அனந்தாழ்வார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும் அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் (English:Ananthazhwan/Ananthalvan) என்னும் இயற்பெயரில் பிறந்தவர். [1]இராமானுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர்.[2] இதற்காக தன் மனையாளின் உதவியோடு இவர் ஏற்படுத்திய திருக்குளம் "இராமானுச தீர்த்தம்" என்றும், அவரின் நந்தவனம் "அனந்தாழ்வார் நந்தவனம்" என்றும் இன்றும் திருமலை மாடவீதியில் காணப்பெறுகிறது.
Remove ads
இயற்றிய நூல்கள்
வடமொழியில்
- வேங்கடேச இதிஹாச மாலை - திருவேங்கடவன் மீது இயற்றப்பட்டது.
- கோதா சதுஸ்லோகி - கோதை ஆண்டாள் மீது இயற்றப்பட்டது.
- ராமானுஜ சதுஸ்லோகி - ஆசாரியனாகிய ‘உடையவர்’ மீது இயற்றப்பட்டது.
தமிழில் தன் ஆச்சாரியனாகிய இராமானுசர் மீது இவர் இயற்றிய தமிழ்ப்பாடல்:
- ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமானுச முநிதன்
- வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்த
- பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
- பேராத வுள்ளம் பெற.
Remove ads
மற்ற பெயர்கள்
- அனந்தாண்பிள்ளை
- அனந்தாசாரியர்
- அனந்த சூரி
திருவேங்கடவனின் மாமனாரான சிறப்பு
இவரின் நந்தவனத்தில், திருமலை பட்டத்தரசியான அலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் இணைகள் தன் நந்தவனத்தில் புகுந்து பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே பிணையாக சிறைப்படுத்தினார். பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சியவருக்கு, முன்னிரவில் தானே தன் மனையாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் மாமனார் என அன்றிலிருந்து அழைக்கப்பட்டு வருகிறார்.
தனியன்
திருமலையிலேயே தன்னுயிர் நீத்த இவரை, அவர் வாழ்ந்த குடிலில் பள்ளிப்படுத்தி இன்றும் வழிபாட்டிற்காக திருமலை கோயில் நிர்வாகத்தால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. கீழ்க்கண்ட வடமொழி தனியன் இவரின் மேன்மையை பறைசாற்றுகிறது.
- அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
- ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்
ஆதாரம்
ஆறாயிரப்படி குருப்பரம்பர பிரபாவம்[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads