கடமை

From Wikipedia, the free encyclopedia

கடமை
Remove ads

கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம். பல கடமைகள் சட்டத்தினால் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான கடமைகளில் இருந்து தவறுவதற்குத் தண்டனைகளும் விதிக்கப்படுவது உண்டு. கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. மாறாகத் தன்னலம் கருதியும் கடமையைச் செய்வதும் உண்டு.

Thumb
எட்மண்ட் லெயிட்டனால் வரையப்பட்ட "கடமை"

நீண்ட காலத்துக்கு முன் வாழ்ந்த உரோம மெய்யியலாளரான சிசேரோ, கடமை நான்கு மூலங்களில் இருந்து ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடுகின்றார்.[1] அவையாவன:

  1. மனிதனாக இருப்பதன் விளைவாக
  2. ஒருவர் தனது வாழ்வில் இருக்கும் இடத்தினால் (ஒருவரின் குடும்பம், ஒருவரின் நாடு, ஒருவரின் தொழில்)
  3. ஒருவருடைய இயல்பின் காரணமாக
  4. ஒருவருடைய ஒழுக்கம் சார்ந்த எதிர்பார்ப்புகளின் காரணமாக

அதிகாரம், மதம், சமூக நெறிமுறைகள் ஆகியவற்றைப் பொறுத்து, சட்டத்தினாலோ பண்பாட்டினாலோ விதிக்கப்படும் கடமைகள் பெருமளவு வேறுபட்டு அமைகின்றன.

Remove ads

குடிசார் கடமைகள்

கடமை என்பது, ஒருவர் தனது நாட்டுக்கும், தேசத்துக்கும், சமூகத்துக்கும் செய்யவேண்டிய ஒரு விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.[2]

  • சட்டத்துக்குக் கீழ்ப்படிதல்
  • வரிகளைக் கட்டுதல்
  • தேவை ஏற்படும்போது பொதுப் பாதுகாப்புக்குப் பங்களிப்புச் செய்தல்
  • வாக்களிப்பதற்குப் பெயரைப் பதிவுசெய்து எல்லாத் தேர்தல்களிலும், பொதுவாக்கடுப்புக்களிலும் வாக்களித்தல்
  • கோரப்பட்டால் நடுவர் குழுவில் பணிபுரிதல்
  • விபத்துக்களாலும், தெருக் குற்றங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதலும், பின்னர் நீதிமன்றில் சாட்சி சொல்லுதலும்
  • தொற்றுநோய்கள் பற்றிச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்தல்
  • பொதுச் சேவை செய்வதற்கு முன்வருதல்
  • காலத்துக்குக் காலம் அல்லது தேவைப்படும்போது குருதிக் கொடை அளித்தல்
  • நீதியற்ற அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுதல்

போன்றவை குடிசார் கடமைகளுக்குள் அடங்குகின்றன.

Remove ads

பிள்ளைகளுக்கான கடமைகள்

பெரும்பாலான பண்பாடுகளில், பிள்ளைகள் தமது குடும்பங்கள் தொடர்பிலான கடமைகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். நோயுற்ற உறவினர்களைக் கவனித்துக்கொள்வது முதல், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பைப் பேணும் விதத்தில் நடந்துகொள்ளுதல், குடும்த தகுதிக்கு ஏற்றபடி பெற்றோர் சொற்படி திருமணம் செய்தல் போன்றவை வரை பிள்ளைகளின் கடமைகள் பலவிதமான வடிவங்களை எடுக்ககூடும். குடும்பம் சார்ந்த கடமை உணர்வு கான்பியூசியசின் போதனைகளில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பல நூற்றாண் டுகளாகவே பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள், கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்தியப் பண்பாட்டிலும் குடும்பம் தொடர்பான பல்வேறு கடமைகள் பிள்ளைகளுக்கு இருப்பதைக் காணமுடியும். இந்தியாவின், சமய நூல்களும், ஒழுக்கத்தை வலியுறுத்தும் நூல்களும் பெற்றோரைப் பேணுதல் பிள்ளைகளின் உயர்வான கடமையாகக் கூறுகின்றன. அத்துடன், பிள்ளைகள், குறிப்பாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் தமது உடன்பிறப்புக்களைப் பேணி நன்னிலைக்குக் கொண்டுவருவதைக் கடமையாகச் செய்து வருவதை இன்றும் காணலாம்.

Remove ads

பல்வேறு பண்பாடுகளில்

பண்பாடுகளையும் பிரதேசங்களையும் பொறுத்துக் கடமைகள் பெருமளவில் வேறுபடுவதைக் காணலாம். மேனாட்டுப் பண்பாடுகளிலும் பார்க்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குடும்பம் தொடர்பான கடமைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குடும்பத்துக்கான கடமைகள் தொடர்பிலான மனப்பாங்குகள் குறித்த ஆய்வொன்றின்படி,

"தமது குடும்பங்களை மதிப்பதற்கும், அவற்றுக்கு உதவி செய்வதற்கும், ஆதரிப்பதற்குமான அவர்களது கடமை தொடர்பில், ஆசிய, இலத்தீன் அமெரிக்க இளைஞர்கள் ஐரோப்பியப் பின்னணியைக் கொண்ட இளைஞர்களிலும் கூடுதலான விழுமியங்களையும், எதிர்பார்ப்புக்களையும் கொண்டுள்ளனர்."[3]

மைக்கேல் பெலெட்சு என்பவர் தான் எழுதிய நவீன ஆசியாவில் பாலும், பால் தன்மையும், உடல்சார் அரசியலும் என்னும் நூலில் கடமைபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

" விசுவாசம், உழைப்பு ஆற்றல், பிள்ளைகளால் கிடைக்கக்கூடிய பிற வளங்கள் ஆகியவற்றைக் குடும்பத்தின் நன்மைக்காக, சில வேளைகளில் முழுக் கால்வழிக் குலத்தின் நன்மைக்காகத் திரட்டுவதற்காகப் பிள்ளைகளின் கடமை என்னும் கருத்தமைவு பயன்படுத்தப்படுகின்றது. பெற்றோர் மீதான பிள்ளைகளின் பக்தி என்னும் கொள்கை பெரியவர்களுக்கு ஆறுதலையும், மன அமைதியையும் கொடுத்தாலும், தமது பெற்றோர்களின் விருப்பங்களையும், சொல்லப்படாத எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு முயல்பவர்களுக்கு அயர்ச்சியையும், அடக்கப்படும் அனுபவத்தையும் கொடுக்கக்கூடும்."[4]

ஆசியாவிலும், மத்தியகிழக்கு நாடுகளிலும், பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கப்படும் கடமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஒன்றில், பெண் கணவன் வீட்டுக்குச் சென்று வாழ்வதும் அங்கே பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதும் அவளது கடமையாகக் கருதப்படுகிறது. மிகச் சில பகுதிகளிலேயே ஆண் பெண் வீட்டுக்குச் சென்று வாழும் வழக்கம் உள்ளது. பெண் தனது கணவன் வீட்டில் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமன்றிக் கணவனும் மனைவியும் கணவனின் குடும்பத்துக்கே உழைப்பைக் கொடுப்பது கடமையாகும். மூத்த தலைமுறையினர் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் குடும்பங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றனர். குடும்பத்தின் கால்வழியைச் சிதையாமல் வைத்திருப்பதும், முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமே இவ்வகைக் கடமையின் நோக்கங்களாகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads