அரராத்து (விவிலியம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரராத்து மலைத்தொடர் (Mountains of Ararat) என்பது விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் விவரிக்கப்படுகின்ற வெள்ளப்பெருக்கின் முடிவில் நோவாவின் பேழை தங்கிய இடம் ஆகும் (காண்க: தொடக்க நூல் 8:4)[1].

அரராத்து மலைத்தொடர் எபிரேய விவிலியத்தில் hārēy Ǎrārāṭ (הָרֵי אֲרָרָט) என்றும், கிரேக்கத்தில் τὰ Ἀραράτ என்றும் உள்ளது.
Remove ads
இரு மரபுகள்
விவிலியம் குறிப்பிடுகின்ற அரராத்து மலைத்தொடர் எங்குள்ளது என்பது குறித்து இரு முக்கிய மரபுகள் உள்ளன.
சிரிய மரபு மற்றும் திருக்குரான் மரபுப்படி, நோவாவின் பேழை தங்கிய "அரராத்து மலைத்தொடர்" இன்று நாக்சிவான் அல்லது வடமேற்கு ஈரான் என்றழைக்கப்படும் இடத்தில் உள்ள சூடி மலை (Mount Judi) ஆகும்.
ஆர்மீனிய மரபு, மற்றும் மேலைக் கிறித்தவ மரபுப்படி, நோவாவின் பேழை தங்கிய இடம் இன்றைய துருக்கி நாட்டில் "அரராத்து மலை" என்றழைக்கப்படும் இடம் ஆகும். ஆர்மீனிய உயர்நிலத்தின் (Armenian Highland) மிக உயர்ந்த மலையுச்சி அதுவே. முன்னாள்களில் அது "மாசிசு மலை" என்று அழைக்கப்பட்டது. பண்டைக் கிறித்தவ எழுத்தாளரான புனித ஜெரோம் (கிபி 4-5 நூற்றாண்டு) என்பவர் யோசேபுசு (கிபி முதல் நூற்றாண்டு)[2] என்னும் யூத வரலாற்றாசிரியரின் குறிப்பைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் மேற்கூறிய மரபு எழுந்தது.
நடுக்காலத்தில் ஆர்மீனிய மரபு பரவலாக ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, கீழைக் கிறித்தவமும் மேலைக் கிறித்தவமும் நோவாவின் பேழை தங்கிய இடம் "அராரத்து மலைத்தொடரே" என்று கொள்ளலாயின.
இன்று, இசுலாமியக் கண்ணோட்டத்தின்படி மட்டுமே நோவாவின் பேழை தங்கிய இடம் ஈரானிலுள்ள சூடி மலை என்று கொள்ளப்படுகிறது.
Remove ads
விவிலியக் குறிப்புகளும் விளக்கமும்
தொடக்க நூல் என்னும் விவிலிய ஏடு "அரராத்து மலைத்தொடர்" எனக் குறிப்பிடுவது ஒரு தனிப்பட்ட மலையை அல்ல, மாறாக ஒரு பொதுவான மலைப் பிரதேசத்தையே ஆகும் என்று அறிஞர் விளக்குகின்றனர். விவிலியத்தில் வருகின்ற அரராத்து அசீரிய மொழியில் "உரார்த்து" (Urartu) என்றும் பாரசீக மொழியில் "ஆர்மீன்யா" (Arminya) என்றும் வரும். அந்த அரசு வான் ஏரிப் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அதுவே கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டசு (Herodotus) என்பவரின் காலத்திலிருந்து "ஆர்மீனியா" என்று அழைக்கப்படலாயிற்று.
"யூபிலி நூல்" என்னும் விவிலியப் புறநூல் கூற்றுப்படி (7:1), நோவாவின் பேழை அரராத்து மலைத்தொடரில் அமைந்திருந்த "லூபார்" என்னும் மலையுச்சியில் தங்கியது.
Remove ads
விவிலியத்தின் இலத்தீன் மொழிபெயர்ப்பு
வுல்காத்தா (கிபி 4ஆம் நூற்றாண்டு) என்னும் விவிலிய இலத்தீன் மொழிபெயர்ப்பு "பேழை ஆர்மீனிய மலைத்தொடரில் தங்கியது" (இலத்தீன்: requievitque arca [...] super montes Armeniae) என்று கூறுகிறது. அது புது-வுல்காத்தா என்னும் தற்கால மொழிபெயர்ப்பில் (1979) "அரராத்து மலைத்தொடரில்" (இலத்தீன்: montes Ararat) என்று மாற்றப்பட்டது.
வரலாற்றாசிரியர் தரும் விளக்கம்
யோசேபசு (கிபி முதல் நூற்றாண்டு) என்னும் பண்டை யூத வரலாற்றாசிரியர் "யூதர்கள் வரலாறு" (Antiquities of the Jews) என்னும் நூலில் (I.3.5-6) நோவாவின் பேழை "ஆர்மீனியாவிலுள்ள ஒரு மலையுச்சியில் தங்கியது" என்னும் மரபு வழக்கத்திலிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சர் வால்ட்டர் ராலே (16-17 நூற்றாண்டு) என்பவர் "உலக வரலாறு" என்னும் தம் நூலில் "அரராத் மலைத்தொடர்" பற்றி விரிவாக எழுதியுள்ளார். அது ஆர்மீனிய மலைத்தொடரை மட்டுமன்று, அதற்குக் கிழக்கே அமைந்த மலைப்பகுதியையும் குறிக்கும் என்பது அவர் கருத்து.
Remove ads
நோவாவின் பேழையைத் தேடும் முயற்சி
விவிலியத்தில் விவரிக்கப்படுகின்ற வெள்ளப்பெருக்கின் பிறகு நோவாவின் பேழை அரராத்து மலைத்தொடரில் தங்கியது என்றால் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் முயற்சி கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆங்காங்கே சிலர் அப்பேழையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினாலும், இதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே அறிவியலாரின் முடிவு[3].
மேலும் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads