சுந்தரம் சிறீஸ்கந்தராஜா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுந்தரம் சிறீஸ்கந்தராஜா (Sundaram Sriskandarajah, (10 நவம்பர் 1953- 23 சனவரி 2014[1]) இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆவார். பீஜியில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற நீதியரசராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறீஸ்கந்தராஜா மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார். அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1979 இல் சட்டப் படிப்பை முடித்துச் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றினார். 1991 முதல் 1995 வரையிலும் அரச வழக்கறிஞராகவும், செப்டம்பர் 1995 முதல் செப்டம்பர் 1997 வரை மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.
பொதுநலவாய புலமைப்பரிசில் பெற்று மேற்கிந்தியத் தீவுகளில் பார்படோசு பல்கலைக்கழகத்தில் 1995 இல் சட்ட முதுகலை (சட்ட வரைவு) பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஆகத்து 1997 இல் வட மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக வவுனியாவில் பணியாற்றினார். இக்காலப் பகுதியில் தீவிரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை இவர் விசாரித்தார். அக்டோபர் 2000 ஆம் ஆண்டில் மேல் மாகாண மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார்.
சூன் 24, 2011 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டார். இடையில் சில காலம் பீஜி தீவுகளில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2]
Remove ads
வரலாற்றுப் புகழ் மிக்க சில தீர்ப்புகள்
முன்னாள் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம் இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு[3][4] எதிராக அரசு மேன்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என இவர் தீர்ப்பளித்திருந்தார்.[5] இதனால் இவர் மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தார் என இலங்கை சட்டத்தரணிகள் கூட்டமைப்பு .கூறியிருந்தது.[6]
மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதூர்தீனுக்கு எதிரான மேன்முறையீட்டு வழக்குகளுக்கு அவர் வழங்கிய கட்டளைகள் முக்கியமானதாக கருதப்பட்டது.[7]
Remove ads
மறைவு
சிறிது காலம் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நீதியரசர் சிறீஸ்கந்தராஜா தனது 61 வது அகவையில் 2014 சனவரி 23 இல் கொழும்பில் காலமானார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads