இந்தியாவில் பெண் சிசுக்கொலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெண் சிசுக்கொலை என்பது கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவில் இருக்கும் காலத்திலோ அல்லது பிறந்த பின்போ கொன்றொழிப்பதை பொதுவாகக் குறிக்கும். பிறந்தது முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தை சிசு என அழைக்கப்படுகிறது. கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பெண் கருக்கொலை எனவும், பிறந்த பின் கொல்வது சிசுக் கொலை எனவும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கிராமம் மற்றும் நகரம் என வேறுபாடின்றி இச்செயல் நடைபெறுகின்றது. ஆயினும் கிராமப்புறங்களில் இச்செயல் அதிகமாக நடைபெறுவதாகக் கருதப்படுகிறது. இச்செயலை உள்ளூர் கிராம மருத்துவச்சி என அழைக்கப்படுவோர் அல்லது அக்குடும்ப உறுப்பினர்களுள் தந்தை அல்லது தந்தை வழி தாத்தாவால் நிகழ்த்தப்படுகிறது. நகரப்பகுதிகளில் கதிரியக்க மின்னணுக் கருவிகள் மூலம் கருவில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என அறிந்து அதனைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயல் மருத்துவ மனைகளில் நன்கு படித்த மருத்துவரால் நிகழ்த்தப்படுகிறது. இந்தியா பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாகக் கருதப்படுகிறது.[1] இந்தியாவில் பெண் சிசுக்களில் இறப்பு விகிதம் ஆண் சிசுவின் இறப்பு விதத்தை விட 75 விழுக்காடு அதிகமுள்ளது. இது போன்ற பெண் சிசுக்கொலையினால் உலகெங்கும் ஆண் பெண் விகிதத்தில் ஏற்றத்தாழ்வான நிலை நிலவுகிறது. வளரும் நாடுகளில் இது மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஏறத்தாழ சமமாக இருக்கவேண்டிய பிறப்பு இறப்பு விகிதத்தில், அதிகரித்துவரும் பெண்கருக்கொலை, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும். மேலும் குழந்தைகளும் பெண்களும் வன் புணர்ச்சிக்கு உள்ளாவர். ஒரு பெண்ணைப் பலர் மனைவியாகப் பங்கிட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளன. இச்சூழல் ஏற்படின் அது சமுதாயப் பண்பாட்டினை, மதிப்பினைப் படிப்படியாகக் குறைத்து நெருக்கடி நிலையை ஏற்படுத்தலாம்.[2]
Remove ads
காரணங்கள்
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் விரும்பப்படுவதாலும், பெண் குழந்தைகளை மதிக்காத காரணத்தாலும், பெண் குழந்தைகளைப் பெறுதல் செலவினம் எனவும் கருதப்படுவதாலும் பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது. பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகமாகப் போற்றும் கலாச்சாரமுடைய சமுதாயத்தில் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மனநிலை ஏழை, செல்வந்தர் என்ற இருநிலைகளிலும் நிலவுகிறது. இதற்கு சமூக விதிகளும், மக்களின் கலாச்சார நம்பிக்கைகளும் பெருமளவு காரணமாகின்றன. இந்திய நாட்டில் பெண் குழந்தைகளை விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்காத நிலைக்குச் சமுதாயப் பொருளாதாரக் காரணங்களைக் கூறலாம். இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்
- பொருளாதாரப் பயன்பாடு,
- சமுதாய கலாச்சாரப் பயன்பாடு
- மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கு
ஆகியனவற்றை மிக முக்கியக் காரணங்களாகக் கூறுகின்றன.
Remove ads
பெண் சிசுக்கொலை குறித்த சில உண்மைகள்
சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் சமூக மற்றும் பொருளாதாரத்துறை (United Nations Department of Economic and Social Affairs ( UN-DESA) வெளியிட்ட ஒரு அறிக்கையில் நாற்பது வருடங்களாகவே நூற்று ஐம்பது நாடுகளில் இரண்டு நாடுகளைத் தவிர பெண் குழந்தைகள் இறப்புவிகிதம் குறைவான அளவிலேயே உள்ளது. பெண் சிசு இறப்பு விகிதம் அதிகமுள்ள நாடுகளுள் இந்தியாவும் சீனாவும் மற்ற நாடுகளை விஞ்சி நிற்கின்றன. உலகளவில் 122 சிசு மரணங்களில் 100 பெண் சிசுவாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் சீனாவில் 100 சிசு மரணங்களில் 70 பெண் சிசுவாக உள்ளன.[3] அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்திய நாட்டில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் தொடர்ந்த பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 93க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads