கடனீர் இடுக்கேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புவியியல் அடிப்படையில், கடனீர் இடுக்கேரி (fjord, ஃபியோர்ட்) அல்லது இடுக்கேரி, அல்லது மலையிடைக் கடல் எனப்படுவது பனியாற்றுப் படிமங்கள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத்தாக்குகளில் கடல் நீரானது உட்புகுந்து இரு மருங்கும் மலைகளாலான நிலப் பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையைக் கொண்டிருப்பதாகும்[1]. இந்த நீரானது ஒரு இடத்தில் கடலுடன் தொடர்பு கொண்டதாகவே காணப்படும். அப்பகுதி இடுக்கேரியின் வாசல் அல்லது மலையிடைக் கடல் நுழைவழி என அழைக்கப்படும்.

இவ்வகையான இடுக்கேரிகள் வடக்கு நோக்கி நோர்வே, கிறீன்லாந்து நாடுகளிலும், மேற்குப் புறத்தில் கனடா, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியிலும், தெற்கு நோக்கி நியூசிலாந்து, சிலி நாடுகளிலும் காணப்படுகின்றன[2]. நோர்வேயின் முழு கரையோரப் பகுதியும், கிறீன்லாந்தின் தீவுகள் அதிகளவில் இவ்வகையான இடுக்கேரிகளைக் கொண்டிருக்கின்றன[3].
இரு மருங்கிலும் உள்ள நிலப் பகுதியானது, பொதுவாக ஆழமான செங்குத்துப் பாறைகள் அல்லது மலைகளாகக் காணப்படும். பனியாற்றுப் படிமங்கள் உருகியோடும்போது, ஏற்படும் மேலதிக அமுக்கத்தினால், கீழே கடலரிப்பு, அல்லது மண்ணரிப்பு அதிகமாக நிகழ்ந்து குறிப்பிட்ட இடம் கடலை விட ஆழமானதாகவும் வர நேரிடும். பொதுவான இடுக்கேரிகள் அனைத்தும் அருகிலுள்ள கடலை விட ஆழமானதாகவே இருக்கும். நோர்வேயிலுள்ள சோக்னஃபியோர்ட் இடுக்கேரி கடல்மட்டத்திலிருந்து 1,300 m (4,265 ft) ஆழம்வரை செல்கின்றது.
இடுக்கேரி என்னும் பதமானது ஸ்கான்டினாவியாவில் பயன்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலிருந்து சிறிது மாறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீளமான, ஒடுங்கிய நன்னீர் கொண்ட ஏரிகளும் கூட சில சமயம் இடுக்கேரிகள் என அழைக்கப்படுவதுண்டு[4].

Remove ads
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads