ஐயனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐயனார் (Ayyaṉānar) என்பவர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் போற்றப்படும் ஒரு தமிழ் நாட்டார் தெய்வமாகும். ஐயனார் வழிபாடு கிராமப்புறத் தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது.[1][2][3] பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைக் சிறுதெய்வ வழிபாடு என்றும் காவல் தெய்வ வழிபாடு என்றும் சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வமாக இவரை வழிபடுகின்றனர்.[4] கடந்த காலங்களில் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஐயனாரை வழிபட்டிருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[5] கிராமப்புறங்களில் உள்ள ஐயனாரின் கோயில்களில் ஐயனார் அவரது பரிவார தெய்வங்களுடன் யானை மற்றும் குதிரைகளில் அமர்ந்த நிலையில் பிரமாண்டமாக வண்ணமயமான சிலைகளால் அமைக்கப்பட்டிருக்கும்.[6][7]



Remove ads
தோற்றம்
பழந்தமிழர்களின் சமயக் கடவுள் ஆவார். இவர் கம்பீரமான தோற்றத்துடன் கையில் செண்டாயுதம் எனும் சாட்டை வைத்திருப்பார் (இது அடக்கி ஆளுதல் எனும் குறியீடு).பெரிய யானைகள் மற்றும் பெரிய குதிரை சிலைகள் ஐயனார் கோயில்களில் இருக்கும். பொதுவாக ஊர் எல்லையிலும், நீர் நிலைகளின் அருகிலும் வெட்டவெளியில் கோயில் அமைந்திருக்கும்.
வடிவம்

ஐயனார் எப்போதும் கிழக்கு திசை நோக்கியும் அரிதாக சில மேற்கு திசை நோக்கியும் அமர்ந்திருப்பார். இளைஞரைப் போன்றவர். சிரசில் ஜடாமகுடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடது காதில் குண்டலமும் அணிந்திருப்பார் மற்றும் சிவனுக்கு உரிய அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலது கையில் தண்டம் அல்லது செண்டு வைத்திருப்பார். இடது கையை இடது காலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் மீது வைத்துக்கொண்டு வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார். யானை மீதோ, குதிரை மீதோ அமர்ந்திருப்பார்.
Remove ads
தேவியர் இருவர்
சிறப்பாக சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் காணப்படுவார். தேவியர்கள் இருபுறமும் அமர்ந்து கையில் மலரை பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டும் மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
பொற்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள், முழுமதி போன்றவள், என்று பொருளாகும்.
பரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எண் திசை காவலர்களும் மற்றும் யோகிகள், சித்தர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள் ஆகியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பசாமி, அக்னி வீரன் எனும் வீரபத்திரன்,சுடலைமாடன், சங்கன், சமயன்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளன், சின்னான், லாடசன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும் பேச்சியம்மன், செல்லியாயி, காளியாயி, நீலியாயி, ராக்காயி அல்லது ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி மற்றும் சப்த கன்னியர்கள் எனும் ஏழு கன்னிமார்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக இருப்பர்.
Remove ads
உணவு
காவல் தெய்வமான ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
கோயில் அமைவிடம்
ஊரைக் காக்கும் தெய்வம் என்பதால் பெரும்பாலும் ஐயனார் கோயில்கள் ஊரின் எல்லையிலேயே இருக்கும். அதிலும் குறிப்பாக கண்மாய்க் கரை மற்றும் நீர் நிலைகளின் அருகே இருக்கும். சில இடங்களில் காட்டிற்கு காவலாக உள்ளே ஐயனார் கோயில் இருக்கும். கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே முருகனும் இருப்பர்.
சேமக்குதிரை
ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.
கோயில் பூசாரிகள்
பூணூல் அணிந்தும் அசைவம் (மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாரிகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.
திருவிழாக்கள்
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
பிரசாதம்
ஐயனார் கோயிலில் சந்தனம்,குங்குமம், திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் சுத்தமான நீரும் வழங்கப்படும்.
காவலுக்குக் கருப்பர்
ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் வலதுகையில் அரிவாளும் இடது கையில் சுக்குமாந்தடியுடன் நின்ற கோலத்தில் காணப்படுவார்.இவர் இரவில் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல்புரிவார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads