ஊட்டக்குறை

From Wikipedia, the free encyclopedia

ஊட்டக்குறை
Remove ads

ஊட்டக்குறை அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடு (Malnutrition) என்பது சமநிலையற்ற உணவு (சில ஊட்டச்சத்துக்களைப் பற்றாக்குறையுடனோ, அளவுக்கு அதிகமாகவோ, தவறான விகிதாச்சாரத்திலோ) உட்கொள்ளுவதால் ஏற்படும் நிலைமையைக் குறிக்கிறது.[1][2] இது பொருத்தமற்ற, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினாலும், உறிஞ்சும் தன்மைக் குறைவாலும், அளவுக்கதிகமாக ஊட்டம் இழத்தலாலும் ஏற்படும் ஊட்டக் குறைவைக் குறித்தாலும், இது கூடுதலாக உணவு உண்பதாலும், குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்களை அளவு மீறி உட்கொள்வதாலும் ஏற்படக்கூடிய மிகையூட்டத்தையும் உள்ளடக்குகிறது. ஒருவர் நீண்டகாலத்துக்கு உடல்நலத்துக்குத் தேவையான அளவிலும், தரத்திலும் உள்ள ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளத் தவறினாலும் ஊட்டக்குறை ஏற்படும். நீண்டகால ஊட்டக்குறை தொற்றுநோய்களையும், வேறு சில நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது.

Thumb
ஐக்கிய நாடுகள் சபைப் புள்ளி விபரங்களின்படி, நாடு வாரியாக ஊட்டக்குறையால் பாதிக்கப்பட்ட மக்கள்தொகை.
விரைவான உண்மைகள் ஊட்டக்குறை, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...

ஊட்டக்குறை பொதுவாக வளரும் நாடுகளில் காணப்படும் கடுமையான வறுமையுடன் தொடர்புபட்டது. இது பாதிக்கப்பட்டப் பகுதிகளின் அறிவுத்திறன் குறைவுக்கு ஒரு காரணமாக உள்ளது. பொருத்தமற்ற உணவு, அதிக உணவு உண்ணல், சமநிலை உணவு இன்மை என்பவற்றால் வளர்ந்த நாடுகளிலும் ஊட்டக்குறை காணப்படுகிறது. இது அதிகரித்து வரும் உடற் பருமன் போன்றவற்றினால் வெளிப்படுகிறது. மிகப் பொதுவாக ஊட்டக்குறை உள்ளோரின் உணவில் போதிய கலோரிகள் இருப்பதில்லை அல்லது புரதம், உயிர்ச்சத்துக்கள், கனிமங்கள் என்பன பற்றாக்குறையாக இருக்கின்றன[3][4]. பட்டினியால் நிகழும் கடும் ஊட்டச்சத்துக்குறையின் அறிகுறிகள், விளைவுகளாகக் குறையுணவுத் திறனிழப்பைக் கூறலாம். வளரும் நாடுகளில் ஊட்டச்சத்துக்குறை பொதுவாக காணப்படுகின்றது என்றாலும் தொழில்வளமிக்க நாடுகளிலும் ஊட்டச்சத்துக்குறை காணப்படுகின்றது. வளமுள்ள நாடுகளில், அதிகமான ஆற்றல் (சக்தி), கொழுப்புகள், அதிக அளவுத் துப்புரவாக்கப்பட்ட மாவுப்பொருட்களை உள்ளடக்கிய ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்களினால் ஏற்படுவதாகும். உடற்பருமன் அதிகரித்தல் வளர்முனைப் போக்காக இருப்பது பல சமூகப்பொருளாதார மேம்பாடடையாத நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் முதன்மையான பொதுநலக் கேடாகக் கருதப்படுகின்றது.[5]. ஊட்டக்குறையில் இருந்து உருவாகும் மருத்துவப் பிரச்சினைகள் பொதுவாக பற்றாக்குறை நோய்கள் எனப்படுகின்றன. இசுகேவி என்னும் நோய் மிகவும் அறியப்பட்ட ஒரு நோயாகும். உயிர்ச்சத்து சி குறைவினால் உண்டாகும் இந்த நோய், இப்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

உலகின் பொதுநலத்திற்கு மிகப் பெரிய சவாலாக ஊட்டச்சத்தின்மை உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது[6]. ஊட்டச்சத்து மேம்பாடு ஒரு சிறந்த பயனுள்ள உதவியாக பரவலாகக் கருதப்படுகிறது[6][7]. ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கான உடனடி காரணிகளாக உள்ள சிலக் குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளைக் கொடுப்பது வளர்முகமானக் குறுக்கீடுகளில் சிறப்பானதொன்றாகக் கருதப்படுகின்றது[8]. ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குக் காரணமாக உள்ள நுண்ணூட்டச்சத்துக்களைச் செறிவூட்டிய பொடிப் பொட்டலங்களாகவோ அல்லது நேரடியாக உணவுக்குறை நிரப்பிகளாகவோக் கொடுப்பது நெருக்கடிநிலை நிவாரண நடவடிக்கைகளாகக் கருதப்படுகிறது[9][10]. உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகிய அமைப்புகள் சிகிச்சைக்குரிய பரிமாறத்தகு உணவுகளைச் சமூக அளவில் கொடுப்பது கடும் தீவிர ஊட்டக்குறைக்கு ஒரு நல்ல தீர்வாகப் பரிந்துரைக்கின்றன. இவ்வித முயற்சிகளால் நெருக்கடி நிலை உள்ள இடங்களில் வாழும் மனிதர்களில் நல்ல உடல் எடை முன்னேற்றம் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது[11].

கொடையளிக்கும் நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்காதவண்ணம், வணிகப் பொருள் குவித்தல் தடைச் சட்டத்திற்கேற்ப, பட்டினியால் வாடுபவர்களுக்கு பணமாகவோ அல்லது பண சான்றாவணமாகவோக் கொடுத்து உள்ளூர் உழவர்களிடமிருந்துப் பொருள்களைப் பெற்று கொள்ளும் பஞ்ச நிவாரண மாதிரியை உதவிக் குழுக்கள் அதிகமாகப் பரிந்துரைக்கின்றன.[12][13]. ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட விவசாய விளைப்பொருட்களின் மகசூலைக் குறைக்கும் எதிர்மறையான விளைவுகளை எதிர்காலத்தில் குறைத்து, இவ்வகை விளைப்பொருட்களின் மகசூலை அதிகரிப்பதை ஊக்குவிப்பது நல்லதொரு நெடுங்காலத் திட்டமாகக் கருதப்படுகிறது[14].

உழவர்களுக்கு நேரடியாக நிவாரணமளிப்பது என்பது சமீபகால முயற்சிகளில் ஒன்றாகும்.[15]. என்றாலும், உழவர்களுக்கான அரசாங்க நிதி உதவித்திட்டங்கள் உலக வங்கி கண்டனங்களால் கட்டுபடுத்தப்படுகின்றன. மேலும், விளைநிலங்களில் உரங்கள் அதிகமாக உபயோகிப்பதை விரிவாக்குவது[16] சுற்றுசூழலையும், மனித நலத்தையும் கடுமையாகப் பாதிப்படைய செய்யலாம்[17] எனவே, இது பல்வேறு தன்னார்வ சமூக அமைப்புகளால் எதிர்க்கப்படுகிறது[18].

பெண்கள், குழந்தைகள், முதியவர்களில் ஊட்டச்சத்துக்குறையானது முதன்மையாகக் கருதப்படுகிறது. கர்ப்பங்களாலும், குழந்தைகளுக்குப் பாலூட்டுவதாலும் பெண்களுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன[19]. தாய்மார்களின் ஊட்டச்சத்து அளவுகளுடன் நேரடியாக தொடர்பிருப்பதால், பிறப்பதற்கு முன்பே குழந்தைகள் ஊட்டக்குறைவுக்கான இடரினை எதிர்கொள்ள நேரிடும்[20]. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் ஊட்டக்குறை வீதத்தைக் குறைப்பதுடன், அவர்களின் இறப்பையும் குறைக்கிறது[4][11]. மேலும், தாய்மார்களுக்கு தகுந்த கல்வித் திட்டங்கள் மூலமாக இதைக் குறித்த போதிய அறிவை அளிப்பது குழந்தைகளின் ஊட்டக்குறை வீதத்தைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.[21]. பசி, ஆற்றல் நிலை, மென்று விழுங்குதல் ஆகியவற்றின் மாற்றங்களினால் ஏற்படும் தனித்தன்மை வாய்ந்த சிக்கல்களை முதியவர்கள் சந்திப்பதால் இவர்கள் ஊட்டக்குறைக்கான பெரும் இடரில் உள்ளார்கள்.[22]. எனவே, தங்களைத் தாங்களேப் பார்த்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள முதியவர்களில் ஊட்டக்குறையைத் தடுப்பதற்கு, போதிய பராமரிப்பினை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்குவது அவசியமாகிறது.

Remove ads

வரையறை

Thumb
புரதக்குறைநோய் அறிகுறிகளுடன் அமெரிக்காவில் உள்ள ஒரு குழந்தையின் படம்.

ஊட்டக்குறையானது தவறான அல்லது தேவைக்குக் குறைந்த உணவுகளை உட்கொள்ளுவதால் நிகழும் ஒரு மருத்துவ நிலையாகும்[23]. ஊட்டச்சத்துக்குறையானது (malnutrition) ஊட்டக்குறை (undernutrition), உடற் பருமன், எடை கூடுதலாக இருத்தல், நுண்ணூட்டக்குறைபாடு ஆகிய நோய்ப் பிரிவுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது[24]. என்றாலும், போதுமானக் கலோரிகள் உள்ள உணவைச் சாப்பிடாமல் இருப்பதால் அல்லது எந்தவொரு காரணத்தினாலோ குறிப்பிட்ட உணவுப்பொருட்களைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் விளையும் ஊட்டக்குறைபாட்டைக் குறிக்கவே இது அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது[25].

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads