நீலப் பையன்
From Wikipedia, the free encyclopedia
நீலப் பையன் (The Blue Boy) என்பது, "தாமசு கெயின்சுபரோ" என்பவரால் வரையப்பட்ட, நீல உடை அணிந்த ஒரு பையனைக் காட்டும் முழு அளவு ஓவியம். இது எண்ணெய் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள இது தற்போது கலிபோர்னியாவின் சான் மரீனோவில் உள்ள அன்டிங்டன் (Huntington) நூலகத்தில் உள்ளது.[2] கெயின்சுபரோவின் மிகப் பிரபலமான ஆக்கமான இது, செல்வந்தரான வன்பொருள் வணிகர் ஒருவரின் மகனான யொனதன் புட்டால் (1752-1805) என்பவனின் படம் எனச் சொல்லப்பட்டாலும், இதை எவரும் ஐயத்துக்கு இடமின்றி நிறுவவில்லை. ஒரு தோற்றப் படமாக இருக்கும் அதேவேளை இது ஒரு வரலாற்று ஆடை ஆய்வும் ஆகும். 17 ஆம் நூற்றாண்டு உடையணிந்து காணப்படும் இச் சிறுவனின் படம் பெயர் பெற்ற ஓவியரான அந்தனி வான் டைக் என்பவருக்கு கெயின்சுபரோவின் அஞ்சலி எனக் கருதப்படுகிறது. இவ்வோவியம் வரையப்பட்ட துணியில் ஏற்கெனவே ஏதோ ஒன்று வரையப்பட்டிருந்து அதன் மேலேயே "நீலப் பையன்" ஓவியத்தை ஓவியர் வரைந்துள்ளார். படம் ஏறத்தாழ ஒரு முழு அளவுப் படம் ஆகும். இது 48 அங்குல (1,200 மிமீ) அகலமும், 70 அங்குல (1,800 மிமீ) உயரமும் கொண்டது. கெயின்சுபரோவின் போட்டியாளரான சர் யோசுவா ரேனால்ட்சு என்பவரின் ஆலோசனைக்குப் பதிலாகவே இந்த ஓவியத்தை அவர் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது.[3]
நீலப் பையன் | |
---|---|
ஓவியர் | தாமசு கெயின்சுபரோ |
ஆண்டு | 1779 |
ஆக்கப் பொருள் | கன்வசில் எண்ணெய் வண்ணம் |
பரிமானங்கள் | 177.8 cm × 112.1 cm (70.0 அங் × 44.1 அங்) |
இடம் | அன்டிங்டன் நூலகம்[1], சான் மரீனோ, கலிபோர்னியா |