காய்ச்சல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (fever) எனப்படுகின்றது. மனிதனுடைய உடல் வெப்பநிலை பொதுவான 98.6 பாகை F. (37 பாகை C.) இலும் அதிகமாகும்போது, காய்ச்சல் இருப்பதாகக் கொள்ளப்படலாம் ஆயினும், 100.4 பாகை F. (38 பாகை C.) அளவுக்கு வெப்பநிலை உயரும்வரை ஒருவருக்குக் குறிப்பிடத்தக்க அளவில் காய்ச்சல் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.
காய்ச்சல் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடல் வெப்பநிலை உயர்வதனால், பல நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. எனினும், இத்தகைய காய்ச்சல்கள், வேறு பிரச்சினைகளுக்குரிய நோய்க்குறித் தொகுப்புகளுடன் (symptoms) சேர்ந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகின்றது. 100.4 பாகை F. வெப்பநிலைக்கு மேல் காய்ச்சல் ஏறும்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. சன்னி, வலிப்பு முதலியவை ஏற்படக்கூடும். இத்தகைய காய்ச்சல்களுக்கு உடனடியான மருத்துவ உதவி தேவை.
காய்ச்சலைக் குறைப்பதற்குப் பயன்படும் மருந்துகள் காய்ச்சலடக்கிகள் எனப்படுகின்றன. பாராசித்தமோல், ஆஸ்பிரின் போன்றவை இவற்றுள் அடங்கும்.
காய்ச்சலைச் செயற்கையாக உண்டாக்குவதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறையும் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த மருத்துவரான ஜூலியஸ் வாக்னர் வொன் ஜோரெக் (Julius Wagner von Jauregg) (1857-1940) என்பவர் இந்த முறையை அறிமுகப்படுத்தினார். எனினும் தற்காலத்தில் இம்முறை பயன்படுத்தப்படுவதில்லை.
அதிக காய்ச்சல் இருந்து குணமாகிய நோயாளிகள் சிலருக்கு, இதனுடன் சம்பந்தப்படாத நோய்கள் சில தணிந்திருக்கவும், சில சமயம் முற்றாகவே குணமாகியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads