அக்னி (ஏவுகணை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அக்னி ஏவுகணை (சமஸ்கிருதம்: अग्नि, "நெருப்பு") என்பது இந்தியாவினால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் பெயருடைய நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகைகளைக் குறிக்கும். அக்னி நீண்ட இயங்கு தூரம் கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்தைத் தாக்கும் ஏவுகணையாகும். அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் முதல் ஏவுகணையான அக்னி-1, ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு 1991-ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு அக்னி ஏவுகணையின் முக்கியத்துவம் கருதி அத்திட்டத்தில் இருந்து அக்னி ஏவுகணைத் திட்டம் பிரிக்கப்பட்டு ராணுவ பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கி தனி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் உள்ள ஏவுகணைகளின் பட்டியல்:
Remove ads
அக்னி-1
திட எரிபொருள் கொண்ட முதல் அடுக்குடன் கூடிய ஈரடுக்கு அக்னி தொழில்நுட்பம், சந்திபூரிலுள்ள இடைக்கால சோதனை தளத்தில் இருந்து 1989 ஆம் ஆண்டு சோதிக்கப்பட்டது. அது 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய திறனுடையதாக இருந்தது. இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு அக்னி-1 மற்றும் அக்னி-2 ஆகிய திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இந்தியா முதலில், 2000 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட ஈரடுக்கு அக்னி-2 ஏவுகணையை உருவாக்கி 1999 ஆம் ஆண்டு சோதித்தது. பின்னர் அதன் ஓரடுக்கைப் பயன்படுத்தி 700 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட அக்னி-1 உருவாக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சோதனை செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக இருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு பல வெளிநாடுகளின் நெருக்கடி இருந்தபோதும் வெற்றிகரகாக சோதனை செய்து சாதனை செய்தார்.[15]
பன்னிரண்டு டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட அக்னி-1 ஏவுகணை 700 முதல் 1250 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்துகொண்டு நொடிக்கு 2.5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ஏவுகணை, ஒடிசா அருகிலுள்ள வீலர் தீவிலிருந்து, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி ஏவுகணைகள் ஒன்று (குறுகிய இயங்கு தூரம்) அல்லது இரண்டு (இடைத்தர இயங்கு தூரம்) அடுக்குகள் கொண்ட ஏவுகணைகளாகும். திட எரிபொருள் கொண்டு இயங்கும் இவற்றை இருப்புப்பாதை மற்றும் சாலைகளில் இருந்து நடமாடும் ஏவுதளத்தில் மூலம் ஏவ முடியும். அக்னி-1 ஏவுகணை இந்திய தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
அக்னி-2

அக்னி-2 ஏவுகணை, 2000 முதல் 2500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும் 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்டது. அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்குவன. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் "நம்பகமான தற்காப்பின்" ஒரு அங்கமாக இந்த ஏவுகணை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியா, தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிரானவை அல்ல என்றும், தனது பாதுகாப்புத் திட்டங்களில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் ஒரு சிறு அங்கம் மட்டுமே என்றும், சீனாவுக்கு எதிரான தற்காப்பில் அக்னி ஏவுகணை ஒரு முக்கிய அங்கம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூலோபாய படைப்பிரிவு, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட அக்னி-1 சோதனைக்குப் பிறகு, பயனர் சோதனையின் ஒரு பகுதியாக அக்னி-2 ஏவுகணையை, 9 ஆகஸ்டு 2012 அன்று சோதித்தது. இந்தியா தனது 'அணு ஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய அக்னி-2' ஏவுகணையை ஓடிசாவிலுள்ள இராணுவ தளத்தில் இருந்து 7 ஏப்ரல் 2013 அன்று சோதித்தது.
Remove ads
அக்னி-3
அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் மூன்றாவது ஏவுகணையான அக்னி-3, 3500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 1.5 டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டது. அக்னி-3 ஏவுகணை, தனது இரண்டு அடுக்குகளிலும் திட எரிபொருள் கொண்டு இயங்குவதாகும். ஒடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 9 சூலை 2006 அன்று அக்னி-3 சோதிக்கப்பட்டது. ஏவுகணையின் இரண்டாம் அடுக்கு பிரியத்தவறியதால் ஏவுகணை இலக்கை எட்டாமலே விழுந்தது சோதனைக்குப்பிறகு தெரியவந்தது. மீண்டும் வீலர் தீவிலிருந்து, 12 ஏப்ரல் 2007 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மே 7, 2008 அன்று மற்றொரு முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த மூன்றாவது சோதனையின் போது அக்னி-3 ஏவுகணையின் விரைவாக உபயோகிக்கக்கூடிய தன்மை உறுதிபடுத்தப்பட்டது. இந்தியா இதன் மூலம் தனது எதிரிகளின் முக்கிய இடங்களைத் தாக்கும் வல்லமையைப் பெற்றது.
அக்னி-3 ஏவுகணை தனது இலக்கை, 40 மீட்டர் துல்லியத்துடன் தாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் அக்னி-3 ஏவுகணையே உலகின் மிகத் துல்லியமான தாக்குகணை என்றாகிறது. மிக அதிக துல்லியத்தினால் இதன் இலக்கைத் தகர்க்கும் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் குறைந்த எடையுடைய ஆயுதங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அதிக அழிவை வெற்றிகரமாக உண்டாக்க முடியும். ஆகையால் இந்தியாவால் குறைந்த அளவு அணுப்பிளவு அல்லது அணு இணைவு பொருட்களைக் கொண்டு மிக அதிக ஆற்றலுடைய அணு வெடிப்பை நிகழ்த்த முடியும். மற்ற அணு சக்தி நாடுகளால் பயன்படுத்தப்படும் தாக்குகணைகளில், அக்னி-3க்கு இணையான அழிவை உண்டாக்க மிக அதிக அளவில் (1 - 2 மெகா டன்) அணு வெடி பொருட்கள் தேவைப்படும். மேலும், அக்னி-3 ஏவுகணையால் குறைந்த எடையுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, 3500 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரத்திலும் தாக்குதல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.
அக்னி-4
முன்னர் 'அக்னி-2 பிரைம்' என்றழைக்கப்பட்ட அக்னி-4, அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் நான்காவது ஏவுகணையாகும். முதன்முதலாக, 15 நவம்பர், 2011 அன்று இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் அருகிலுள்ள வீலர் தீவில் இருந்து, அக்னி-4 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. மீண்டும் 19 செப்டம்பர், 2012 அன்று அதன் முழு இயங்கு தூரமான 4000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதே தீவிலிருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அக்னி-4 ஏவுகணை, 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும், ஒரு டன் எடையுடைய ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை, 3000 முதல் 4000 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 3000 °C வெப்பத்தையும் தாங்கக்கூடியது. இந்தியாவில் உருவக்கப்பட்ட மிக பேறிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த, நடமாடும் ஏவுதளத்திலிருந்தும் ஏவக்கூடியதாகும்.
Remove ads
அக்னி-5
அக்னி-5 ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும். இதனைக் கொண்டு 5000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்க இயலும். அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஈரடுக்கு அக்னி-3 ஏவுகனையோடு கூடுதலாக ஒரு அடுக்கைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படக்கூடியதால், இதை இடமாற்றுவது மிகவும் எளிதானது. அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரமும், 49 டன் எடையும் கொண்டது. ஓடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 19 ஏப்ரல் 2012 அன்று ஏவுகணை முதலில் சோதிக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு, சூலை 2013 இல் சோதிக்கப்பட்டது. மீண்டும் வீலர் தீவிலிருந்து இரண்டாம் முறையாக, 15 செப்டம்பர் 2013 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
Remove ads
அக்னி-6
அக்னி-6 கண்டம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, தற்போது அதன் ஆரம்பகட்ட வளர்ச்சி நிலையில் உள்ளது. இது, அக்னி ஏவுகணைக் குடும்பத்திலேயே மிகவும் நவீனமான ஏவுகணையாக இருக்கும். நிலத்தில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் ஏவக்கூடிய இந்த ஏவுகணையின் இயங்கு தூரம் 8000 முதல் 10,000 கிலோ மீட்டர் ஆகும்.
மேலதிக வளர்ச்சிகள்
இந்திய விஞ்ஞானிகள், மே 2008 இல், ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை குறைந்தது 40% அதிகரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாகக் கூறினர். ஏவுகணைகளின் மேல்பரப்பில் சிறப்பு உலோகப் பூச்சு பூசுவதன் மூலம், அவை வானில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் எதிர்விசையை எளிதாகக் குறைக்க முடியும் (7 - 8 மக் வேகத்தில் 47% குறைவு). இதன் மூலம் ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை கணிசமாக (குறைந்தது 40%) அதிகரிக்க முடியும். இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads