இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும் துர்கசும் கைகோசுக்கும் எய்ட்டிக்கும் மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் கேமன் தீவுகளும் யமேக்காவும் அமைந்துள்ளன. எயிட்டியும் டொமினிக்கன் குடியரசும் தென்கிழக்கில் உள்ளது. அவானா கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது.[1][2][3]
கியூபா குடியரசு República de Cuba | |
---|---|
குறிக்கோள்: எசுப்பானியம்: Patria o Muerte தாய்நாடு அல்லது மரணம் | |
நாட்டுப்பண்: யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே | |
தலைநகரம் | அவானா |
பெரிய நகர் | அவானா |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் |
அரசாங்கம் | சோசலிச குடியரசு |
விடுதலை பத்து வருடப் போர் | |
அக்டோபர் 10 1868 | |
• கியூபா குடியரசு பிரகடனம் | மே 20 1902 |
• அங்கீகாரம் | ஜனவரி 1, 1959 |
பரப்பு | |
• மொத்தம் | 42,803 sq mi (110,860 km2) |
• நீர் (%) | சிறியது |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 11,382,820 (73வது) |
• 2002 கணக்கெடுப்பு | 11,177,743 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $39.17 பில்லியன் (தரம் இல்லை) |
• தலைவிகிதம் | $3,500 (not ranked) |
மமேசு (2005) | 0.817 அதியுயர் · 52வது |
நாணயம் | கியூபா பீசோ (CUP )கியூபா கொன்வேர்டிபல் பீசோ 1 (CUC) |
நேர வலயம் | ஒ.அ.நே-5 (வட அமெரிக்க கிழக்கு சீர் நேரம்) |
ஒ.அ.நே-4 ((ஏப்ரல் 1 இல் ஆரம்பம், முடிவு திகதி மாறுபடும்)) | |
அழைப்புக்குறி | 53 |
இணையக் குறி | .cu |
1 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது. |
1492இல் எசுப்பானிய தேடலாய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர். அதன் பின்னர் அது எசுப்பானிய குடிமைபடுத்தப்பட்ட நாடானது. 1898 எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து அமெரிக்காவால் ஆளப்பட்டு வந்தது. 1902இல் பெயரளவில் விடுதலை வழங்கப்பட்டது.
வலிவற்ற குடியரசாக விளங்கிய கூபாவில் தீவிர அரசியலும் சமூகப் போராட்டங்களும் இருந்தபோதும் நிலைத்திருந்தது; 1940இல் கூபாவின் அரசியலமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலையை பயன்படுத்தி அப்போதைய அரசுத்தலைவர் புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.[4][5] ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த பொதுவுடமைக் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா 11 மில்லியன் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக உள்ளது; லா எசுப்பானியோலாவிற்கு அடுத்து இரண்டாவது மிக்க மக்கள்தொகை உள்ள தீவாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது. பன்முக இன மக்கள் வாழும் கூபாவில் தாயகப் பழங்குடியினரின் பண்பாடும் வழக்கங்களும் எசுப்பானிய குடியேற்றவாத கால ஆப்பிரிக்க அடிமைகளின் பழக்கங்களும் ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டுள்ளது.
எஞ்சியுள்ள பொதுவுடைமை நாடுகளில் ஐக்கிய நாடுகளின் "மிக உயர்ந்த" மனித வளர்ச்சி சுட்டெண்படியான தரவரிசையிலுள்ள நாடாக இன்று விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.[6][7][8] அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது. மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள் ஆகும். கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99.8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.