கழைக்கூத்து

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கழைக்கூத்து (Acrobatics) என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிறில் நடந்து வித்தை காட்டும் கூத்து. கழை என்பது மூங்கில்களிகளைக் குறிக்கும் வார்த்தை. அதனால்தான் இக்கூத்துக்கு கழைக்கூத்து என்ற பெயர் வந்தது.[1][2]

இந்தியாவில் கழைக்கூத்து

இக்கலை வடநாட்டில் இருந்து வந்த கலை என்பதால் இதை ஆரியக்கூத்து என்றும், ஆரியக்கழைக்கூத்து என்றும் அழைக்கிறார்கள். இக்கலையை நடத்திக் காண்பவர்களை கழைக்கூத்தாடிகள் என்பர்.

"ஆரியக்கூத்து" என்பது வடநாட்டிலிருந்து வந்ததால் அல்ல என்றும், "ஆர் எக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாயிரு" என்ற பழமொழியில் 'ஆர் எக்கூத்து' என்ற சொற்றொடர் காலப்போக்கில் ஆரியக்கூத்து என மருவியதாகவும் சொல்வர்.

இசை

இக்கலையில் இசை கூட்டம் சேர்க்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கு தவில் அல்லது தட்டு மற்றும் சிறு ஊதுகுழல் பயன்படுத்துவார்கள்.

கூத்துப்பயிற்சி

குழந்தைகளுக்கு 2 வது மாதத்திலேயே கூத்துப்பயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். தலையே நிமிராத இரண்டு மாதக் குழந்தையை ஒரு கையால் தூக்கி, மேலே நிறுத்துவது தான் முதல்கட்டப் பயிற்சி. கீழே கிடத்தி வயிற்றில் ஏறி மிதிப்பது, குழந்தையின் வயிற்றில் கயிற்றைக் கட்டி, ஊஞ்சல் போல ஆட்டுவது என பயிற்சிகள் நீள்கின்றன.

இந்தக் கூத்தை பெரும்பாலும் மணற்பாங்கான இடத்தில் தான் நடத்துகிறார்கள். இக்கூத்து நிகழ்த்த 9 மீட்டர் உயரத்தில் இருந்து 18 மீட்டர் வரை உயரம் உள்ள 4 வலிமையான மூங்கில்கள் தேவை. முந்தைய காலங்களில் இதைவிட அதிக உயரமுள்ள குச்சிகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். இரண்டு கம்புகளை பெருக்கல் குறிபோல இருபுறமும் நட்டு வைத்து, கயிற்றால் இணைப்பார்கள். கம்புகள் அசையாமல் இருக்க மாட்டுத்தோலால் செய்யப்பட்ட கயிறைக்கொண்டு கட்டி, பூமியில் இரும்புக் கம்பியை நட்டுக் கட்டி விடுவார்கள். நடப்பதற்கு வசதியாக மேலே உள்ள கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். கூத்துத் தொடங்குவதைக் குறிக்கும் விதத்தில் தட்டு அல்லது தவில் இசைப்பார்கள். தொடக்கத்தில் சில வித்தைகாட்டும் விளையாட்டுக்கள் செய்வார்கள். தரையில் கிடக்கும் ஊசியை கண்களால் எடுப்பது, கண்ணைக் கட்டிக்கொண்டு பெண்கள் மேல் கத்தியை வீசுவது, கர்ணம் அடிப்பது, கயிற்றில் நடப்பது என இக்கலை நீளும். கயிற்றில் நடப்பது பெரும்பாலும் பெண்கள் தான். இப்போது இக்கலை அவ்வளவாக நடைமுறையில் இல்லை.

கழைக்கூத்தாடிகள்

Thumb
கழைக்கூத்து குடும்பம்

கழைக்கூத்துக் கலைஞர்கள் கழைக்கூத்தாடிகள் என அழைக்கப்படுவர். இவர்கள் தங்களை தொம்பன் என தமிழ்நாட்டில் அழைத்துக் கொள்கின்றனர். இவர்களின் பூர்வீகம் குஜராத். குஜராத்தின் பூர்வகுடிகளான தோம்பரா மக்களின் பாரம்பரிய கலைதான் கழைக்கூத்து. தோம்பராக்கள் காட்டுநாயக்கர்களின் ஒரு பிரிவு என்ற கருத்து உண்டு. இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களை ரெட்டி, டொம்பரர்கள் என்றும் அழைப்பார்கள். குஜராத், இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டதால், சீவனம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவர்கள் ஆந்திரம் வழியாக தமிழகம் வந்து அடைக்கலமானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிதறி வாழ்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 500 கூத்தாடிக் குடும்பங்கள் இருக்கலாம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இவர்கள் முழுக்க, முழுக்க இந்தக் கலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே இக்கலையை அறிந்து வைத்திருப்பார்கள். அதனால் இதை குடும்பக்கலை என்றும் அழைப்பதுண்டு.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads