ஒசே ரிசால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒசே புரட்டாசியோ ரிசால் (José P. Rizal, ஜூன் 19, 1861 - டிசம்பர் 30, 1896) என்பவர் பிலிப்பைன்சின் ஒரு தேசியவாதியும் எழுத்தாளரும் ஆவார். ஸ்பானிய குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பிலிப்பைன்சில் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தவர். ரிசால் 1896 ஆம் ஆண்டில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இவர் பிலிப்பைன்சின் விடுதலை வீரராகக் கணிக்கப்பட்டு இவர் இறந்த நாளை ரிசால் நாள் என்ற பெயரில் விடுதலை நாளாக பிலிப்பைன்சில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
பிலிப்பைன்சின் லகூனா மாகாணத்தில் கலாம்பா என்ற இடத்தில் பிறந்தவர் ரிசால். ரிசால் மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின்னர் மருத்துவத் துறையில் பயில சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் மாட்ரிட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஐரோப்பிய, மற்றும் ஜப்பானிய, அரபு, சமஸ்கிருதம் உட்பட 10 மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார்[1].[2]. இரண்டு புதின நாவல்களையும் எழுதினார்.

பிலிப்பைன்ஸ் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து அரசியலிலும் இவர் ஈடுபட்டார். இவ்வரசியல் இயக்கமே பின்னர் ஸ்பானியர்களுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட கட்டிபுனான் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது[3]. தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1896 ஆம் ஆண்டில் கியூபா செல்லும் வழியில் பார்சிலோனா நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டு மணிலாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads