இனிமைமிகு பாடல் (நூல்)

திருவிவிலிய நூல் From Wikipedia, the free encyclopedia

இனிமைமிகு பாடல் (நூல்)
Remove ads

இனிமைமிகு பாடல் (Song of Songs/Canticle of Canticles) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]

Thumb
இனிமைமிகு பாடல் விவிலிய எழுத்தோவியம்: தலைவனும் தலைவியும். காலம்: 12ஆம் நூற்றாண்டு. காப்பகம்: இங்கிலாந்து.

இனிமைமிகு பாடல் நூல் பெயர்

இனிமைமிகு பாடல் என்னும் நூல் ஒரு காதல் கவிதைத் தொகுப்பு ஆகும். மூல மொழியாகிய எபிரேயத்தில் இந்நூல் שיר השירים (Shir ha-Shirim) என்னும் பெயர் கொண்டுள்ளது. இதற்கு "சாலமோனின் பாடல்" என்றொரு பெயரும் உண்டு. கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூல் ᾎσμα ᾀσμάτων (Āisma āismatōn = Song of Songs) என்று அழைக்கப்படுகிறது. Canticum Canticorum என்று இலத்தீன் பெயர் அமைந்ததால், ஆங்கிலப் பெயர்ப்பு "Canticle of Canticles" என்றும் வரும்.

பழைய தமிழ் பெயர்ப்பில் இந்நூல் உன்னத சங்கீதம் (உன்னதப் பாட்டு) என்று அழைக்கப்பட்டது.

Remove ads

நூலாசிரியரும் நூல் தோன்றிய காலமும்

இனிமைமிகு பாடல் என்னும் விவிலிய நூலின் தொடக்கத்தில் சாலமோனின் தலைசிறந்த பாடல் என்னும் கூற்று உள்ளது. இதன் அடிப்படையில் இந்நூல் சாலமோன் அரசரால் உருவாக்கப்பட்டது என்று யூத மரபு கருதுகிறது.

இது சாலமோனால் எழுதப்பட்டதல்ல என்று கூறுவோரும் உண்டு. அவர்கள் கருத்துப்படி, சாலமோனின் தலைசிறந்த பாடல் என்பது சாலமோனின் [பெயரால் எழுதப்பட்ட] தலைசிறந்த பாடல் என்று விளக்கப்படுகிறது. தலைவன் தலைவியைப் பார்த்து, பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம்....எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உள்ளது (8:11-12) என்று கூறுவதின் அடிப்படையில் நூலாசிரியர் சாலமோன் அல்லர் என்பர். மேலும், சாலமோன் மன்னர் பல மனைவியரையும் துணை மனைவியரையும் கொண்டிருந்தார்; இந்நூலில் வரும் கதைத் தலைவனும் தலைவியும் ஒருவர் ஒருவரைத் தவிர வேறு யாரையும் நாடவில்லை. எனவே இந்நூல் சாலமோனை இடித்துரைக்கும் பாணியில் உள்ளதாக விளக்குவோரும் உண்டு.

பழங்கால எபிரேய மொழியில் கி.மு. 900 ஆண்டளவில் இந்நூலின் பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். நூலின் ஆசிரியர் தலைசிறந்த கவிஞர். எதுகை மோனை உத்திகளையும், எழில்மிகு உவமைகளையும் பயன்படுத்தி இக்கவிதைத் தொகுப்பை உயிரோட்டத்தோடு படைத்துள்ளார். அவருடைய கற்பனை வளமும் மென்மைபொருந்திய சொற்பயன்பாடும் பாராட்டும் வகையில் உள்ளன.

ஒருசில சொற்களும் சொற்றொடர்களும் பிற்கால வழக்கைச் சார்ந்தவை என்பதால் பாடல்களை ஒருங்கிணைத்து தொகுத்த காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.

Remove ads

காதல் கவிதையா, கடவுள் பாடலா?

இந்நூலின் பாடல்களுக்குப் பல்வேறு பொருள்பொருத்தம் தருகின்றனர் விரிவுரையாளர்கள். அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

  • நூலின் பாடல்கள் கடவுளுக்கும் இசுரயேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணிக்கின்றன.
  • பாலசுத்தீன நாடு மக்கள் நடுவில் திருமணத்தின்போது பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பே இந்நூல்.
  • ஆண்-பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும் இயல்பான காதலுணர்வை இருவரும் ஒருவர்க்கொருவர் வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது கூற்றுக்கள் அடங்கியதே இந்நூல்.

மேற்கூறிய மூன்று விளக்கங்களில் இறுதியாகத் தரப்பட்டதே ஏற்புடையது என்பது பெரும்பாலான அறிஞர் கருத்து.

காதலுணர்வு புனிதமானது; இயற்கையின் அன்பளிப்பு; கடவுளின் கொடை; இதனை விவிலியம் ஏற்கிறது. இந்நூலில் கடவுளின் பெயர் ஒருமுறைகூட வரவில்லை. எனினும், இறை ஏவுதல் பெற்ற திருமறை நூலாகிய விவிலியத்தில் இந்நூலும் இடம்பெறுதல் வியப்பன்று.

ஆண்-பெண் காதலுணர்வும் காதலுறவும் கடவுளின் அன்புக்கு ஓர் உயர்ந்த அடையாளம். தமிழ் இலக்கியத்தில் இதை நாம் காணலாம். ஆண்டாள் அருளிய திருப்பாவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

யூத மரபில் இனிமைமிகு பாடல் கடவுளுக்கும் இசுரயேல் மக்களுக்கும் இடையே நிலவும் ஆழ்ந்த அன்பை (காதலுறவை) வெளிப்படுத்தும் உருவகத் தொகுப்பாக விளக்கம் பெறுகிறது.

கிறித்தவ மரபிலும், கடவுளுக்கும் மனித உள்ளுயிராகிய ஆன்மாவுக்கும் இடையே நிலவுகின்ற அன்புறவை இந்நூல் விளக்குகின்றது என்னும் கருத்து உண்டு. மேலும், இயேசு கிறிஸ்து தம்மையே அன்புக் காணிக்கையாகத் தம் திருச்சபைக்குக் கையளிக்கின்றார் என்னும் ஆழ்ந்த உண்மை இந்நூலில் அடங்கியுள்ளது என்று ஞானியர் விளக்கம் தந்துள்ளனர்.

இனிமைமிகு பாடலும் அகத்திணை இலக்கியமும்

தமிழ் மரபில் அகத்திணை என்னும் இலக்கிய வகை தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிலவும் காதலுணர்வையும் காதலுறவையும் விளக்குவதாக அமைந்துள்ளது. திருக்குறளில் வரும் காமத்துப்பால், மற்றும் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலியவை இவ்வகை சார்ந்த சீரிய படைப்புகள் ஆகும். இனிமைமிகு பாடலையும் தமிழ் அகத்திணை இலக்கியத்தையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது முனைவர் ஆபிரகாம் மரியசெல்வம் எழுதிய ஆய்வுநூல் ஆகும். (காண்க: இனிமைமிகு பாடலும் அகத்திணை இலக்கியமும்).

ஆடுகளை மேய்த்தல், பழத்தோட்டங்களை அமைத்தல், பழம் கொய்தல் போன்ற யூத நாட்டுத் தொழில்கள் இனிமைமிகு பாடலில் குறிப்பிடப்படுகின்றன.

"என் காதலரே, வாரும்;....
வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்;
திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா,
அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா,
மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம்.
அங்கே உம்மேல் என் காதலைப் பொழிவேன்." (இனிமைமிகு பாடல் 7:11-12)

தமிழ் இலக்கிய அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள்கள் பல காட்சியளிப்பது போல, இனிமைமிகு பாடல் நூலிலும் யூதர் நாட்டைச் சார்ந்த மரம் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள் ஆகியவை பல உவமைகளிலும் தலைவன் தலைவியர் எதிர்ப்படும் இடத்துச் சூழ்நிலையில் புனைந்துரைகளிலும் குறிப்பிடப்படுகின்றன.

இளவேனிற் காலத்துக் காட்சிகள் கீழ்வருமாறு புனையப்படுகின்றன:

"என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:
'விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.
இதோ, கார்காலம் கடந்துவிட்டது;
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;
காட்டுப் புறா கூவும் குரலதுவோ
நாட்டினில் நமக்குக் கேட்கின்றது.
அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;
திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;
விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.'" (இனிமைமிகு பாடல் 2:10-13)

Remove ads

இனிமைமிகு பாடல் நூலின் உட்பிரிவுகள்

மேலதிகத் தகவல்கள் பொருளடக்கம், அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை ...
Remove ads

மேலும் காண்க

விக்கிமூலத்தில் இனிமைமிகு பாடல் நூல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads