ஆவியாதல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரவங்களின் மேற்பரப்பிலிருந்து அத்திரவம் வாயு நிலையை அடைதல் ஆவியாதல் எனப்படும். திரவம் வாயுவாகும் செயற்பாடான கொதித்தலிலிருந்து இது மாறுபட்டது. கொதித்தல் என்பது முழுத்திரவமும் ஒன்றாக தமது கொதிநிலை வெப்பநிலையை அடைந்தவுடன் வாயு நிலைக்கு மாறுதல் ஆகும். கொதித்தலுக்கு கொதிநிலை அவசியமானாலும் ஆவியாதலுக்கு அது தேவையில்லை.

ஆவியாதலானது நீர்வட்டத்தின் ஓர் அவசியக் காரணியாகும். தேவையானளவு இயக்கசக்தியை மேற்பரப்பிலுள்ள துணிக்கைகள் அடையும் போது அவை திரவ நிலையிலிருந்து வாயு நிலையை அடையும். நீர் நேரடியாக ஆவியாகிப் போவதைப் போன்று தாவரங்கள் மூலமும் ஒருவித நீராவிப் போக்கு ஏற்படுகிறது. தாவரங்கள் வேர்மூலம் நீரை உறிஞ்சி தண்டுக்கும் இலைகளுக்கும் அனுப்புகின்றன. இலைகளில் உள்ள சிறுசிறு துளைகள் மூலம் ஆவியாகிறது. இவ்வாறு உருவாகும் ஆவி மேல் நோக்கிச் சென்று மேகமாக உருமாறி வானில் மிதந்து கொண்டிருக்கும். அவற்றின் மீது குளிர்காற்றுப்பட்டவுடன் மீண்டும் நீர்த் திவலைகளாக மாறி மழையாகப் பெய்கிறது. இவ்வாறு நீர் ஆவியாகி மேகமாதலும் மேகமே குளிர்காற்றின் விளைவால் மழையாகப் பெய்வதும் சங்கிலித் தொடர் போன்ற நீர்வட்டத்தின் இயற்கை நிகழ்வுகளாகும். பெய்யும் மழையில் மூன்றில் இரண்டு பங்கு நீராவியாக மீண்டும் காற்று மண்டலத்துக்குத் திரும்பி மேகமாகிறது.
நீராவியை அழுத்துவதன் மூலம் விசையை உருவாக்கி நீராவி எந்திரங்களை இயக்குகிறார்கள். நீராவி அழுத்த விசை மூலம் தொடருந்து எஞ்சின்களும் நீராவிக் கப்பல் எஞ்சின்களும் இயங்குகின்றன.
நீரை ஆவியாக்கிப் பயன்படுத்துவது போன்றே பாதரசம், சோடியம் போன்றவைகளை ஆவியாக்கி குறைந்த அழுத்தத்தில் கண்ணாடிக் குழாயுள் செலுத்தி அளவான மின்போக்கை ஏற்படுத்தி ஒளிரச் செய்யப்படுகிறது. இவ்வொளிர்வு மூலம் நல்ல வெளிச்சத்தைப் பெற முடிகிறது. இத்தகைய விளக்குகள் ஆவி விளக்குகள் (Vapour Lamp) என அழைக்கப்படுகிறது. இத்தகைய விளக்குகளில் சோடியம் ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு, வெண்சுடர் விளக்கு, நியான்சுடர் விளக்கு ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.[1]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads