ஆதாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதாம் என்பவர் எபிரேய விவிலியத்தின் தொடக்க நூல் மற்றும் குரானில் இடம் பெரும் நபர் ஆவார். ஆபிரகாமிய சமயங்களின் படைப்புத் தொன்மத்தின்படி கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் இவர் ஆவார். இவரும் இவரின் மனைவி ஏவாளும் விலக்கப்பட்ட மரத்தின் கனியினை உண்டதால் ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். படைப்புவாதம் மற்றும் விவிலிய நேரடி பொருள்கொள் வாதம் (biblical literalism) உடையோர் இவரை ஒரு வரலாற்று நபர் என நம்புகின்றனர். ஆயினும் மனித இனம் முழுவதும், ஒரு மனிதனிடமிருந்து வந்தவர்கள் என்ற கருத்தை அறிவியல் சான்றுகள் ஏற்பதில்லை.[1][2][3][4][5]
விவிலியத்தில் ஆதாம் என்னும் சொல் இடப் பெயர்ச்சொலாகவும், ஒரு மனிதனையோ அல்லது மனித குலம் முழுவதையோ குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[6] விவிலியத்தில் ஆதாம் மண்ணிலிருந்து இருந்து உருவாக்கப்பட்டது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை வெளிப்படுத்துகின்றது. எபிரேய மொழியில், ஆதாமா என்றால் மண் என்றும், ஆதாம் என்றால் மண்ணால் ஆனவன் என்றும் பொருள். எனவே, ஆதாம் என்பது ஒரு காரணப்பெயர் என்பர் சிலர். ஆதாம் தனது கீழ்ப்படியாமையால் நிலத்தோடு சேர்த்து சபிக்கப்பட்டார்.[7]
Remove ads
யூத கிறிஸ்தவ நோக்கு
ஆதாமின் கதை
ஆதாமைப் பற்றியக் கதையைப் விவிலியத்தில், பழைய ஏற்பாட்டின் முதல் நூலான தொடக்க நூலில் காணலாம். இந்த எழுத்துகள் கிறிஸ்தவ மற்றும் யூத மத நம்பிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதன்படி, கடவுள் ஆதாமை, தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆதாம் உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பெயரிடுமாறு கடவுளால் அனுமதிக்கப்பட்டான். பின்பு கடவுள் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார். ஆதாம் எல்லா மனிதருக்கும் தாயானவள் என்று பொருள்படும்படி அவளுக்கு ஏவாள் எனப் பெயரிட்டான். அவர்கள் கடவுளின் கட்டளையை மீறி, அவரால் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் பறித்து உண்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள்.
ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறியவுடன் ஆதாம் வேலை செய்து ஏவாளுக்கு உணவு வழங்க வேண்டியதாயிற்று. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயின், ஆபேல், சேத் என்ற மகன்கள் பிறந்ததாகத் தொடக்க நூல் (ஆதியாகமம்) கூறுகிறது. ஆதாம் மேலும் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் விவிலியம் கூறுகின்றது. ஆதாம் 930 வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாகவும் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆதியாகமத்தில்
தேவன் (எலோஹீம்) மனிதனைப் படைத்தாரென்று ஆதியாகமப் புத்தகம்- முதல் அதிகாரம் கூறுகிறது. "அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் (எபிரேய மூல மொழியில் "ஆதாம்") என்று பேரிட்டார்..." (ஆதி 5:2). "ஆதாம்" என்பது "மனிதன்" என்ற சொல்லைப் போல் ஒரு பொதுவான பொருளைக் குறிக்கும் ஒரு வார்த்தையாகும். முழு மனித வர்க்கத்தையும் இந்த சொல் குறிக்கலாம். தேவன் அவர்களைப் "பல்கிப் பெருகும்படி" ஆசீர்வதித்து,"அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்" என்று கட்டளையிட்டார். (ஆதி 1:26, 27).
ஆதியாகமம் 2வது அதிகாரம் கூறுகிறபடி, தேவனாகிய கர்த்தர் ஆதாமை "பூமியின் மண்ணினாலே உருவாக்கி", ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதி", அவனை ஜீவாத்துமாவாக ஆக்கினார். (ஆதி 2:7). பின் தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்திலே வைத்து "நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டார்.(ஆதி 2:16,17). பின்பு தேவன் "மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" என்று கண்டார். பின்பு தேவனாகிய கர்த்தர் "வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும்", ஆதாம் அவைகளுக்குப் பேரிடும்படியாக அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அனால் அந்த மிருகங்களில் ஒன்றாகிலும் ஆதாமுக்கு "ஏற்றத் துணையாக" காணப்படவில்லை. ஆதலால் தேவன் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, விலா எலும்பை மனுஷியாக உருவாக்கினார். அவளுக்கு ஆதாம் "ஏவாள்" என்ற பெயரிட்டான்.
அதன் தொடர்ச்சியாக ஆதாமும் ஏவாளும் "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்" என்ற தேவனுடையக் கட்டளையை உடைத்தப் படியினால், தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்; சாவாமையை இழந்தார்கள். ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களின் வெளியேற்றத்திற்குப் பின், தன் உணவிற்குக் கடினமாக உழைக்க வேண்டியக் கட்டாயம் முதன்முறையாக ஆதாமிற்கு வந்தது. அவனும் ஏவாளும் அனேக பிள்ளைகளைப் பெற்றாலும், ஆபேல், காயின் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே ஆதியாகாமம் குறிப்பிடுகிறது.
கதையின் கருத்து
இஸ்ரயேல் மக்களின் கடவுளே, நாம் வாழும் பிரபஞ்சத்தையும் மனிதரையும் படைத்தவர் என்பதை வலியுறுத்துவதே இக்கதையின் நோக்கமாகும். சிலர், ஆதாம் உண்மையில் வாழ்ந்த நபர் என்று கருதினாலும் அதில் உண்மை இல்லை. இக்கதையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள்மீது எழும் சந்தேகக் கேள்விகளே இதற்கு ஆதாரம். மேலும், இக்கதை பாபிலோனியப் படைப்புக் கதையை அடிப்படையாக கொண்டு சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது. இக்கதையில் குறிப்பிடப்படும் ஏதேன் தோட்டமும் பாபிலோனையேக் குறிக்கிறது; திக்ரீசு, யூப்பிரத்தீசு ஆறுகள் அங்கேயே ஓடின. மனிதர்கள் உலகில் கடவுளின் பிரதிநிதிகள், அவர்கள் தங்களுக்குக் கடவுளால் தரப்பட்டுள்ள சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும், உலகப் பொருட்களால் மயங்கி உண்மைக் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யக்கூடாது என்னும் கருத்துகளையும் இக்கதை எடுத்துரைக்கிறது.
Remove ads
இஸ்லாம் நோக்கு
திருக்குர்ஆன் ஆதாமை[8] முதல் மனிதனாகவும், முதல் நபியாகவும், அவ்வாவின் (ஏவாளின் அரபு வடிவம்) கணவன் எனவும் குறிப்பிடுகிறது. இறைவன் தன் அற்புதம் என்னும் கரங்களால் முதல் மனிதர் ஆதமைப் படைத்தான். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். மற்ற அனைத்துப் படைப்புகளையும் அவருக்குச் சிரம்பணியுமாறு கட்டளை இட்டான். அதன்படியே வானவர்கள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஆதமுக்குச் சிரம் பணிந்தன. ஆனால் சைத்தான் (சாத்தான்) என்று கூறப்படுகின்ற இப்லீஸ் ஆதமுக்குச் சிரம் தாழ்த்தவில்லை. தவிர, நீ அவரை மண்ணிலிருந்து படைத்தாய். என்னையோ நெருப்பிலிருந்து படைத்தாய். நான் அவருக்குச் சிரம் பணிவதா என்றும், நான்தான் பெரியவன் என்றும் ஆணவம் கொண்டான்.[9] அதனால் இறைவனின் வெறுப்பால் பூமிக்கு விரட்டியடிக்கப்பட்டான். பிறகு இறைவன் ஆதமுடைய விலா எலும்பிலிருந்து அவருக்கு ஹவ்வாவைப் படைத்தான். ஆதமே இந்த சுவர்க்கத்தில் எதை வேண்டுமானாலும் உண்ணுங்கள். ஆனால் அந்த மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் இருவரும் அந்த மரத்தின் பழத்தைச் சைத்தானின் அறிவுறுத்தலுக்கிணங்கிச் சுவைத்து இறைவனின் கட்டளையை மீறினர். அதனால் அவர்கள் இருவரும் பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தாம் செய்த பாவத்திற்காக இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். அவர்களுக்கு ஹாபில், காபில் என்ற இரு மகன்களும் அவர்களின் இரட்டைச் சகோதரிகளும் இருந்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads