கட்டுமான ஆவணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டிடம் அல்லது வேறு அமைப்புகளைக் கட்டுபவருக்குத் தேவையான கட்டிடத்தின் அல்லது அமைப்பின் வடிவமைப்புத் தொடர்பான விபரங்களையும், தகவல்களையும் கொடுக்குமுகமாகக் கட்டிடக்கலைஞர் மற்றும் பொறியியலாளர்களால் உருவாக்கப்படும் ஆவணம் கட்டுமான ஆவணம் ஆகும். கட்டுமான ஆவணங்களில் எழுத்துமூல ஆவணங்களும், வரைபட ஆவணங்களும் உள்ளன.[1] கட்டுமான ஆவணங்கள் கட்டுமான ஒப்பந்தத்தோடு தொடர்புடைய எல்லாத் தரப்பினரதும், பொறுப்புக்களையும், உரிமைகளையும், அவர்களுக்கு இடையிலான தொடர்புகளையும் வரையறுக்கின்றன.[2]
Remove ads
பகுதிகள்
கட்டுமான ஆவணம் என்பது உண்மையில் பல ஆவணங்களின் ஒரு தொகுப்பு. இத்தொகுப்பில்,
- ஒப்பந்தப் படிவங்கள்
- திட்டப் படிவங்கள்
- ஒப்பந்த நிபந்தனைகள்
- வரைபடங்கள்
- விபரக்கூற்று
முதலிய ஆவணங்கள் அடங்கியிருப்பது வழக்கம்.
ஒப்பந்தப் படிவங்கள்
வழங்கல் அறிவிப்பு, ஒப்பந்தம், ஒப்பந்த இணைப்பு என்பவையே ஒப்பந்தப் படிவங்கள் எனப்படுகின்றன. இதில் "வழங்கல் அறிவிப்பு" என்பது வெற்றிபெறும் கேள்விதாரர்களுக்கு இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு உரிமையாளர் எண்ணியுள்ளார் என்பதை எடுத்துக்கூறும் எழுத்துமூல ஆவணம். "ஒப்பந்தம்" என்பது, கட்டுமான வேலையை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைய நிறைவேற்றுவதற்காக உரிமையாளருக்கும், ஒப்பந்தகாரருக்கும் இடையில் கையெழுத்தாகும் சட்டபூர்வ ஆவணம். உரிமையாளருக்கும், ஒப்பந்தகாரருக்கும் இடையேயுள்ள தொடர்புகளையும், அவர்களுடைய கடமைகளையும் இந்த ஆவணம் வரையறுக்கிறது.
திட்டப் படிவங்கள்
செய்திறப் பிணை (Performance Bond), கட்டணம் செலுத்தற்பிணை (Payment Bond) போன்ற பிணைகளும், காப்புறுதிச் சான்றுப்பத்திரம் போன்றவையும் இதற்குள் அடங்குகின்றன.
ஒப்பந்த நிபந்தனைகள்
ஒப்பந்த வரைவிலக்கணங்கள், பொது ஒப்பந்த நிபந்தனைகள், சிறப்பு ஒப்பந்த நிபந்தனைகள் என்பவை அடங்கியதே ஒப்பந்த நிபந்தனைகள் என்னும் ஆவணம். இது ஒரு முக்கியமான ஆவணம். இதன் மூலமே கட்டுமான ஆவணத் தொகுப்பில் உள்ள பிற ஆவணங்கள் சட்ட வலுவைப் பெறுகின்றன எனலாம். பல்வேறு உயர்தொழில் அமைப்புகள் பல்வேறு வகையான கட்டுமான ஒப்பந்தங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் பொதுவான ஒப்பந்த நிபந்தனைகளை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் கட்டுமானத்துறையில் ஒப்பந்தங்களுக்கான நியமங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான ஒப்பந்த நியமங்களை வெளியிட்டுள்ள அமைப்புக்களுள், பொறியியல் அறிவுரைஞர்களுக்கான பன்னாட்டுக் கூட்டமைப்பு (FIDIC), பொறியாளர்களின் ஒப்பந்த ஆவணங்களுக்கான கூட்டுக்குழு (EJCDC), அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் சங்கம் (AIA) போன்றவை முக்கியமானவை.
இவ்வாறான நியம ஒப்பந்த வடிவங்களைப் பயன்படுத்தும்போது பொது ஒப்பந்த நிபந்தனைகள் என்னும் ஆவணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவது இல்லை. ஆனால் குறித்த கட்டுமானத் திட்டம் தொடர்பில் ஒப்பந்த நிபந்தனைகளில் செய்யவேண்டிய மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் சிறப்பு ஒப்பந்த நிபந்தனைகள் என்னும் ஆவணத்தின் மூலம் செய்யப்படுகின்றன. அதாவது, குறித்த திட்டத்துக்குச் சிறப்பாகத் தேவையான நிபந்தனைகளையும், பொது ஒப்பந்த நிபந்தனைகளில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் சிறப்பு ஒப்பந்த நிபந்தனைகள் ஆவணத்தில் காணமுடியும்.
வரைபடங்கள்
வரைபடங்கள், கட்டுமான ஆவணத்தில் அடங்கியுள்ள வரைய ஆவணம் ஆகும். சம்பந்தப்பட்ட கட்டிடம் அல்லது அமைப்பின் அளவுகள், பல்வேறு கூறுகளின் அமைவிடங்கள், அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் போன்ற விபரங்களை வரைபடங்கள் விளக்குகின்றன. கட்டுமான ஆவணங்களில், உருவாக்குவதற்கு அதிக வளங்களைப் பயன்படுத்துவதும், அதிக நேரம் எடுப்பதும் வரைபடங்களே.
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads