ஜுராசிக் பார்க் (திரைப்படம்)
ஸ்பானிஷ் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது 1993 ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பில்பேர்க் (Steven Spielberg) இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும்.[3] ஜுராசிக் பார்க் உரிமைக்குழுமத்தின் முதல் படம் இதுவேயாகும். இதே பெயரில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் (Michael Crichton) 1990 -இல் எழுதி வெளியிட்ட ஒரு புதினத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.
ஜுராசிக் பார்க் | |
---|---|
திரை வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் |
தயாரிப்பு | கேத்தலின் கென்னடி ஜெரால்ட்.ஆர்.மோலன் |
மூலக்கதை | மைக்கேல் கிரைட்டன் எழுதிய ஜுராசிக் பார்க் |
திரைக்கதை | மைக்கேல் கிரைட்டன் டேவிட் கோப் |
இசை | ஜான் வில்லியம்ஸ் |
நடிப்பு | சாம் நெய்ல் லாரா டென் ஜெஃப் கோல்ட்ப்ளும் ரிச்சர்ட் ஆட்டன்பரோ பாப் பெக் மார்டின் பெர்ரீரோ பி.டி. வோங் சாமுவேல் எல். ஜாக்சன் வைன் நைட் அரியானா ரிச்சர்ட்ஸ் ஜோசெஃப் மெஸெல்லோ |
ஒளிப்பதிவு | டீன் கண்டே |
படத்தொகுப்பு | மைக்கேல் கான் |
கலையகம் | அம்ப்ளின் என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | யுனிவெர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஜூன் 9, 1993 (அப்டவுன் திரையரங்கு) ஜூன் 11, 1993 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
ஓட்டம் | 128 மணித்துளிகள்[1] |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $ 6.3 கோடி[2] |
மொத்த வருவாய் | $ 103.4 கோடி[2] |
இத் திரைப்படமானது நடு அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவைச் சேர்ந்த ஈஸ்லா நுப்லார் என்ற கற்பனைத் தீவில் நிகழ்வதாக அமைந்துள்ளது. அங்கு ஒரு செல்வந்தர், மரபணு வல்லுநர்களின் துணையுடன் அழிந்துபோன உயிரினங்களான தொன்மாக்களை (Dinosaurs) படியெடுப்பு முறையில் உயிர்ப்பித்துப் பின் அங்கு தான் உருவாக்கிய உயிரியல் பூங்காவில் உலவவிடுகிறார். அப் பூங்காவில் ஏற்படும் எதிர்பாரா இடர்களையும் அவற்றிலிருந்து தப்பக் கதைமாந்தர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் இப் படம் காட்சிப்படுத்துகிறது.
கிரைட்டனின் புதினம் வெளியாவதற்கு முன் நான்கு நிறுவனங்கள் இத் திரைப்படத்தின் உரிமைகளை வாங்க முன்வந்தன. இறுதியில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் உதவியால் ஸ்பில்பேர்க் $ 15 லட்சத்துக்கு அவ்வுரிமைகளைப் பெற்றார்; திரைக்கதையை எழுதுவதற்கென மைக்கேல் கிரைட்டன், $ 5 லட்சத்துக்கு அமர்த்தப்பட்டார்; திரைக்கதையின் இறுதி வடிவத்தை எழுதிய டேவிட் கோப் (David Koepp), கிரைட்டனின் புதினத்தில் காணப்பட்ட நீண்ட விளக்கங்கள், வன்முறை ஆகியவற்றுள் பெரும்பாலான பகுதிகளைத் தவிர்த்தார். மேலும், கதைமாந்தரின் காண்பிப்பையும் மாற்றியமைத்தார்.
படப்பிடிப்பு, 1992 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை கலிபோர்னியா மற்றும் ஹவாயில் நடைபெற்றது. இறுதித் தயாரிப்பு, போலந்தில் மே 1993 வரை ஸ்பில்பேர்க் தலைமையில் நடைபெற்றது. அதே சமயத்தில்தான் அவர் சிண்டலர்ஸ் லிஸ்ட் (Schindler's List) படத்தையும் இயக்கிக்கொண்டிருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற தொன்மாக்கள் அனைத்தும் இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் (Industrial Light & Magic) (ILM) நிறுவனத்தின் CGI தொழில்நுட்பத் துணையாலும் ஸ்டான் வின்ஸ்டன் (Stan Winston) குழுவினரின் அசைவூட்ட மாதிரிகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டன. அவற்றின் ஒலிகளுக்காகத் தற்கால விலங்குளின் ஒலிகள் பதிவுசெய்யப்பட்டன. மொத்தப் படத்தின் ஒலிப்பதிவையும் துல்லியமாகச் செய்ய விரும்பிய ஸ்பில்பேர்க், DTS என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தைத் தோற்றுவிக்க முதலீடு செய்து உதவினார். படத்தின் சந்தைப்படுத்துதல் $ 6.5 கோடி செலவில் நடந்தது. நூறு நிறுவனங்களுடன் உரிம ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
ஜுராசிக் பார்க், முதன்முதலில் ஜூன் 9, 1993 அன்று, வாசிங்டன், டி. சி.யில் உள்ள அப்டவுன் திரையரங்கில் திரையிடப்பட்டது. ஜூன் 11 அன்று அமெரிக்கா முழுவதும் வெளியானது. முதல் திரையோட்டத்தில் உலகளவில் $ 91.27 கோடிக்குமேல் ஈட்டியது[4]. இதனால் 1993-இல் அதிக வருவாய் ஈட்டிய படமாகவும், அச்சமயம் வரை அதிக வருவாய் ஈட்டிய படமாகவும் விளங்கியது. இதில் இரண்டாவது சாதனையை 1997-இல் வந்த டைட்டானிக் திரைப்படம் முறியடித்தது.
ஜுராசிக் பார்க் படத்தின் சிறப்பு விளைவுகள், நடிப்பு , ஜான் வில்லியம்ஸின் இசையமைப்பு, ஸ்பில்பேர்க்கின் இயக்கம் ஆகியன திறனாய்வாளர்களால் பாராட்டப்பெற்றன. இப் படம் செப்டம்பர் 23, 2011 அன்று ஐக்கிய இராச்சியத்தில் மீண்டும் வெளியானது. ஏப்ரல் 4, 2013 அன்று இருபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக முப்பரிமாண வடிவிலும் வெளியிடப்பட்டது. இவ்வெளியீடுகளால் $ 100 கோடிக்கு மேல் மொத்த வருவாய் ஈட்டிய 17-ஆவது திரைப்படமாக ஆனது. இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை (மூன்று அகாதமி விருதுகள் உட்பட) பெற்றுள்ளது. இவற்றுள் திரை வண்ணம், ஒலியமைப்பு ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட விருதுகளும் அடங்கும்.
CGI மற்றும் அசைவூட்டத் திரைவண்ண வளர்ச்சியில் இப்படம் ஒரு நிலக்குறியாகக் கருதப்படுகிறது. 2018 -இல், அமெரிக்கக் காங்கிரசு நூலகம் , இப் படத்தை "கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ அழகியல் ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்தது" என்ற அடிப்படையில் அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.[5]
ஜுராசிக் பார்க்-கின் தொடர்ச்சிகளாக த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் (1997), ஜுராசிக் பார்க் III (2001), ஜுராசிக் வேர்ல்ட் (2015), ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (2018), ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) ஆகிய படங்கள் வெளியாகின.