கதலின் கரிக்கோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதலின் கரிக்கோ (Katalin Karikó, அங்கேரியம்: Karikó Katalin; பிறப்பு: 17 சனவரி 1955) என்பவர் அங்கேரிய-அமெரிக்க உயிர்வேதியியல் நிபுணர் ஆவார். இவர் இரைபோ கருவமிலம் சார்ந்த பொறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] புரத சிகிச்சைகளுக்கான செயற்கைக் கல முறை - தூதாறனை மற்றும் ஆர். என். ஏ. படியெடுப்பு ஆய்விற்காக அறியப்படுகிறார். இவர் 2006 முதல் 2013 வரை ஆர்.என். ஏ. ஆரெக்சு (RNARx)-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக இருந்தார்.[2]
2013ஆம் ஆண்டு முதல், இவர் பயோஎன்டெக் (BioNTech) ஆர்.என்.ஏ. மருந்தகங்களுடன் தொடர்புடையவர். இந்நிறுவனத்தில் முதலில் துணைத் தலைவராகவும், பின்னர் 2019-ல் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.[3] இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் உள்ளார்.[2] செட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.[4]

கரிக்கோவின் ஆய்வுப் பணியில் ஆர்என்ஏ-தொடர்புடைய நோயெதிர்ப்பு செயல்பாடு அடங்கும். இதன் விளைவாக அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணர் இட்ரூ வெய்ஸ்மேனுடன் இணைந்து இரைபோ கருவமில நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் நியூக்ளியோசைடு மாற்றங்களை கண்டுபிடித்தார்.[5][6][7] இது தூதாறனையின்சிகிச்சை பயன்பாட்டிற்கு மேலும் பங்களித்ததாகக் கருதப்படுகிறது.[8] வைஸ்மேனுடன் சேர்ந்து, நோயெதிர்ப்பு சக்தியற்ற, நியூக்ளியோசைட் மாற்றியமைக்கப்பட்ட ஆர்என்ஏவைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க காப்புரிமையைப் பெற்றுள்ளார். இந்த தொழில்நுட்பம் பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவால், இவர்களின் புரத மாற்று தொழில்நுட்பங்களை உருவாக்க உரிமம் பெற்றுள்ளது. ஆனால் இவர்களின் ஆய்வு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.[9]
தூதாறனை தொடர்பான பணிக்காக, கரிக்கோ மற்றும் வெய்சுமேன் ஆகியோர் 2023 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, லாஸ்கர்-டெபக்கி மருத்துவ மருத்துவ ஆராய்ச்சி விருது, டைம் பத்திரிகையின் 2021ஆம் ஆண்டின் ஹீரோ மற்றும் 2022ஆம் ஆண்டில் உயிர் மருந்து அறிவியலில் தாங் பரிசு விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றனர்.
Remove ads
இளமையும் கல்வியும்
கரிக்கோ, அங்கேரியில் உள்ள கிசுஜ்சால்லாசில் தண்ணீர், குளிர்சாதனப் பெட்டி அல்லது தொலைக்காட்சி போன்ற வசதிகள் இல்லாத ஒரு சிறிய ஏழை வீட்டில் பிறந்து வளர்ந்தார்.[10] இவரது தந்தை ஒரு கசாப்புக் கடைக்காரர். தாயார் ஒரு புத்தகக் காப்பாளர்.[10][11] இவர்களது குடும்பத்தினர் அங்கேரியில் உள்ள சீர்திருத்தத் தேவாலயத்தின் உறுப்பினர்களாக இருந்தனர்.[12] கரிக்கோ தனது ஆரம்பக் கல்வியின் போது அறிவியலில் சிறந்து விளங்கினார். உயிரியல் போட்டியில் நாட்டில் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.[10] இவர் மோரிக்சு சிக்மாண்ட் சீர்திருத்த உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[13]
செஜ்ட் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தினைப் பெற்ற பிறகு, கரிக்கோ அங்கேரியின் உயிரியல் ஆராய்ச்சி மையமான உயிர்வேதியியல் நிறுவனத்தில் தனது ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்ட மேலாய்வினைத் தொடர்ந்தார்.[14] 1985-ல், தொடர்ந்து ஆய்வினை மேற்கொள்ள ஆய்வகத்தில் நிதியில்லாததால் தனது கணவர் மற்றும் இரண்டு வயது மகளுடன் அங்கேரியிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றார்.[10] அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த போது, இவர்கள் கரடி பொம்மையுடன் தங்கள் காரை விற்றுப் பெற்ற £900[15][16] பணத்துடன் வந்தனர்.[17]
Remove ads
ஆய்வுப் பணி
1985 மற்றும் 1988க்கும் இடையில், பிலடெல்பியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்விலும் பெதஸ்தாவில் உள்ள சீருடைபணியாளர் சேவை சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, கரிக்கோ எய்ட்ஸ், இரத்தம் தொடர்பான நோய்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகள் இரட்டை இழையப்பட்ட ஆர்.என்.ஏ. மூலம் சிகிச்சையளிக்கப்பட்டனர். இந்த நேரத்தில், இது முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இரட்டைஇழை ஆர்.என்.ஏ. மூலம் இண்டர்பெரான் தூண்டலின் மூலக்கூறு வழிமுறை அறியப்படவில்லை. இருப்பினும் இன்டர்பெரானின் தீநுண்மி தடுப்பு மற்றும் ஆன்டினோபிளாஸ்டிக் விளைவுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டன.[18]
1989-ல், இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். தூதாறனை தொடர்பான ஆய்வினை இருதயநோய் நிபுணர் எலியட் பர்நாதனுடன் [10] 1990-ல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் மருத்துவப் பள்ளியின் துணைப் பேராசிரியராக இருந்தபோது, கரிக்கோ தனது முதல் ஆய்வு நிதி விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். இதில் இவர் தூதாறனை அடிப்படையிலான மரபணு சிகிச்சையை மேற்கொள்ள கருத்துருவினை முன்மொழிந்திருந்தார்.[3]
அப்போதிருந்து, தூதாறனை அடிப்படையிலான சிகிச்சையானது கரிக்கோவின் முதன்மை ஆராய்ச்சி ஆர்வமாக இருந்தது.[10] கரிக்கோ பேராசிரியை ஆவதற்கான தகுதியுடன் இருந்தபோதிலும் ஆய்வுக்கான நிதி கிடைக்காததால் 1995-ல் பல்கலைக்கழகத்தால் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.[9] இதன் பின்னர் தொடர்ந்து இங்கேயே பணியிலிருந்தார். 1997-ல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்புத் துறை பேராசிரியரான ட்ரூ வெய்ஸ்மேனை சந்தித்தார்.[19] இவரது விடாமுயற்சி கல்வி ஆராய்ச்சி பணி நிலைமைகளின் விதிமுறைகளுக்கு எதிராக விதிவிலக்கானதாகக் குறிப்பிடப்பட்டது.[20]
ஒரு பரிசோதனையில் கட்டுப்பாடாகப் பயன்படுத்தப்படும் பரிமாற்ற ஆர்என்ஏ ஏன் தூதாறனையில் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டவில்லை என்பதில் கவனம் செலுத்தியபோது கரிக்கோவின் முக்கிய ஆய்விற்கு அடித்தளம் ஏற்பட்டது.[11] தூதாறனையினை நோயெதிர்ப்பு சக்தியற்றதாக மாற்றுவதற்கான இவர்களின் முக்கிய கண்டுபிடிப்பு முக்கிய ஆய்விதழ்களான நேச்சர் மற்றும் சயின்சு ஆகியவற்றால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் முக்கிய வெளியீடு "இம்யூனிட்டி" ஆய்விதழில் வெளியானது.[5]
தூதாறனையில் குறிப்பிட்ட நியூக்ளியோசைடின் மாற்றங்கள் எவ்வாறு நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்க வழிவகுத்தன என்பதை கரிக்கோ மற்றும் வெய்ஸ்மேன் தொடர் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விவரித்தனர்.[19] இவர்கள் நிறுவனம் ஒன்றை நிறுவினர். 2006 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில், தூதாறனை தீநுண்மி எதிர்ப்பு நோயெதிர்ப்பு மறுமொழியைக் குறைக்க பல மாற்றியமைக்கப்பட்ட நியூக்ளியோசைடுகளைப் பயன்படுத்துவதற்கான காப்புரிமையைப் பெற்றனர். பல்கலைக்கழகம் அறிவுசார் சொத்து உரிமத்தை ஆய்வக விநியோக நிறுவனத்தின் தலைவரான கேரி டாலுக்கு விற்றது. இறுதியில் இது செல்சுகிரிப்டிடம் சென்றது.[21] இதன் பின்னர், மாடர்னாவை ஆதரிக்கும் மூலதன நிறுவனமான பிளாக்சிப் பயோனியர், காப்புரிமைக்கான உரிமம் பெற இவரைத் தொடர்புகொண்டது. தங்களிடம் இல்லை என்பதே கரிக்கோவின் பதிலாக இருந்தது.[3]
2006ஆம் ஆண்டில், கதலின் கரிக்கோ உயிரி வேதியியலாளர் இயன் மக்லாச்லனை அணுகி, இயனுடன் வேதியியல் ரீதியாக மாற்றப்பட்ட தூதாறனையில் பணியாற்றினார்.[22] ஆரம்பத்தில், மேக்லாச்லனும் டெக்மிராவும் ஒத்துழைப்பிலிருந்து விலகினர். கரிக்கோ இயன் மக்லாச்லனுடன் இணைந்து கொள்ள விரும்பினார். ஏனெனில் அவர் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவிய குழுவின் தலைவராக இருந்தார். கரிக்கோ கலவை செயல்முறையின் மூலம் அடர்த்தியான துகள்களில் எம்ஆர்என்ஏவை இணைக்கும் வடிவமைக்கப்பட்ட கொழுப்பு மீநுண்துகள்கள் விநியோக முறையை நிறுவுவதில் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.[23]
2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இரத்தநாள உள்படல வளர்ச்சி காரணி தூதாறனை உருவாக்க அசுட்ராஜெனெகாவுடன் மாடர்னாவின் $240 மில்லியன் ஒப்பந்தத்தைப் பற்றி கரிக்கோ கேள்விப்பட்டார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தூதறானையுடன் தனது அனுபவத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு தனக்குக் கிடைக்காது என்பதை கரிக்கோ உணர்ந்தார். இதனால் கரிக்கோ பயோஎன்டெக் ஆர்என்ஏ மருந்தக துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.[3] பின்னர் 2019-ல் இதன் மூத்த துணைத் தலைவரானார்.[24]
தூதறானை அடிப்படையிலான மரபணு சிகிச்சை, ஆர்என்ஏ-தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு எதிர்வினைகள், குருதி ஊட்டக்குறை சகிப்புத்தன்மையின் மூலக்கூறு அடிப்படைகள் மற்றும் மூளை குருதி ஊட்டக் குறைபாட்டு சிகிச்சை ஆகியவை இவர் கவனம் செலுத்திய ஆராய்ச்சி சிறப்புகளில் அடங்கும்.
Remove ads
விருதுகளும் கவுரவங்களும்

கதலின் கரிக்கோ உருவாக்கிய தூதறனை அடிப்படையிலான தொழில்நுட்பம் மற்றும் அதை அடிப்படையாகக் கொண்ட இரண்டு மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள், பயோஎண்டெக்/பைசர் மற்றும் மடோர்னா ஆகிய நிறுவனங்களால், உலகளவில் சார்சு-கோவிட்-2 தீநுண்மிகளுக்கு எதிரான பயனுள்ள மற்றும் வெற்றிகரமான போராட்டத்திற்கான அடிப்படையை உருவாக்கியுள்ளன. கோவிட் பெருந்தொற்று-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவியது..[25][26] 2023ஆம் ஆண்டில், தூதறனைபற்றிய இவரது ஆராய்ச்சிக்காக கரிக்கோ தேசிய கண்டுபிடிப்பாளர்கள் வாழ்த்தரங்க உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.[27] இவர் அக்டோபர் 2, 2023 அன்று, ட்ரூ வெய்சுமேனுடன் சேர்ந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.[28]
உயிர் வேதியியலில் இவரின் முன்னோடி மற்றும் உலகளவில் குறிப்பிடத்தக்க பணிகளுக்காக 110க்கும் மேற்பட்ட பன்னாட்டு விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கரிக்கோ பெலா பிரான்சியாவை மணந்தார். இவர்களுடைய மகள் இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சூசன் பிரான்சியா ஆவார்.[8] இந்த இணையரின் பேரன், அலெக்சாண்டர் பியர் அமோசு, அமெரிக்காவில் பிறந்தார். பிப்ரவரி 2021-ல் இவர்களின் மகள் மற்றும் மருமகனான கட்டிடக் கலைஞர் ரியான் அமோசுவின் குழந்தையும் காரிகோவின் பேரன் பிறந்தபோது அவர்களுடன் அமெரிக்காவில் கரிக்கோ இருந்தார்.[29][30]
ஊடகங்களில்
ஏப்ரல் 2021-ல், த நியூயார்க் டைம்ஸ் கரிக்கோவின் வாழ்க்கை கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட தூதறனை தடுப்பூசிகளுக்கான அடித்தளத்தை அமைத்தது குறித்து செய்தி வெளியிட்டு இருந்தது.[11] சூன் 10, 2021 அன்று, தி நியூயார்க் டைம்ஸின், வலையொலி, கரிக்கோவின் வாழ்க்கையை சிறப்பித்துக் காட்டியது. இவரது பணி அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு இவர் கடந்து வந்த பல சவால்களை விளக்கியது இக்கட்டுரை.[31]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads