கார்பனோராக்சைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்பன் மோனாக்சைடு அல்லது கார்பன் ஓராக்சைடு (இலங்கை வழக்கு: காபனோரொட்சைட்டு, ஆங்கிலம்: Carbon monoxide, CO) என்பது காற்றை விட இலேசானதும், நிறம், மணம், சுவை ஏதுமில்லாததும் ஆன ஒரு வளிமம் ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு கரிம அணுவும் ஆக்சிசன் அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். ஒரு கார்பன் அணுவுடன் ஓர் ஆக்சிசன் அணு முப்பிணைப்பால் இணைந்து கார்பன் மோனாக்சைடு உருவாகும்[1]. கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும். இங்கு கார்பன் ஒக்சிசனோடு மும்மைப் பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பங்கீட்டுப் பிணைப்புகளும், ஒரு ஈதற் பங்கீட்டுப் பிணைப்பும் உள்ளன.
Remove ads
உருவாகும் சந்தர்ப்பங்கள்
CO ஆனது பெருமளவில் இயற்கையான செயற்பாடுகளாலேயே உருவாகிறது. மாறன் மண்டலத்தில் நடைபெறும் ஒளியிரசாயனத் தாக்கங்கள் காரணமாக ஒவ்வொரு வருடமும் 5 x 1012kg CO உருவாகிறது. எரிமலை வெடிப்புக்கள், காட்டுத்தீக்கள் போன்றவற்றாலும் உருவாகின்றது. குறை தகனத்துடன் தொடர்புபட்ட மனித செயற்பாடுகள் CO ஐ உருவாக்கும். சாதாரண அடுப்புகள், நிலக்கரி அனல் மின் நிலையங்கள், வாகனங்களில் ஏற்படும் குறை தகனம், குப்பைகளை எரித்தல் போன்றவற்றால் உருவாகும். இரும்பு உற்பத்தியின் போது பிரதான தாழ்த்தும் கருவியாக CO தொழிற்படுவதால் அங்கிருந்தும் ஓரளவு CO வெளியிடப்படுகின்றது. அலுமினிய உற்பத்தியிலும் அனோட்டாக உள்ள காரியம் அனோட்டில் உருவாகும் ஒக்சிசனுடன் தாக்கமுற்று CO உருவாகும். டைட்டானிய உலோக உற்பத்தியிலும் CO உருவாகின்றது. சாதாரண மனித உடலில் நரம்புச் செலுத்தியாக CO உருவாக்கப்பட்டுத் தொழிற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சில மருத்துவத் தேவைகளுக்கு மருந்தாக CO பயன்படுத்தப்படுகிறது. எனினும் அதிகளவு CO விஷமாகும். சில மெத்தேனாக்கும் பக்டீரியாக்களால் காபனோரொக்சைட்டு போசணைப் பொருளாகப் பயன்படுவதால் வளிமண்டலத்தில் இவ்வாயு நீண்ட காலம் தேங்குவதில்லை.
Remove ads
மூலக்கூற்றியல்
CO 28 g/mol மூலர் திணிவுடையது. இது வளியின் 28.8 g/mol ஐ விடக் குறைவு என்பதால் இது வளியை விட அடர்த்தி குறைவான வாயு ஆகும் (சம வெப்ப, அமுக்க நிபந்தனைகளில்). CO இல் உள்ள மும்மைப் பிணைப்பே அறியப்பட்டதில் மிக வலிமையான பிணைப்பாகும். இது 1072 kJ/mol எனும் மிக உயர் பிணைப்புச் சக்தியைக் கொண்டுள்ளது. இது நைதரசன் வாயுவை ஒத்த உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது. (68, 82 கெல்வின்) ஈதற் பங்கீட்டுப் பிணைப்பு உருவாகும் போது கார்பன் அணுவில் மறை ஏற்றமும், ஒக்சிசன் அணுவில் நேர் ஏற்றமும் உருவாகும். எனினும் ஒக்சிசன் கார்பனை விட மின்னெதிரான மூலகம் என்பதால் ஒக்சிசன் இலத்திரன்களைக் கவர்ந்து அதன் நேரேற்றத்தைக் குறைத்துக்கொள்ளும். நிகரமாக கார்பனில் சிறிய மறையேற்றமும், அதற்குச் சமனான சிறிய நேரேற்றம் ஒக்சிசன் அணுவிலும் எஞ்சியிருக்கும். இதனால் நிகர இருமுனைவுத் திருப்புத் திறனாக 0.122 D உள்ளது.
Remove ads
நச்சுத்தன்மை
இவ்வாயு நிறமற்று, மணமற்று, சுவையற்று இருப்பதால் இவ்வாயு வளியில் சேர்ந்தாலும் அதை எம்மால் உணர முடியாது. எனினும் புகையுடன் எரியும் நெருப்பில் இவ்வாயுவும் உருவாகும் என்பதால் புகையைக் கொண்டு அவதானிக்கலாம். தனியே இவ்வாயு மட்டும் வெளிவரின் அவதானிக்க முடியாது. உட்சுவாசிக்க நேர்ந்தால் இவ்வாயு மிக அதிக நச்சுத் தன்மையை உருவாக்கும்[2]. இது குருதியில் ஒக்சிசனைக் காவும் புரதமான ஈமோகுளோபினில் ஒக்சிசன் இணையும் தானத்தில் நிரந்தரமாக இணைவதால் குருதியில் ஒக்சிசன் காவும் கொள்ளளவு குறைவடையும். CO ஈமோகுளோபினுடன் இணைந்து உருவாக்கும் சேர்வை காபொக்சி ஈமோகுளோபின் எனப்படும். வளியில் 667 ppm செறிவில் காபனோரொக்சைட்டு உள்ள போதே உடலில் ஈமோகுளோபினின் 50% காபொக்சி ஈமோகுளோபினாக மாற்றப்பட்டு விடும். ஒக்சிசனை விட CO க்கு ஈமோகுளோபின் மிக அதிக நாட்டம் கொண்டுள்ளதாலேயே 210000 ppm செறிவில் உள்ள ஒக்சிசன் COக்கு முன்னால் தோற்றுப் போகிறது. உடற் கலங்கள் ஒக்சிசன் பற்றாக்குறையால் இறப்பதே CO மரணத்தை ஏற்படுத்தும் பிரதான வழியாகும். ஆரம்பத்தில் களைப்பு, தலை வலி, தலைச் சுற்றல், வாந்தித் தன்மை போன்ற உணர்வுகள் ஏற்படும். கர்ப்பமாக உள்ள தாய்மாரின் முதிர் மூலவுருவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சு வாயுவாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads