எவுப்ராசியம்மா எலுவத்திங்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எவுப்ராசியம்மா எலுவத்திங்கல் (Marth Euphrasia Eluvathingal) அல்லது புனித எவுப்ராசியா (மலையாளம்: മാർത്ത് എവുപ്രാസ്യാമ്മ) என்று அழைக்கப்படுகின்ற புனிதர் கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தவர். அவர் அக்டோபர் 17, 1887இல் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிச்சூர் மாவட்டத்தின் காட்டூர் என்னும் ஊரில் பிறந்தார். 1952ஆம் ஆண்டில் ஆகத்து 29ஆம் நாள் இறந்தார். 2014, நவம்பர் 23ஆம் நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிசு எவுப்ராசியம்மாவை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.[1][2][3][4][5]
Remove ads
வாழ்க்கை வரலாறு
திரிசூரைச் சார்ந்த காட்டூர் என்ற இடத்தில் பிறந்த எவுப்ராசியம்மாவுக்குத் திருமுழுக்கின்போது வழங்கப்பட்ட பெயர் “ரோஸ் எலுவத்திங்கல்” என்பதாகும். அவருடைய பெற்றோர் அந்தோனி எலுவத்திங்கல் சேர்ப்புக்காரன், குஞ்ஞத்தி என்போர் ஆவர். ரோசின் தாய் அன்னை மரியாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருடைய பக்தி வாழ்க்கை ரோசின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தைக் கொணர்ந்தது.
லீமா நகர ரோஸ் என்னும் புனிதரின் பெயரைத் தாங்கிய ரோஸ் எலுவத்திங்கலுக்கு அவருடைய தாயார் அப்புனிதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதுண்டு. மேலும் பல புனிதர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி ரோஸ் நல்ல கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று தாய் அறிவுறுத்திவந்தார்.
சிறுவயதிலேயே ரோஸ் ஆன்ம காரியங்களில் ஆர்வம் காட்டினார். அவருக்கு 9 வயது நிகழ்கையில் அன்னை மரியாவின் காட்சி அவருக்குக் கிடைத்ததாக அவரே சான்றுகூறியுள்ளார். அச்சிறு வயதிலேயே ரோஸ் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கையளித்தார். ரோசின் தந்தை அந்தோனி தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணியபோது ரோஸ் அவரிடத்தில் தாம் ஒரு கன்னிகையாகத் துறவற சபையில் சேர விரும்புவதாகக் கூறினார். கடவுளை நோக்கி உருக்கமாக வேண்டினார். அப்போது ரோசின் தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இப்பின்னணியில் அந்தோனியின் மனமும் மாறியது. அவர் தம் மகள் ரோஸ் கன்னியாகத் துறவறம் புக இசைவு அளித்தார்.
Remove ads
துறவறம் புகுதல்
ரோசை அழைத்துக்கொண்டு அந்தோனி கூனம்மாவு ஊரில் இருந்த கார்மேல் அன்னைக் கன்னியர் மடம் சென்று சேர்ந்தார். அங்கு ரோஸ் துறவியாக வாழத்தொடங்கினார். ஆனால் அவர் நோயினால் துன்புற்றார். எனவே பிற கன்னியர் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட எண்ணினார்கள். அப்போது ரோசுக்கு இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோர் (திருக்குடும்பம்) காட்சியளித்து, ரோசின் நோயைக் குணப்படுத்தினர். இதுபற்றியும் ரோஸ் சான்றுபகர்ந்துள்ளார்.
துறவற சபையில் உறுப்பினர் ஆன வேளையில் (மே 10, 1897) அவர் ஏற்ற பெயர் “இயேசுவின் திரு இதயத்தின் எவுப்ராசியா” என்பதாகும். மக்கள் அவரை “எவுப்ராசியம்மா” என்று அழைத்தனர். அவர் 1898, சனவரி 10ஆம் நாள் கார்மேல் துறவியரின் உடையை அணியத் தொடங்கினார்.
எவுப்ராசியம்மா பல நற்பண்புகள் கொண்டவராக விளங்கினார். தாழ்ச்சி, பொறுமை, அன்பு, ஒறுத்தல், புனித வாழ்க்கையில் ஆர்வம் போன்றவற்றைக் கொண்டிருந்தார். இயேசுவின் அன்னை மரியா மீது மிகுந்த பக்தி அவரிடத்தில் துலங்கியது. நோய்கள் வந்த போதும், வாழ்க்கையே இருண்டது போன்ற அனுபவம் ஏற்பட்டபோதும் அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
சகோதரி எவுப்ராசியம்மா 1900, மே 24ஆம் நாள் தம்மை நிரந்தரமாகத் துறவறத்திற்கு அர்ப்பணித்தார். அவர் இயேசுவைத் தம் மணவாளனாகக் கருதி வாழ்ந்தார்.
Remove ads
துறவறப் பணிகள்
1904-1913 ஆண்டுக் காலத்தில் எவுப்ராசியம்மா புகுமுக துறவியருக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஆற்றினார். அவர் தனிமையில், ஒரு மறைந்த வாழ்வு வாழ்வதற்கு விரும்பியபோதிலும், ஒல்லூர் கன்னியர் மடத்திற்குத் தலைவியாக நியமிக்கப்பட்டார். தனது கடமைகளைப் பொறுமையோடும் தாழ்ச்சியோடும் ஆற்றினார். மடத்திற்கு உண்மையான தலைவராக இருப்பவர் இயேசுவே என்பதை வலியுறுத்தும் வகையில் மடத்தின் பொது இடத்தில் இயேசுவின் திரு இதய உருவத்தை நிறுவினார். அவர் மடத்தின் தலைவியாக 1913-1916 ஆண்டுகளில் பணியாற்றினார்.
இவ்வாறு சுமார் 48 ஆண்டுகள் எவுப்ராசியம்மா புனித மரியா கன்னியர் இல்லத்திலேயே வாழ்ந்தார். புனித வாழ்க்கை நடத்தி, எப்போதும் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். இதனால் மக்கள் அவரை “செபிக்கும் அன்னை” என்று அழைத்தனர்.[6] சிலர் அவரை “நடமாடும் கோவில்” என்றனர். ஏனென்றால் அவருடைய உள்ளத்தில் குடிகொண்ட இறைவனின் ஒளி அவரிடமிருந்து சென்று மக்களின் வாழ்க்கையை ஒளிர்வித்தது.

ஆன்மிகம்
கன்னியர் மடம் புகுந்த நாளிலிருந்தே எவுப்ராசியம்மாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆயர் யோவான் மேனச்சேரி என்பவர். அவர் எவுப்ராசியம்மாவின் வாழ்க்கை ஆன்மிகத்தில் தோய்ந்திருந்ததை உணர்ந்தார். எனவே, எவுப்ராசியா தமது ஆன்ம அனுபவங்கள் அனைத்தையும் அப்படியே தமக்கு எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். தாம் எழுதியவற்றை அழித்துவிட வேண்டும் என்று எவுப்ராசியம்மா கேட்டுக்கொண்ட போதிலும் ஆயர் அக்கடிதங்களை அப்படியே பாதுகாத்து வைத்தார். அக்கடிதங்களிலிருந்து எவுப்ராசியம்மாவின் ஆன்ம அனுபவ ஆழம் தெரிய வருகிறது.
கன்னியர் மடத்தைத் தேடி வந்து யாராவது உதவி செய்தால் எவுப்ராசியம்மா அவர்களிடம் “இறந்தாலும் மறக்கமாட்டேன்” (”மரிச்சாலும் மறக்கெலாட்டோ”) என்று கூறுவாராம்.
Remove ads
புதுமைகள்
எவுப்ராசியம்மாவை நோக்கி வேண்டியதன் பயனாக அதிசயமான விதத்தில் குணம் கிடைத்ததாகப் பலர் சான்றுபகர்ந்துள்ளனர்.[2][7][8][9] இப்புதுமைகளை ஆய்ந்து, அவை இறையருளால் நிகழ்ந்தவை என்றும், எவுப்ராசியாவின் மன்றாட்டின் பயனே அது என்றும் திருச்சபை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.[2][7][8][9]
புனிதர் பட்டம்
எவுப்ராசியம்மாவுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதன்முயற்சிகள் 1986இல் தொடங்கின. 1987, ஆகத்து 29ஆம் நாள் அவருக்கு “இறை ஊழியர்” நிலை வழங்கப்பட்டது.[10][11]
தாமஸ் தரகன் என்பவருடைய உடலிலிருந்து ஒரு கட்டி அற்புதமான விதத்தில் மறைந்தது என்றொரு புதுமை பற்றிய தகவல் உரோமைக்கு அனுப்பப்பட்டது.[12][13][14][15]
அருளாளர் பட்டம்
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அளித்த ஆணையின்படி, கர்தினால் வர்க்கி விதயத்தில் எவுப்ராசியம்மாவுக்கு “அருளாளர்” பட்டம் வழங்கினார். அந்நிகழ்ச்சி, திரிசூர் பகுதியில் ஒல்லூரில் புனித அந்தோனியார் கோவிலில் நிகழ்ந்தது.
புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல்
2014ஆம் ஆண்டு ஏப்பிரல் 23ஆம் நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது திருத்தந்தை பிரான்சிசு எவுப்ராசியம்மாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார். அச்சிறப்பு நிகழ்ச்சி வத்திக்கான் நகரில் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்தது. அப்போது இந்தியாவைச் சார்ந்த குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா என்பவருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கேரள அரசு தரப்பில் நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.சீ. ஜோசப் ஆகியோர் சென்றனர். இந்தியக் குழுவுக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பி.ஜே. குரியன் தலைமை தாங்கினார்.[16][17][18][19][20]
Remove ads
நூல்கள்
- Garhika Sabhayude Pravachika (Malayalam) by Mother Mariam
- Sr. Pastor, CMC, Athmadaham (Malayalam): The spirituality of the Servant of God Mother Euphrasia (Thrissur : 1998)
- Sr. Leo, CMC, (Trans), Servant of God Mother Euphrasia (Kolazhy, Thrissur: 1998)
- Mgr. Thomas Moothedan, A Short Life of Sr. Mariam Thresia (Mannuthy: 1977)
- Fr. J. Ephrem, C.R., The Praying Mother. Trans. C.A. Regina (Kolazhy, Thrissur: 1999)
- Dr. Sr. Cleopatra, CMC: The twin roses of Trichur: The servants of god Mariam Thresia and Euphrasia[21]
Remove ads
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads