அரிச்சந்திரன்

தொன்மக் கதை மன்னர் From Wikipedia, the free encyclopedia

அரிச்சந்திரன்
Remove ads

அரிச்சந்திரன் (ஹரிச்சந்திரன்) இந்தியத் தொன்மக் கதை ஒன்றின் கதைத் தலைவன். இக்கதைகளின்படி இவர் சூரிய குலத்தின் 28 ஆவது அரசன் ஆவார். இவர் தனது வாழ்வில், சொன்ன சொல் தவறாமை, வாய்மை என்னும் இரண்டு ஒழுக்கங்களையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்தார். இவரது வாழ்க்கை இந்தியப் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுவதால், பள்ளிப் புத்தகங்களில் இவரது வரலாறு இடம்பெறுவது உண்டு. இந்தியாவில் மிகவும் பெயர் பெற்ற இவரது கதையை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான நூல்களும், நாடகங்களும், திரைப்படங்களும் பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டு உள்ளன. தனது கொள்கைகளில் உறுதியாக நின்றமையால் வாழ்க்கையில் அவர்அடைந்த துன்பங்களையும் இறுதியில் அதனாலேயே அவர் உண்மையின் சின்னமாகப் போற்றப்படுவதையும் அரிச்சந்திரனது கதை எடுத்துக் கூறுகிறது. இளம் வயதில் தான் பார்த்த அரிச்சந்திர நாடகமே தனக்கு வாய்மையின் உயர்வை உணர்த்தியதாய் அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்க்கை வரலாறான “சத்திய சோதனை” நூலில் குறிப்பிட்டுள்ளார்.

விரைவான உண்மைகள் அரிச்சந்திரன், துணை ...
Remove ads

அரிச்சந்திரன் கதை

Thumb
விசுவாமித்திரரும், அரிச்சந்திரரும்

நாடிழத்தல்

விசுவாமித்திரர் என்னும் முனிவர் அரிச்சந்திரனிடம் வந்தார். அரிச்சந்திரன் தனது கனவில் வந்து அவனது நாட்டைத் தனக்கு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்ததாகவும் அதனால், அந்நாட்டைத் தனக்கு அவர் தந்துவிடவேண்டும் என்று கூறினார். கனவிலாயினும், தான் வாக்குக் கொடுத்ததாக முனிவர் கூறுவதால் தன் நாட்டை அவருக்கே அரிச்சந்திரன் கொடுத்துவிட்டுத் தனது மனைவியையும் சிறுவனான மகனையும் அழைத்துக்கொண்டு அந்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்த வாரணாசிக்குச் செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறினான்.

அடிமைகளாதல்

எனினும் முனிவர் அவனை நோக்கி, அவர் கொடுத்த தானம் நிறைவெய்துவதற்குத் தட்சிணை கொடுக்கவேண்டும் என்றார். தட்சிணையாகக் கொடுப்பதற்குக் கூட ஏதும் கையில் இல்லாத அரிச்சந்திரன் தன் மனைவியையும் மகனையும் ஒரு பிராமணனுக்கு விற்றார். அதனால் கிடைத்த பணமும் தட்சிணைக்குப் போதுமானதாக இல்லாதிருந்ததால் தன்னையும் புலையர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அரசன் சுடலையில் பிணங்களை எரிப்பதற்கு உதவினார். அவரது மனைவியும் மகனும் பிராமணனின் வீட்டு வேலைக்காரர் ஆயினர். இவ்வாறு இவர்கள் மிகவும் துன்பப்பட்டனர்.

Thumb
அரிச்சந்திரரும், தரமதியும், இரவி வர்மாவின் ஓவியம்

மகன் இறப்பு

ஒரு நாள் பிராமணனின் பூசைக்காகப் பூப்பறிக்கச் சென்ற அரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவி ஏதும் அற்ற அரிச்சந்திரனின் மனைவி தனியாகத் தனது மகனின் பிணத்தையும் தூக்கிக்கொண்டு புலம்பியவளாய் மயானத்துக்குச் சென்றாள். மகனின் பிணத்தை எரிப்பதற்காகச் செலுத்த வேண்டிய வரியைக் கொடுப்பதற்குக் கூட அவளிடம் பணம் இல்லை. சுடலையில் காவல் காப்போனாக இருந்த அரிச்சந்திரனோ அவரது மனைவியோ ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. வரி செலுத்தப் பணம் இல்லையெனக் கூறக்கேட்ட அரிச்சந்திரன் கண்ணில் அவள் கழுத்திலிருந்த தாலி பட்டது. அவளைப் பார்த்து அத்தாலியை விற்று வரி கட்டுமாறு அவன் கூறினான். அவளது கணவனான அரிச்சந்திரனுடைய கண்ணுக்கு மட்டுமே அவள் அணிந்திருந்த தாலி தெரியக்கூடியது என்பதனால், காவலாளியாக இருந்தவன் அரிச்சந்திரனே என அவள் அறிந்து கொண்டாள். இதனால் அரிச்சந்திரனும் தனது மனைவியை அடையாளம் கண்டுகொண்டான்.

தேவர்கள் காட்சி கொடுத்தல்

எனினும் கடமையில் கண்ணாய் இருந்த அரிச்சந்திரன் வரி இல்லாமல் பிணத்தை எரிக்க மறுத்துவிட்டான். அவனது மனைவியிடம் ஒரேயொரு சேலை மட்டுமே இருந்தது. அதில் ஒரு பாதியைக் கிழித்துத் தனது மகனின் உடலைப் போர்த்தியிருந்தாள். மற்றப்பாதியே அவளது உடலை மூடியிருந்தது. அதனை வரியாகக் கொடுத்தால் பிணத்தை எரிக்க முடியும் என அரிச்சந்திரன் ஒப்புக்கொண்டான். அவளும் அதற்கு இணங்கிச் சேலையை அவிழ்க்க முற்பட்டபோது, விஷ்ணுவும், தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவர்கள் முன் தோன்றினர். உண்மை மீது அவன் கொண்டிருந்த உறுதிக்காக அவனைப் போற்றிய அவர்கள் அவனது மகனை உயிர்ப்பித்தனர்.

Remove ads

சுவர்க்கம் செல்லல்

அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்க பதவி கொடுத்தனர் எனினும் அதனை ஏற்க அவர்கள் மறுத்தனர். தமது குடிமக்களை விட்டுவிட்டுச் செல்வது சரியல்ல என்றும் அதனால் அவர்களையும் தன்னோடு கூட்டிச்செல்ல விரும்புவதாகவும் அரிச்சந்திரன் இறைவனிடம் வேண்டினான். ஒவ்வொருவரும் தமது வினைப்பயனுக்கு ஏற்பவே சுவர்க்கம் செல்ல முடியும் என்று அதனால் குடிமக்களை அவன் கூட்டிச் செல்ல முடியாது என்றும் தேவர்கள் கூறினர். ஆகவே தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தனது குடிகளுக்கே கொடுத்து விடுவதாகவும் அவர்களை அங்கே ஏற்றுக்கொள்ளும்படியும் அவன் வேண்டினான். தான் பூமியிலேயே தங்கிவிடவும் தீர்மானித்தான். அவனது செயலுக்காக மகிழ்ந்த இறைவன் அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்கம் அளித்தார்.

விசுவாமித்திரர், அரிச்சந்திரனது நாட்டில் புதிதாக மக்களைக் குடியேற்றி அவனது மகனை அரசனாக்கினார்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads