உப்பு

உணவில் பயன்படுத்தப்படும் கனிமம் From Wikipedia, the free encyclopedia

உப்பு
Remove ads

உப்பு (Salt) என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமமும், விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு "NaCl" என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். இயற்கையில் படிகக் கமிமமாகத் தோன்றும் இவ்வுப்பு பாறை உப்பு என்றும் ஆலைட்டு என்றும் அறியப்படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால்,சமையல் உப்பு தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது ஆகும்.

Thumb
உப்பு
Thumb
பொலிவியாவில் உப்பு மலைகள்

மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும்.பொதுவாக உப்பு உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். விலங்குகளின் திசுக்கள் தாவர திசுக்களை விட அதிகமான உப்பைக் கொண்டுள்ளன. உப்பு என்பது பழமையான மற்றும் எங்கும் நிறைந்த உணவுகள் ஒன்றாகும், மற்றும் உப்பேற்றம் என்பது உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும்.

சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் பழக்கம் மக்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. உருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர். சீனாவிலும் இதே காலகட்டத்தில் உப்பு-உற்பத்திப் பணிகள் நிகழ்ந்திருக்கின்றன. பண்டைய எபிரெயர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வணிகத்தில் உப்பு முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. மத்தியதரைக் கடல் முழுவதும் படகு மூலம் சிறப்பாக கட்டப்பட்ட உப்பு சாலைகளிலும், மற்றும் ஒட்டக வணிகர்கள் மூலம் சகாரா முழுவதற்கும் உப்பு கொண்டு செல்லப்பட்டது. உப்புக்கான பற்றாக்குறை மற்றும் உலகளாவிய தேவையை முன்னிட்டு நாடுகளுக்கு எதிராக போர்கள் நடைபெற்றன. உப்பின் மீதான வரி வருவாய் உயர்த்தப்பட்டது. மத விழாக்களிலும் பிற கலாச்சார நிகழ்வுகளிலும் உப்பு முக்கியத்துவத்தைப் பெற்றது.

உப்பு சுரங்கங்களிலிருந்து உப்பு தோண்டி எடுக்கப்படுகிறது. அல்லது கடல்நீரை ஆவியாக்கி உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. எரி சோடாவும் குளோரினும் இதன் முக்கிய தொழில்துறை தயாரிப்புகள் ஆகும். மேலும் பாலிவினால் குளோரைடு, நெகிழிகள், காகித கூழ் மற்றும் பல பிற பொருட்கள் தயாரிக்க இது உதவுகிறது. ஆண்டுக்கு சுமார் இருநூறு மில்லியன் டன் உப்பின் உலகளாவிய உற்பத்தியில், சுமார் 6% உப்பே மனித நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. நீர் சீரமைப்பு நடவடிக்கைகள், விவசாய பயன்பாடு போன்ற பிற செயல்பாடுகளுக்கு எஞ்சிய உப்பு பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்கக இது கடல் உப்பு மற்றும் மேசை உப்பு என்ற வடிவங்களில் விற்கப்படுகிறது, உடலில் அயோடின் குறைபாட்டை நீக்க அயோடின்சேர்த்த உப்பு சமையலில் பயன்படுத்தப்படுகிறது. உணவைப் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.

மின்பகுளி மற்றும் சவ்வூடுபரவலுக்குரிய கரைபொருள் போன்ற தன்மைகளால் சோடியம் மனித ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகிறதுஅதிகப்படியான உப்பு நுகர்வு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்றவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்கச் செய்கிறது. உப்பின் சுகாதார விளைவுகளை நீண்ட ஆய்வுகள் செய்த பல உலக சுகாதார அமைப்புகள் மற்றும் வல்லுநர்கள் உப்பு உணவுகளின் நுகர்வை குழந்தைகளும் பெரியவர்களும் குறைக்க வேண்டுமென பரிந்துரைக்கின்றனர் பெரியவர்கள் 2,000 மி.கி. அதாவது 5 கிராம் சோடியத்துக்கும் குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது[1].

Remove ads

வரலாறு

Thumb
உப்பு உற்பத்தி (1670)

இற்றைக்கு நூறுவருடங்களுக்கு மக்கள் உணவைப் பதப்படுத்த, நீண்ட காலம் பாதுகாக்க, போத்தலில் அடைத்தல், செயற்கையாக குளிரூட்டுதல் போன்ற செயற்பாடுகளைக் கையாண்டாலும் உப்பு ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மக்களுக்கு உணவைப் பாதுகாக்க குறிப்பாக இறைச்சியைப் பாதுகாக்க உதவியிருக்கிறது.[2] சீனாவின் யான்செங்கிற்கு அருகில் அமைந்துள்ள சியெச்சி குளத்தில் உப்பு கிறித்துவுக்கு முன்னர் சுமார் 6000 வருடங்களுக்கு முன்னரே அகழப்பட்டதாக கருதப்படுகிறது. இது உலகின் பழமையான உப்பகழும் இடமாகக் கருதப்படுகிறது.[3]

தாவரங்களில் இருப்பதைவிட அதிகமான உப்பு விலங்குப் பகுதிகளான இறைச்சி அவற்றின் இரத்தம் மற்றும் பாலில் காணப்படுகிறது.

முற்கால உரோம சாம்ராச்சியத்தில் சலரியா போன்ற வீதிகள் ஒசுடியா உப்பளங்களிலிருந்து உப்பை தலைநகரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டது.[4]

டோவாரேக் மக்கள் பாரம்பரியமாக சகாராப் பாலைவனம் ஊடான பாதைகளை அசாலை இலிருந்து உப்பை கொண்டுசெல்ல பயன்படுத்தினர். தற்போது இங்கு கனரக வாகனங்கள் மூலமே அதிகமான வர்த்தகங்கள் இடம்பெறுகின்றன.

உப்புக்காக போர்களும் இடம்பெற்றுள்ளன. வெனிஸ் ஜெனோவாவுடன் மோதி வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இது அமெரிக்க புரட்சியிலும் கூட முக்கிய இடம் வகித்தது. பிரித்தானியர் காலத்தில் இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த உப்புவரியை நீக்கக் கோரி 1930ம் ஆண்டில் மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார்.[5]

Remove ads

உப்பின் வேதியியல்

பெரும்பாலும் உப்பு என்று சொல்லப்படுவது சோடியம் குளோரைடு என்ற வேதிச்சேர்மத்தையே ஆகும். இந்த அயனிச் சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு NaCl. சோடியமும் குளோரினும் சம அளவில் கலந்து சோடியம் குளோரைடு உருவாகியிருப்பதை இச்சமன்பாடு காட்டுகிறது. வரலாற்றுக்கு முந்தைய கடல் உப்புகளிலும், புதியதாக உருவாக்கப்படும் உப்புகளிலும் அரிய தனிமங்கள் சிறிய அளவில் காணப்பட்டன. இத்தகைய உப்புகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கின்றன. தோண்டியெடுக்கப்படும் உப்பு மேசை உப்பு தயாரிப்பதற்காக சுத்திகரிக்கப்படுகிறது. தண்ணீரில் கரைக்கப்படும் இவ்வுப்பு கரைசலாக்கப்பட்டு இதிலிருந்து பிற கனிமங்கள் வடிகட்டல் முறையில் நீக்கப்படுகின்றன. பின்னர் மீள ஆவியாக்கப்படுகின்றன. இச்செயல்முறையின் போது உப்புடன் அயோடினேற்றம் செய்யப்படுகிறது. உப்புப் படிகங்கள் ஒளி ஊடுறுவும் தன்மையும் கனசதுர வடிவம் கொண்டும் காணப்படுகின்றன, தூய்மையான உப்பு வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. ஆனால் மாசுக்கள் சேர்ந்தால் இவ்வுப்பு நீலம் அல்லது பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.

உப்பின் மோலார் நிறை 58.443 கி/மோல், உருகுநிலை 801° செல்சியசு வெப்பநிலை மற்றும் கொதிநிலை 1,465 °செல்சியசு வெப்பநிலை ஆகும் (2,669 °F). உப்பின் அடர்த்தி கனசென்டிமீட்டருக்கு 2.17 கிராம்கள் ஆகும். இது நீரில் நன்றாகக் கரைகிறது. அவ்வாறு கரையும் போது Na+ மற்றும் Cl− அயனிகளாக உப்பு பிரிகிறது. மேலும் உப்பின் கரைதிறன் லிட்டருக்கு 359 கிராம்கள் என அளவிடப்பட்டுள்ளது. குளிர் கரைசல்களில் உப்பு இருநீரேற்றாக (NaCl•2H2O) படிகமாகிறது[6]. சோடியம் குளோரைடின் கரைசல்கள் தூய்மையான நீரிலிருந்து மாறுபட்டு வெவ்வேறு மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கின்றன. 23.31 எடை சதவீத உப்பின் உறைநிலை −21.12 °செல்சியசு, வெப்பநிலை என்றும் நிறைவுற்ற உப்பு கரைசலின் கொதிநிலை சுமாராக 108.7° செல்சியசு வெப்பநிலையாகவும் உள்ளது[7].

Remove ads

உற்பத்தி

உப்பு உற்பத்தியானது உலகின் மிகப்பழமையான இரசாயன உற்பத்திகளில் ஒன்றாகும்.[8] உப்பு உற்பத்தியின் முக்கிய வளமாக, அண்ணளவாக 3.5% உப்புத்தன்மையுடைய கடல்நீர் காணப்படுகிறது. உலகின் சமுத்திரங்கள் உப்பு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. சமுத்திரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உப்பு உற்பத்தி வளங்கள் இன்றுவரை அளக்கப்படவில்லை. கடல் நீரை ஆவியாக்குதல் மூலம் உப்பைப் பெறுதல் அதிகமாக உப்பைப் பெற்றுக் கொள்ளப் பயன்படும் முறையாகும். உப்புநீரை ஆவியாக்கும் உப்பளங்களில் நீர் ஆவியாவதற்காக சமுத்திரத்திலிருந்து பெறப்பட்ட உப்பு நீர் இடப்படும். இது ஆவியாகி உப்புப் படிகங்களைத் தோற்றுவிக்கும்.

பாக்கித்தானில் உள்ள கெவ்ரா உப்புச் சுரங்கம் உலகின் மிகப்பெரிய உப்பு சுரங்கங்களில் ஒன்றாகும். இச்சுரங்கத்தில் பத்தொன்பது அடுக்குகள் உள்ளன, இதில் 11 அடுக்குகள் நிலத்தடியிலும் 400 கி.மீ. (250 மைல்) நீளப் பாதைகளையும் கொண்டுள்ளன. உப்பு அறை மற்றும் தூண் முறையால் தோண்டியெடுக்கப்படுகிறது, ஆண்டுக்கு சுமார் 385,000 டன் எடையுள்ள மதிப்பீட்டில் உப்பு எடுக்கப்பட்டால் இங்குள்ள உப்பு மேலும் 350 ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது [9].

உண்ணத்தக்க உப்பு

உப்பு மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தங்களது சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்ய அவசியமானது ஆகும். உப்பு உலகளாவிய ரீதியில் சுவையூட்டியாக பயன்படுகிறது. இது சமையலில் பயன்படுகிறது. இது உணவு வேலளையின் போது உணவு மேசையில் காணப்படும். அவரவர் தேவையான அளவில் பெற்றுக்கொள்ள இது சிறந்த வழி ஆகும். உப்பு ஐந்து வகைச் சுவைகளில் ஒன்றாகும்.

மேசை உப்பு 97 இல் இருந்து 99 சதவீதமான சோடியம் குளோரைட் ஐ கொண்டுள்ளது.

உணவுகளில் உப்பு

உப்பு அதிகமான உணவுவகைகளில் காணப்படுகிறது. ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் இறைச்சி, மரக்கறிகள் மற்றும் பழங்களில் உப்பு மிகவும் சிறிய அளவிலேயே காணப்படுகிறது. இது உணவுகளில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது. மேலும் இது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் காணப்படும்.

அதிகமான கிழக்காசிய நாடுகளில் உப்பு பாரம்பரியமாக உணவின் சுவையை அதிகரிக்கும் ஒரு பொருளாக பயன்படுவதில்லை.[10] இதன் இடத்தை நிறைக்க சோய் சோஸ், மீன் சோஸ், ஒய்ச்ட்டர் சோஸ் போன்றவை பயன்படுகின்றன.[11]

Remove ads

தயாரிப்பு முறைகள்

கடல் நீர் உப்புகள்

உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.இத்தகைய உப்பளங்கள் கடற்கரையை ஒட்டிய கடற்கழிகளை அடுத்து அமைந்திருக்கும். தமிழ் நாட்டில் தூத்துக்குடிப் பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்களுள் தரமான உப்பு மிகுதியாகப் பல இடங்களிலும் தயாரிக்கப்படுகிறது.

தரை உப்புகள்

வட இந்தியாவில் பல பகுதிகளிலும் உலகின் வேறுபல இடங்களிலும் தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுத்துச் சேகரிக்கிறார்கள்.

கிணற்று உப்புகள்

சில இடங்களில் உப்புநீர்க் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற இடங்களில் இத்தகைய உப்பு நீர்க் கிணறு முறையில் உப்பு தயாரிக்கப் படுகிறது.

ஏரி உப்புகள்

சில உப்பு நீர் ஏரிகளில் இருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள சம்பர் ஏரியும் பாலஸ்தீனத்தில் உள்ள சாக்கடல் ஏரியும் உப்பு நீர் ஏரிகளாகும். சாக்கடல் ஏரியிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் என கணக்கிட்டுள்ளனர்.

சூரிய வெப்பம் அதிகம் இல்லாத நாடுகளில் உப்புநீரைக் காய்ச்சி உப்பு தயாரிக்கிறார்கள். கடல் நீரைக்கொண்டு தயாரிக்கும் உப்பை மேலும் சுத்தப்படுத்தி "மேசை உப்பு" (Table Salt) ஆகப் பொடித்துப் பயன்படுத்துகிறார்கள்.

Remove ads

உப்பு வகைகள்

உப்புகள் பொதுவாக அமிலமும் காரமும் ஒன்றுக்கொன்று நடுநிலையாக்கல் வினைக்கு உட்பட்டு பெறப்படுகிறது. இந்த வினையின் நிகழ்வுத்தன்மையைப் பொறுத்து அமில உப்பு, கார உப்பு, இரட்டை உப்பு மற்றும் அணைவு உப்பு ஆகியவைகள் கிடைக்கப் பெறுகின்றன.

உப்பின் பயன்கள்

  • உணவிற்கு சுவை கூட்ட உப்பு பயன்படுகிறது.
  • இறந்த மீன்களை கருவாடாகப் பதப்படுத்த, விலங்குகளின் தோல்கள் கெடாமல் பதனிட உப்பு பயன்படுத்தப்படுகிறது.
  • பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் மேலும் பனிக்கட்டி குளிர்ச்சி அடையும் எனவே குளிர் இயந்திரங்களில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
  • ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க உப்பு உதவுகிறாது.
  • வேதியியல் பொருட்கள் தயாரிக்கவும் மருந்துகள் செய்யவும் உப்பு தேவைப்படுகிறது.
  • நமக்குச் சாதாரணமாக உண்டாகும் பல்வலி, தொண்டைவலி நீங்க உப்பு நீரால் வாய்க் கொப்பளித்தல் போதும் வலி நீங்கிவிடும்.
  • வயல்களில் வளரும் பயிர்களுக்குத் தேவையான இரசாயன உரத் தயாரிப்பிற்கும் உப்பு தேவைப்படுகிறது.
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads