இரண்டாம் அலாவுதீன் முகம்மது

குவாரசமியப் பேரரசின் ஷா From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் அலாவுதீன் முகம்மது
Remove ads

இரண்டாம் அலாவுதீன் முகம்மது என்பவர் 1200 முதல் 1220 வரை குவாரசமியப் பேரரசின் ஷாவாகப் பதவி வகித்தவர். இவருக்கு இரண்டாம் அலெக்சாண்டர் என்ற பட்டமும் இருந்தது.[1] இவரது முன்னோர் குவாரசமியா என்ற சிறிய மாகாணம் ஒன்றின் அரசுப் பிரதிநிதியாகப் பதவி வகித்த ஒரு துருக்கிய அடிமை ஆவார். இவர் மங்கோலியர்களை குவாரசமியாவின் மீது படையெடுக்கத் தூண்டியதற்காக அறியப்படுகிறார். இதனால் இவரது பேரரசு முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் இரண்டாம் முகம்மது, குவாரசமியப் பேரரசின் ஷா ...
Remove ads

ஆட்சி

இவரது தந்தை டெகிஷ் இறந்த பிறகு முகம்மது ஆட்சிக்கு வந்தார். எனினும் இவர் ஆட்சிக்கு வந்த உடனேயே கவுரி அரசமரபைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களான கியாசுதீன் கவுரி மற்றும் முயிசல்தீன் ஆகியோர் இவரது ஆட்சி பகுதிகள் மீது படையெடுத்தனர். சில வாரங்களிலேயே இரண்டு சகோதரர்களும் தங்களது இராணுவங்களை மேற்கு நோக்கி குராசான் பகுதிக்கு நகர்த்தினர். அவர்கள் நிஷாபூரை கைப்பற்றிய பிறகு ரே நகரை நோக்கி முயிசல்தீன் பயணம் மேற்கொண்டார். ஆனால் இவர் தன்னுடைய துருப்புகளை கட்டுப்பாட்டை மீறி போகச் செய்தார். குர்கனைத் தாண்டி சிறிது தூரத்திற்கு பயணம் செய்தார். இதன் காரணமாக தனது சகோதரர் கியாசுதீனால் கடிந்து கொள்ளப்பட்டார். நூல்களில் பதிவிடப்பட்டுள்ளதன்படி இது ஒன்றே இரு சகோதரர்களுக்கும் இடையே நடந்த வாக்கு வாதம் ஆகும்.[2][3]

சில மாதங்கள் உடல்நலக்குறைவு பிறகு கி.பி. 1202 இல் கியாசுதீன் ஹெராத் நகரத்தில் இறந்தார். இரண்டாம் முகம்மது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கவுரி பேரரசின் ஆட்சிப் பகுதிகள் மீது படையெடுத்தார். ஹெராத் நகரை முற்றுகை இட்டார். எனினும் முயிசல்தீன் இவரை ஹெராத்தில் இருந்து வெளியேற்றினார். அவரை பின்தொடர்ந்து சென்றார். அவரது தலைநகரான குர்கஞ்சை முற்றுகையிட்டார். முகம்மது உடனேயே காரா கிதை கானேட்டிடம் இருந்து ராணுவ உதவியை கோரினார். அவர்கள் முகம்மதுவின் உதவிக்காக ஒரு ராணுவத்தை அனுப்பி வைத்தனர். காரா கிதை காரர்களிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாக முயிசல்தீன் முற்றுகையை கைவிட்டு விட்டு பின்வாங்கினார். எனினும் குரில் இருந்த தனது ஆட்சி பகுதிகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த அவர் 1204 இல் அங்குட் எனுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டார்.[4][5] 1206 இல் முயிசல்தீன் கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக கவுரி பேரரசில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இந்த உள்நாட்டுப் போரில் கியாத் அல்-தின் மஹ்முத் வெற்றி பெற்றார்.

எனினும் கியாத்தின் துருக்கிய தளபதி தஜுத்தீன் இல்டோஸ், பாமியானை ஆண்ட கவுரி ஆட்சியாளர்களிடமிருந்து கஜினியை கைப்பற்றினான். கியாத்தின் அதிகாரத்தை ஒப்புக்கொண்டான். தஜுத்தீன் கஜினியை ஆள்வதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் தனது குர் பகுதியை பாதுகாப்பின்றி விட்டுச் செல்ல மனம் இல்லாமலும் இருந்த கியாத், இரண்டாம் முகம்மதுவின் உதவியை கோரினார். ஆனால் இரண்டாம் முகம்மது கியாத்தின் ஆட்சி பகுதிகள் மீது படையெடுத்தார். பால்க் மற்றும் திர்மித் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்.[6] எனினும் இந்தப் படையெடுப்பின்போது முகம்மது, காரா கிதை கானேட்டால் கைது செய்யப்பட்டார். பதின்மூன்று மாதங்களுக்குப் பிறகு முகம்மது விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் கியாத்தின் பகுதிகள் மீது படையெடுத்தார். ஹெராத்தை கைப்பற்றினார். முகம்மது பிறகு கவுரி பேரரசின் இதயப் பகுதியான குர் மீது படையெடுத்தார். கியாத்தை கைது செய்தார். கியாத் பிறகு முகம்மதுவின் அதிகாரத்தை ஒப்புக்கொண்டார்.

இரண்டாம் முகம்மது பிறகு காரா கிதையிடம் இருந்து சமர்கண்ட் நகரத்தை 1207 இல் கைப்பற்றினார். 1208 இல் சமர்கண்ட்டை காராகானிட்கள் கைப்பற்றினர். முகம்மது பவன்டிட்களிடமிருந்து 1210 இல் தபரிஸ்தானையும் மேற்கு காராகானிட்களிடம் இருந்து திரான்சோக்சியானாவையும் கைப்பற்றினார். முகம்மது பேரரசினை விரிவாக்கம் செய்யும் கொள்கைகளைப் பின்பற்றினார். மேற்கு காராகானிட்களிடம் இருந்து தாஷ்கண்ட் மற்றும் பெர்கானா பகுதிகளையும் கவுரி அரசமரபிடம் இருந்து மக்ரான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களையும் கைப்பற்றினார். 1211 இல் அசர்பைஜானின் அடாபெக்குகள் இவருக்கு கப்பம் கட்டுபவர்களாக மாறினர். முகம்மது கடைசியாக 1212 இல் மேற்கு காராகானிட்களையும் 1215 இல் கவுரி அரசமரபையும் வென்று அவர்களது எஞ்சிய பகுதிகளை தன்னுடைய பேரரசுடன் இணைத்துக் கொண்டார். 1212 இல் சமர்கண்ட் நகரத்தவர் புரட்சி செய்து அங்கு வாழ்ந்த குவாரசமியர்கள் 8,000–10,000 பேரை கொன்றனர். இதற்கு பதிலடியாக முகம்மது அந்நகரை முற்றுகையிட்டு சமர்கண்ட் நகர குடிமக்கள் 10,000 பேரைக் கொன்றார் .[7]

1217 இல் முகம்மது, சிர் தர்யா ஆற்றிலிருந்து பாரசீக வளைகுடா வரை இருந்த அனைத்து நிலப் பகுதிகளையும் கைப்பற்றினார். தன்னை ஷா என்று அறிவித்துக்கொண்டார். பாக்தாத்தில் இருந்த கலீப்பிடம் தன்னை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்குமாறு கூறினார். கலீப் அன்-நசீர் இதை நிராகரித்த போது முகம்மது ராணுவத்தை திரட்டிக் கொண்டு அன்-நசீரை பதவி இறக்குவதற்காக பாக்தாத்தை நோக்கி அணிவகுத்தார். எனினும் சக்ரோஸ் மலைகளை கடந்த பொழுது ஷாவின் ராணுவம் ஒரு பனிப் புயலில் சிக்கிக் கொண்டது.[8] ஆயிரக்கணக்கான படை வீரர்கள் இறந்தனர். ராணுவம் அழிவைச் சந்தித்ததன் காரணமாக நாடு திரும்புவதை தவிர தளபதிகளுக்கு வேறு வழி தெரியவில்லை.

Remove ads

வீழ்ச்சி

1218 இல் தங்களிடம் இருந்து தப்பித்து ஓடிய ஒரு எதிரி தளபதியை துரத்திக்கொண்டு ஒரு சிறிய மங்கோலிய படையானது எல்லையைக் கடந்தது. அந்த தளபதியை பிடித்த பிறகு செங்கிஸ்கான் ஷாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். பிற்காலத்தில் சீனா என்று அழைக்கப்படும் நாட்டின் மூன்றில் இரு பங்கு பகுதிகளை அப்பொழுது தான் செங்கிஸ்கான் கைப்பற்றியிருந்தார். செங்கிஸ்கான் வணிகத் தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆனால் மங்கோலியர்களைப்பற்றி மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை அறிந்து இருந்த ஷா இந்த வணிக தொடர்பு முயற்சிகள் அனைத்தையும் தனது நிலப் பகுதிகளை கைப்பற்ற நடக்கும் ஒரு சூழ்ச்சியாக கருதினார். வணிகத் தொடர்பு ஏற்படுத்த செங்கிஸ்கான் குவாரசமியாவுக்கு தனது தூதர்களை அனுப்பினார். ஆனால் எவ்வளவு பேர் அனுப்பப்பட்டனர் என்பதில் வரலாற்றாளர்கள் வேறுபடுகின்றனர். ஒரு பதிவின் படி ஒரு மங்கோலியர் தலைமையில் 100 முஸ்லிம் வணிகர்கள் அனுப்பப்பட்டனர். மற்றொரு பதிவின்படி 450 பேர் அனுப்பப்பட்டனர். ஷா தனது ஆளுநர் ஒருவரின் மூலம் அந்த வணிகக் குழுவை வேவு பார்க்க வந்ததாக கூறி அவர்களது விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றி அந்த வணிகர்களை கைது செய்கிறார்.

Thumb
குவாரசமியாவின் இரண்டாவது முகம்மதுவின் இறப்பு. ரஷித்-அல்-தின் ஹமாதனியின் ஜமி அல்-தவரிக் நூலில் இருந்து

அரசியல் ரீதியாக இந்த நிகழ்வை அணுக நினைத்த செங்கிஸ்கான், ஆளுநரின் அனைத்து தவறுகளையும் அறிந்து அவரை தண்டனைக்காக மங்கோலியர்களிடம் ஒப்படைப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக மீண்டும் மூன்று தூதர்களை ஷாவிடம் அனுப்பினார். ஷா தூதுவர்களை கொன்றார். மீண்டும் பல்வேறு நூல்களின் படி ஒரு தூதுவர் மட்டும் கொல்லப்பட்டார். மற்ற ஆதாரங்களின் படி 3 தூதுவர்களும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வுகள் செங்கிஸ்கான் 1,00,000 முதல் 1,50,000 வீரர்களை கொண்ட படையுடன் சிர் தர்யா ஆற்றை 1219 இல் கடந்து சமர்கண்ட், புகாரா, ஒற்றார் மற்றும் பிற நகரங்களை முற்றுகையிடுவதற்கு காரணமாயின. முகம்மதுவின் தலைநகரமான ஊர்கெஞ்சிற்கும் இதே நிலை தான் நிகழ்ந்தது.

மங்கோலிய தரப்படி எடுத்துக் கொண்டாலும் செங்கிஸ்கானின் பழிவாங்கலானது மிருகத்தனமாக இருந்தது. குவாரசமிய நகரங்களின் முற்றிலுமான அழிவு, எண்ணிலடங்காத வரலாற்று பொருட்கள் மற்றும் நூல்களின் அழிவு, மற்றும் விவாதத்திற்குரிய வகையில் இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டு வரை உலகத்தில் நடந்திராத ரத்தம் தோய்ந்த படுகொலைகள் ஆகியவை செங்கிஸ்கானின் இந்த படையெடுப்பால் நிகழ்ந்தன.

Remove ads

இறப்பு

அலாவுதீன் முகம்மது தப்பி ஓடினார். குராசான் பகுதி முழுவதும் தஞ்சமடைய முயற்சித்தார். எனினும் சில வாரங்களுக்கு பிறகு அவர் அபஸ்குன் துறைமுகத்திற்கு அருகே காசுப்பியன் கடலில் உள்ள ஒரு தீவில் நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்.

உசாத்துணை

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads