எசுக்கிமோ - அலெயுத் மொழிகள்

மொழிக் குடும்பம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எசுக்கிமோ - அலெயுத் மொழிகள் (Eskimo–Aleut languages), என்பது அலாசுக்கா, கனேடிய ஆர்க்டிக், நுனவிக், நுனத்சியாவுத், கிறீன்லாந்து, உருசியாவின் தூர கிழக்கில் உள்ள சுக்கோத்கா தீவக்குறை ஆகிய இடங்களின் தாயக மக்களின் மொழியைக் குறிக்கின்றது. இம்மொழிகள் எசுக்காலெயுத் மொழிகள்[1] அல்லது இனுயிட்-யுப்பிக்-உனன்கன் மொழிகள்[2] போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

எசுக்கிமோ-அலெயுத் மொழிக் குடும்பத்தில் இரண்டு கிளைகள் உள்ளன. ஒன்று எசுக்கிமோ மொழிகள், மற்றது அலெயுத் மொழி. அலெயுத் மொழிக் கிளையில் அலெயுத் என்னும் ஒரேயொரு மொழியே உள்ளது. அலெயுத்தியத் தீவுகளிலும், பிரிபிலோஃப் தீவுகளிலும் இம்மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இது பல கிளை மொழிகளாகப் பிரிந்துள்ளது. எசுக்கிமோ மொழிகளும் இரு கிளைகளாகப் பிரிந்துள்ளன. யுப்பிக் மொழிகள் அலெசுக்காவின் மேற்கு, தென்மேற்குப் பகுதிகளிலும், சுக்கோத்காவிலும் பேசப்படுகின்றது. இனுயிட் கிளை மொழிகளைப் பேசுபவர்கள் வட அலாசுக்கா, கனடா, கிறீன்லாந்து ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். ஒரு பெரிய பிரதேசத்தில் வழங்கு இனுயிட் மொழிகள் பல வகைகளாக உள்ளன. அயலில் உள்ள வகைகள் ஒத்தவையாக இருந்தாலும் மையப் பகுதிகளில் இருந்து தொலைவில் டையோமேடே தீவுகள், கிழக்கு கிறீன்லாந்து போன்ற இடங்களில் வழங்கும் வகைகள் பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.[3]

சிரெனிக் என்னும் மொழியின் சரியான இடத்தை மொழியியலாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலர் உதை யுப்பிக் மொழிகளின் ஒரு கிளையாக எண்ணுகின்றனர்.[4] வேறு சிலர் யுப்பிக், இனுயிட் ஆகிய கிளைகளுக்கு இணையாக இது எசுக்கிமோ குடும்பத்தின் மூன்றாவது கிளை என்கின்றனர்.[5]

Remove ads

வரலாறு

இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எசுக்கிமோ மொழிகளினதும், அலெயுத் மொழிகளினதும் பொது மூதாதை மொழியில் இருந்து எசுக்கிமோ, அலெயுத் கிளைகள் பிரிந்துவிட்டதாக அலாசுக்கா நாட்டக மொழி மையம் (Alaska Native Language Center) நம்புகின்றது.[3][6][7] சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் எசுக்கிமோ மொழிக் குடும்பம் யுப்பிக், இனுயிட் என்னும் இரு கிளைகளாகப் பிரிந்தது.[6]

எசுக்கிமோ - அலெயுத் மொழிகள் அமெரிக்காக்களின் நாட்டக மொழிகளுக்குள் அடங்குகின்றன. இது ஒரு புவியியல் சார்ந்த வகை பிரிப்பே அன்றி மரபுவழி சார்ந்த வகைபிரிப்பு அல்ல. எசுக்கிமோ - அலெயுத் மொழிகளுக்கு வட அமெரிக்காவின் பிற மொழிக் குடும்பங்களுடன் விளக்கிக்காட்டக்கூடிய அளவு தொடர்புகள் இல்லை.[6] இம்மொழிக் குடும்பம் தனியானதும், வரலாற்றுக்கு முந்தியகாலத்தில் ஆசியாவில் இருந்து கடைசியாகப் புலம் பெயர்ந்த மக்களோடு தொடர்புடையது என்றும் நம்புகின்றனர்.

கிழக்குச் சைபீரியாவிலும் வடகிழக்குச் சீனாவிலும் பேசப்படும் வடக்குத் துங்குசிய மொழிகளில் எசுக்கிமோ - அலெயுத் மொழிகளின் கடன்சொற்கள் காணப்படுவதாகவும், இச்சொற்கள் தெற்குத் துங்குசிய மொழிகளில் இல்லை என்றும் அலெக்சாண்டர் வோவின் (2015) எடுத்துக்காட்டினார். இது எசுக்கிமோ-அலெயுத் மொழிகள் ஒரு காலத்தில் கிழக்கு சைபீரியாவில் பரவலாகப் பேசப்பட்டதைக் காட்டுவதாக அவர் கருதினார். 2,000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திலேயே வடக்குத் துங்கிசிய மொழிகள் எச்கிமோ - அலெயுத் மொழிகளிடம் கடன் பெற்றிருக்கவேண்டும் என அவர் கணக்கிட்டார். இக்காலத்திலேயே துங்குசியர்கள் தமது தாயகமான அமுர் ஆற்றின் நடுப் பகுதிகளிலிருந்து வடக்கு நோக்கிப் பரவியதை அவர் சுட்டிக்காட்டினார். முந்து எசுக்கிமோ - அலெயுத் மக்களின் தாயகம் சைபீரியாவிலேயே உள்ளது என்றும் அலாசுக்காவில் அல்ல என்றும் வொல்வின் கருதுகின்றார்.

Remove ads

உலக மொழிக் குடும்பங்களும் எசுக்கிமோ - அலெயுத் மொழிகளும்

எசுக்கிமோ - அலெயுத் மொழிகளுக்கு உலகின் பிற மொழிக் குடும்பங்களுடன் எவ்வித மரபுவழித் தொடர்புகளும் இல்லை என்பதே தற்போதுவரை மொழியியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடாக உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads