கால்வினும் ஆபுசும்

From Wikipedia, the free encyclopedia

கால்வினும் ஆபுசும்
Remove ads

கால்வினும் ஆபுசும் (Calvin and Hobbes, கால்வின் அண்ட் ஹாப்ஸ்) பில் வாட்டர்சனால் உருவாக்கப்பட்ட ஒரு ஆங்கிலப் படக்கதை. நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பட்டு பின்னர் நூல்வடிவிலும் வெளியானது. இது கால்வின் என்ற கற்பனை வளமிக்க ஆறு வயது சிறுவன், ஆபுசு என்ற அவனது பொம்மைப்புலி ஆகிய இரு புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு வரையப்பட்ட படக்கதையாகும். இந்தப் பாத்திரங்களின் பெயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சான் கால்வின் என்ற பிரெஞ்சு மறுமலர்ச்சி இறையியலாளர், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமசு ஆபுசு என்ற ஆங்கிலேய அரசியல் மெய்யியலாளர் ஆகியோரின் பெயர்களைத் தழுவி அமைக்கப்பட்டன.[1]

விரைவான உண்மைகள் கால்வினும் ஆபுசும்Calvin and Hobbes, எழுதியவர்(கள்) ...

இப்படக்கதை நவம்பர் 18, 1985 - திசம்பர் 31, 1995 காலகட்டத்தில் நாளிதழ்களில் தொடராக வெளியானது. இப்படக்கதை புகழின் உயரத்தில் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமாக 2,400 நாளிதழ்களில் வெளிவந்தது. தவிர, இதுவரை பதினெட்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டு அவை 4.5 கோடி படிகளுக்கும் மேல் அச்சாகியுள்ளன.[2] வாட்டர்சன் தனது படக்கதையை ஒரு கலை வடிவமாகக் கருதியபடியாலும் விளம்பரத்தை விரும்பாததாலும் இப்படக்கதையை மையப்படுத்திய பொருட்களை விற்பதைத் தடுத்துவிட்டார்.[3] எனினும் அவரது அனுமதியின்றி கால்வின் மற்றும் ஆபுசின் படங்கள், படக்கதையின் வாசகங்கள் போன்றவற்றைப் பொறித்த பல போலிப்பண்டங்கள் விற்கப்படுகின்றன.

Remove ads

வரலாறு

வாட்டர்சன் தான் விரும்பாத[4] ஒரு விளம்பரப் பணியில் ஈடுபட்டிருக்கையில் நேரம் கிடைக்கும்போது தன் சொந்த விருப்பத்தின் பேரில் படக்கதைகள் வரையத் துவங்கினார். பல கதைக்கருக்களை படக்கதைகளுக்கான பதிப்புரிமைத் தரகர்களிடம் அனுப்பியதில் அவர்கள் எதையும் ஏற்கவில்லை. இறுதியாக ஒரு நிறுவனம் ஒரு முதன்மைப் பாத்திரத்தின் தம்பி மற்றும் அவனது பொம்மைப்புலி ஆகியவை நல்ல அழுத்தமான பாத்திரங்கள் என்றும் இவற்றைக் கொண்டு ஒரு படக்கதையை வளர்த்தெடுக்கலாமென்றும் தெரிவித்தனர். ஆனால், வாட்டர்சன் இப்பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கிய படக்கதையை[5] அவர்கள் ஏற்கவில்லை. பல மறுப்புகளுக்குப் பின்னர் வேறு நிறுவனமான யுனைட்டடு பிரசு சிண்டிகேட்டு அவரது படக்கதையை ஏற்றது.[3][6]

1985-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் முதல் முறையாக வெளிவந்த அப்படக்கதை விரைவில் பெரும் வெற்றியைக் கண்டது. ஒரே ஆண்டில் 250 நாளிதழ்களுக்கும் மேலானவை கால்வினும் ஆபுசும் படக்கதையைப் பதிப்பிக்கத் துவங்கின. அமெரிக்காவில் வெற்றியடைந்த பின்னர் வெகு விரைவில் பிற நாடுகளிலும் இக்கதை வெளியாகத் தொடங்கியது. இக்கதைக்காக இருமுறை (1986 மற்றும் 1988) வாட்டர்சனுக்கு அமெரிக்காவின் தேசிய கேலிப்பட கலைஞர்களின் கூட்டமைப்பு வழங்கும் சிறந்த கேலிப்படக் கலைஞர் விருது (ரூபன் விருது) கிடைத்தது. 1992 இல் மூன்றாம் முறையாக இதே விருதுக்கு வாட்டர்சன் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 1988இல் இதே அமைப்பு வழங்கும் சிறந்த நகைச்சுவை படக்கதைக்கான விருதும் "கால்வினும் ஆபுசும்" கதைக்கு வழங்கப்பட்டது.[7] இவற்றைத் தவிர பல்வேறு நாடுகளில் கேலிப்படக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் பல விருதுகளையும் வாட்டர்சன் வென்றுள்ளார்.

1985 முதல் 1995 வரை இப்படக்கதை வெளியானது. இக்காலகட்டத்தில் இருமுறை (1991 மே -1992 பெப்ரவரி; ஏப்ரல் -திசம்பர் 1994) வாட்டர்சன் புதிய படங்கள் வரையாமல் இடைவெளி விட்டார். பின்னர் 199 இல் திடீரென அவ்வாண்டு இறுதியுடன் தான் இப்படக்கதையை முடித்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார். 1995 திசம்பர் 31 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று கால்வினும் ஆபுசும் படக்கதையின் 3,160 ஆவதும் இறுதியானதுமாகிய படம் வந்தது.[2] அன்று புதிதாய் விழுந்திருந்தப் பனியில் கால்வினும் ஆபுசும் பனிச்சறுக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கையில் கால்வின் "நண்பா, வா, இந்த வியத்தகு உலகைச் சென்று ஆராய்வோம்" என்று சொல்வதாக அமைந்து நிறைவுற்றது.[8] அத்துடன், ஒரு விமர்சகரின் பார்வையில், "படக்கதைப் பக்கங்களில் வேறு எந்தவொரு தொடரும் நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டு விட்டது."[9]

Remove ads

நடை தாக்கங்கள்

Thumb
நடை, பாணி தாக்கங்கள்

அடர்த்தியாக நிரப்பப்படாமல், அதே வேளையில், நுணுக்கமாக வடிவமைத்த, அறிவார்ந்த நகைச்சுவை, ஆழமான உன்னிப்பான நோக்கல்கள், கூர்மையான நக்கலான குமுக மற்றும் அரசியல் கிண்டல்கள், நன்கு வளர்த்தெடுத்த பாத்திரங்கள் ஆகியன கால்வினும் ஆபுசும் படக்கதையின் குறிப்படத்தக்க பண்புகள். கால்வினின் கற்பனை உலகு போன்று பார்னபி, பீநட்சு, சுகிப்பி, புளூம் கவுன்ட்டி, கார்ஃபீல்டு, கிரேசி காட் போன்ற பிற வரைகதைத் தொடர்களில் ஏற்கெனவே பயன்படுத்தியுள்ளனர். வாட்டர்சனின் சமூக-அரசியல் கருத்தாடல்கள் போன்று போகோ, மஃபால்டா போன்ற பிற படக்கதைகளில் வந்துள்ளன. பீநட்சின் ஆக்குனர் சுல்சு மற்றும் போகோவை உருவாக்கிய கெல்லி ஆகியோர் வாட்டர்சனின் இளவயதில் படக்கதைகள் பற்றிய எண்ணம் வடிவமைகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.[6]

பலவாறானவும் பல வேளைகளில் மிகைப்படுத்தப்பட்டும் அமைந்த பாத்திரங்களின் முக வெளிப்பாடுகள், மிகுந்த ஏற்பாட்டுடன் கூடிய, வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பின்புலத்துடன் கூடிய கால்வினின் புனைவு, படக்கதைச் சட்டங்களில் நன்கு கவரப்பட்ட நகர்வுகள், சொற்களுக்கும் அப்பால் படங்களில் அமைந்த நகைச்சுவை மற்றும் உருவகங்கள் ஆகியன வாட்டர்சனின் கலையில் கவனிக்கத்தக்கவை. பின்னாளில், வாட்டர்சன் தனது படக்கதைக்குக் கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டிருக்கையில் பல்வேறு அளவுகளிலான சட்டங்கள், பல்வேறு வரைகலை உத்திகள், உரையாடல்களே இல்லாத கதைகள், வெற்றிடத்தின் மேம்பட்ட பயன்பாடு ஆகியவற்றை வெள்ளோட்டம் விட்டு ஆய்வு செய்துள்ளார். கதையில் சில நிகழ்வுகளையும் புனைவுப் பொருட்களையும் பற்றிக் குறிப்பிட்டு அவற்றை விளக்காமல் படிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடும் உத்தியையும் கையாண்டுள்ளார். வாசகர்களின் கற்பனையில் தன்னுடையதைக் காட்டிலும் எதிர்பாரா புனைவுகள் ஏற்படக்கூடும் என்று அவர் கருதினார்.[10]

முதலில் பென்சிலைக் கொண்டு கோட்டுப்படங்களை வரைவார். பின்னர் நார்த்துகிலிகை கொண்டு மையிட்டு படத்தை முடிப்பார். வண்ணங்களைப் பயன்படுத்துவதில் மிக்க அக்கறை கொண்டு ஞாயிற்றுக்கிழமைக்கான படக்கதைக்கான நிறங்களைத் தேர்ந்தெடுப்பார்.[11] பின்னாளில் வண்ணங்களை மட்டும் தானே தெரிவு செய்துவிட்டு கருவிகள் கொண்டு வண்ணம் சேர்க்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து விடுவார். அவர்கள் வண்ணமேற்றுவர்.[12]

Remove ads

பாத்திரங்கள்

கால்வின்

Thumb
கால்வின்

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையியலாளர் சான் கால்வினின் பெயரைத் தாங்கிய இந்த ஆறு வயது சிறுவன் இப்படக்கதையில் மிகுதியான புனைவாற்றலும், அறிவுக்கூர்மையும், ஆர்வமும், ஆற்றலும், பாய்ச்சலும் கொண்டவனாகக் காட்டப்படுகிறான். சில வேளைகளில் தன்னலம் மிக்கவனாகவும் தென்படுகிறான்.[13] பள்ளித்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களே பெறும் கால்வின் பெரியவர்களுக்கிணையான சொல்வளமுடையவனாகவும் ஒரு மலரும் மெய்யியல் சிந்தை கொண்டவனாகவும் உள்ளான். காட்டாகப் பின்வரும் உரையாடலைக் காணலாம்.

கால்வின்: "அப்பா, நீங்கள் உங்களுடைய இடைத்தரமான வாழ்க்கையை எனது வெற்றிகளின் வாயிலாகச் செல்லுபடியாக்கலாம் என்றும் நீங்கள் தவறவிட்ட வாய்ப்புகளை ஈடுகட்டலாம் என்றும் எண்ணிக்கொண்டு என் வழியாக பகராள் வாழ்வைத் துய்க்கின்றீர்களா?"
கால்வினின் அப்பா: "அப்படி நான் நினைத்திருந்தால் இந்நேரம் (உன் செய்கைகளைப் பார்த்தபிறகு) கண்டிப்பாக அந்த உத்தியை மறுஆய்வு செய்து கொண்டிருப்பேன்."
கால்வின் (பின்னர், தன் தாயிடம்) 'அம்மா, அப்பா என்னை எப்போதுமே அவமானப்படுத்துகிறார்.'

அவன் பெரும்பாலும் தன்னுடைய வேறுபட்ட சிவப்பு-கருப்பு வரியிட்ட சட்டை, கருப்பு கால்சட்டை, மற்றும் வாடாமல்லி நிறமுடைய காலணிகளையும் அணிந்திருப்பான்.[14] அவன் படக்கதைகளை விரும்பிப் படிப்பவன். தான் படிக்கும் கதைப்புத்தகங்களிலும், விரும்பி உண்ணும் "சாக்கிலேட்டு உறைந்த சர்க்கரை வெடிகள்" என்ற பண்டத்தின் அட்டைப்பெட்டியில் விளம்பரப்படுத்தப்படும் பொருள்களையும் விலைகொடுத்துத் தருவிப்பது இவனது வழக்கம்.

வாட்டர்சன் கால்வினைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

கால்வினுடைய பாத்திரத்தைச் செய்வது எளிதாக இருந்தது. ஏனெனில், அவன் வெளிப்படையானவனாகவும், சுட்டியானவனாகவும், நினைப்பதைச் சொல்பவனாகவும் உள்ளான். அவன் தனது வயதை மீறிய அறிவாற்றல் உடையவன். அவனிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவனுக்கு எந்தவித கட்டுப்பாடும் தெரியாது, எதைச் செய்யக்கூடாது என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு அவன் இன்னும் வளரவில்லை.[15]

ஆபுசு

Thumb
ஆபுசு

கால்வினைத் தவிர மற்ற அனைவரையும் பொறுத்தமட்டில் ஆபுசு ஒரு பொம்மைப்புலி. ஆனால் கால்வினைப் பொறுத்தவரை ஆபுசு மனிதப் பண்புகளுடைய, தன்னைக் காட்டிலும் பெரிய, தன்னுணர்வுமிக்க ஒரு புலி. இந்த இருமை நிலையை வாட்டர்சன் இவ்வாறு விளக்குகிறார்:

ஆபுசை ஒரு சட்டத்தில் பொம்மைப்புலியாகவும் அடுத்த சட்டத்தில் உயிருடனும் வரையும்பொழுது, வளர்ந்தோர் பார்வையையும் கால்வினின் பார்வையையும் அருகருகே வைக்கிறேன். படிப்பவர் எவ்வுண்மையை வேண்டுமானாலும் "கூடுதல் உண்மை" எனத் தேர்ந்து கொள்ளட்டும்.[6]

ஆபுசின் மெய்யான தன்மையைக் குழப்பும் வகையில் ஆபுசின் நடவடிக்கைகளுக்கு சில கதைகளில் விளைவுகள் கூட ஏற்படுவதாக அமைந்துள்ளன. காட்டாக, கால்வின் பள்ளியில் இருந்து திரும்பியதும் ஆபுசு அவன் மேல் விளையாட்டாகப் பாய்ந்து தாக்குவதாக வருமிடங்களில் மற்றவர்களும் அவனது காயங்களைப் பார்க்கின்றனர். ஒருமுறை ஆபுசு கால்வினை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து விடுகையில் கால்வினின் அப்பா, கால்வினால் எப்படி தன்னைத் தானே கட்டிப்போட முடியுமென வியக்கிறார்.

தாமசு ஆபுசு என்ற 17-ம் நூற்றாண்டு மெய்யியலாளரின் பெயரை இப்புலிக்குச் சூட்டியதாகவும் அம்மெய்யியலாளர் "மனித இயல்பு பற்றி நம்பிக்கை குறைந்தவரென" வாட்டர்சன் தெரிவித்துள்ளார்.[16] கால்வினின் தோற்றமும் இயல்பும் தாமசு ஆபுசின் நூல்களில் ஒன்றான இலெவியத்தனில் (Leviathan) அவர் விவரித்திருந்த மாந்தரின் இயல்பைப் போன்றே "வஞ்சகமிக்க, நாகரிகமற்ற, குள்ளமான" ஒன்றாக உள்ளது என்கிறார்.[17] ஆபுசு கால்வினைக் காட்டிலும் பகுத்தறிவுடையது; அவனது செயல்களினால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்திருந்தாலும், அவனது சேட்டைகளை முழுவதுமாகத் தடுக்க முயலாது. மறைமுகமாக எச்சரிப்பதோடு நிறுத்திக்கொள்ளும். கால்வின் தனது விருப்பு வெறுப்புக்களுக்கு அறிவு சார்ந்த காரணங்களைக் கற்பிக்க முயலுகையில் அவனது போலித்தனத்தைக் கிண்டல் செய்வது ஆபுசின் வழக்கம்.[18]

தொடக்கத்தில் வந்த சில தொடர்களில் ஒரு மீன்ரொட்டியைத் தூண்டியாகக் கொண்டு கால்வின் ஆபுசைப் பொறி வைத்துப் பிடிப்பதாகக் காட்டினாலும், பின்னால் வந்த ஒரு கதையில் ஆபுசு கால்வினைக் காட்டிலும் அகவையில் மூத்ததாகவும், கால்வின் பச்சிளங்குழந்தையாக இருந்தபோதே அவனை அறிந்திருந்தது போலவும் காட்டப்படுகிறது. பின்வரும் உரையாடல் அக்கதையில் வருவது:

கால்வின்: "என் வாழ்வின் முதல் பகுதி முழுமையும் வெறுமையாகத் தோன்றுகிறது!"
ஆபுசு: "[கைக்குழந்தையாக இருந்த] அந்நாளில் பெரும்பாலும் நீ ஏப்பம் விட்டுக்கொண்டிருந்ததாக நினைவிருக்கிறது."

இறுதியில் வாட்டர்சன் இவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி என்ற தகவல் தேவையற்றது என முடிவெடுத்தார்.[16]

கால்வினின் பெற்றோர்

Thumb
கால்வினின் அம்மாவும் அப்பாவும்

கால்வினின் பெற்றோர் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தம்பதியர். படக்கதையின் பெரும்பாலான ஏனைய பாத்திரங்களைப் போலவே இவ்விருவரும் சாதாரணமான யதார்த்தவாதிகளாக காட்டப்பட்டுள்ளனர். கால்வினின் அட்டகாசச் செயல்களுக்கு அவனது பெற்றோரின் செயற்பாடுகள் நல்ல மாறுதலாக அமைகின்றன. கால்வினை அவர்கள் நடத்தும் விதம் சில சமயங்களில் வாசகர்களைக் கோபப்படுத்தியுள்ளதாக வாட்டர்சன் கூறியுள்ளார். கால்வினைப் பெற்றதற்கு பதில் ஒரு நாயை வளர்த்திருக்கலாம் என்று அவனது அப்பா அலுத்துக் கொள்வதும், கால்வினின் தொல்லை தாங்க முடியாமல் அவன் தனது மகன் தானா என்று அவர் (நகைச்சுவையாக) சந்தேகிப்பதும் வாசகர்களை அதிருப்திப் படுத்தியுள்ளன. பொதுவாக அமைதியாக நடந்து கொள்ளும் கால்வினின் பெற்றோர்கள் சில சமயங்களில் அவனைப் போலவே மிகையாக நடந்துகொள்கிறார்கள். சிகரெட் வேண்டுமென்று தொந்தரவு பண்ணும் கால்வினுக்கு பாடம் புகட்ட அவனுக்கு சிகரெட் வாங்கித் தருகிறார் அவனது அம்மா. சில நேரங்களில் கால்வின் கேட்கும் சாதாரண கேள்விகளுக்கும் பொய்யான நையாண்டித் தகவல்களைத் தந்து அவனை நம்ப வைக்கிறார் அவனது அப்பா. எ. கா:

கால்வின்: அப்பா, நீங்கள் சின்னப் பையனாக இருந்த போது டைனசோர்கள் இருந்தனவா?
அப்பா : ஆமாம்! நானும் உன் தாத்தாவும் புலித்தோலை மாட்டிக் கொண்டு, நமது குலச்சடங்குமுறைப்படி புரோண்டோசாரஸ் வேட்டைக்குப் போவோம்.

கால்வினைப் போல ஒரு குறும்புக்காரனைச் சமாளிக்க அவர்கள் சில சமயங்களில் இப்படி நடந்துகொள்ள வேண்டியிருப்பதாக சொல்கிறார் வாட்டர்சன். ”நான் அவர்களுடைய இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொள்வேனோ அதைவிட அவர்கள் நன்றாகவே நடக்கிறார்கள்” என்றும் சொல்கிக்றார். கால்வினுக்கு நற்பண்புகளை சொல்லித் தர அவனது அப்பா முயல்வதாக பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

கால்வினின் பெற்றோரின் பெயர்கள் கதையில் ஒரு முறைகூடக் குறிப்பிடப்படவில்லை. அவனது அப்பா ஒரு காப்புரிம வழக்கறிஞர், அவனது அம்மா வீட்டைக் கவனித்துக் கொள்ளும் குடும்பத்தலைவி. கதை முழுவதும் அவர்கள் “அப்பா” “அம்மா” என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவார் அழைக்கும் போதுகூட பெயர்களைப் பயன்படுத்தாமல் “அன்பே” “தேனே” போன்ற பாசச் சொற்களையே பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பெயரிடாதது பற்றி வாட்டர்சன் சொல்லியவை:

“கதையைப் பொறுத்த வரை அவர்கள் கால்வினின் அம்மாவும் அப்பாவும், அதைத்தாண்டி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. கால்வினின் மாமா மேக்சு ஒரு வாரகாலம் கதையில் தோன்றினார். ஆனால் அவரைத் தொடர்ந்து காட்டினால், கால்வினின் அம்மாவையும் அப்பாவையும் அவர் பேர் சொல்லிக் கூப்பிடும்படி காட்ட நேரும். அவரை அதற்குப் பின்னால் நான் கதையில் கொண்டுவராததற்கு இதுவும் ஒரு காரணம்.”[16]

சூசி டெர்கின்ஸ்

Thumb
சூசி

சூசி கால்வினின் சகமாணவி. அவன் குடியிருக்கும் தெருவில் தான் அவள் வீடும் இருக்கிறது. வாட்டர்சன் தன் மனைவியின் குடும்பத்தார் வளர்த்த ஒரு பீகிள் வகை நாயின் பெயரை இந்த பாத்திரத்துக்குப் பயன்படுத்தினார். வரைகதையின் ஆரம்பத்தில் கால்வினின் வகுப்பில் புதிதாகச் சேரும் மாணவியாக சூசி அறிமுகமானாள். அவள் ஒரு அமைதியான, மரியாதைமிக்க, மிதமான கற்பனையாற்றல் கொண்ட பெண். வழக்கமாக சிறுபெண்கள் விளையாடும் விளையாட்டுகளை (”வீடு” விளையாட்டு, தன் பொம்மைகளுக்கு தேநீர் விருந்து வைத்தல் போன்றவை) அவள் விரும்பி விளையாடுவாள். சில சமயங்களில் கால்வினுடன் கற்பனை விளையாட்டுகள் ஆடுவதும் உண்டு. அவற்றில் அவள் செல்வாக்கு படைத்த பெண் வழக்கறிஞராகவோ, அரசியல்வாதியாகவோ நடிப்பாள். கால்வின் வீட்டை கவனித்துக்கொள்ளும் அவளது கணவனாக நடிப்பான்.

கால்வினுக்கும் சூசிக்கும் பல விஷயங்களில் ஒத்த கருத்துண்டு. ஆனால் இரண்டு பேரும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆபுசைப் போலவே மிஸ்டர் பன் என்ற முயல் பொம்மை சூசியிடம் உண்டு. கால்வினைப் போலவே சூசியும் சில சமயம் தன் குறும்புத்தன்மையைக் காட்டுவாள். எ. கா: கால்வின் வகுப்புத் தேர்வுகளில் அவளது விடைத்தாளைப் பார்த்து காப்பியடிக்க முயன்றால் வேண்டுமென்றே அவனுக்கு தப்பான விடைகளைத் தருவாள்; தண்ணீர் நிரப்பிய பலூன்கள், பனி உருண்டைகளைக் கொண்டு அவன் அவளைத் தாக்க முயன்றால் அவனைத் திருப்பி அடிப்பாள். ஆபுசுக்கு சூசியை மிகவும் பிடிக்கும். கால்வினை வெறுப்பேற்றுவதற்காக சூசியை தான் நேசிப்பதாக ஆபுசு பலமுறை வெளிப்படையாகச் சொல்வதுண்டு. சூசிக்கு தொந்தரவு கொடுப்பதற்காக கால்வின் ”அருவருப்பான பெண்களை ஒழிப்போர் சங்கம்” (Get Rid of Slimy Girls - Gross) என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து தனது அறையில் ஆபுசுடன் பல முறை ஆலோசனை செய்வான். ஆனால் பெரும்பாலும் அவனது திட்டங்களை சூசி எளிதில் முறியடித்துவிடுவாள். கால்வினுக்கும் சூசிக்கும் ஒருவரையொருவர் பிடிக்குமென்று வாட்டர்சன் ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் மனைவியின் குணநலன்களை வைத்தே சூசியின் பாத்திரத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.[16]

இரண்டாம் நிலைப் பாத்திரங்கள்

கால்வின் தன் வாழ்க்கையில் பின்வரும் பாத்திரங்களை அடிக்கடி சந்திக்கின்றான்

ரோசலின்

ரோசலின் ஒரு பதின்ம வயது பெண். கால்வினின் பெற்றோர் வெளியே செல்லும்போது அவனைப் பார்த்துக்கொள்பவள் (பேபி சிட்டர்). கால்வினின் சேட்டைகளுக்கு பயந்து வேறு யாரும் அவனைப்பார்த்துக் கொள்ள மறுத்துவிட்ட நிலையில் அவனது பெற்றோர் ரோசலினை நாடுவார்கள். இதை பயன்படுத்தி அவள் அவர்களிடமிருந்து நிறைய பணத்தைக் கறந்து விடுவாள். கதையில் கால்வின் ரோசலின் ஒருத்திக்கு மட்டும் தான் உண்மையிலேயே பயப்படுவான. அவனது அட்டகாசங்களை தைரியமாக எதிர்கொண்டு அவனை எளிதில் அடக்கி விடுவாள் ரோசலின். அவளுக்கு பயந்த அவன் உரிய நேரத்தில் தூங்கப்போய் விடுவான். யார் சொன்னாலும் எதையும் கேட்காத கால்வினுக்கு அவள் தான் நீச்சலடிக்கக் கற்றுத்தந்தவள்.

ரோசலின் பாத்திரத்தை முதலில் அறிமுகப்படுத்திய போது அவளை அடிக்கடி பயன்படுத்தும் எண்ணம் வாட்டர்சனுக்கு இல்லை. ஆனால் ரோசலின் கால்வினை அடக்குவது நன்றாக அமைந்திருந்ததால் அவளை மீண்டும் பல முறை கதையில் பயன்படுத்தினார்.

மோ

மோ கால்வினின் பள்ளியில் படிக்கும் ஒரு முரடன். உருவத்தில் பெரியவன், புத்தியில் சிறியவன். ”முகத்தை மழித்துக் கொள்ளும் ஆறு வயது சிறுவன்” என்று வர்ணிக்கப்படும் இவன் பல முறை கால்வினை அடித்து கீழே தள்ளி விடுவான். கால்வின் மதிய உணவுக்காக வைத்திருக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்வான். வரைகதை சட்டத்தில் மோ பேசும் வார்த்தைகளுக்கு மட்டும் வேறொரு எழுத்துருவை வாட்டர்சன் பயன்படுத்தியுள்ளார். மோவின் வார்த்தைகள் பெரும்பாலும் ஒரேயொரு அசையை மட்டும் கொண்டிருக்கின்றன. அவற்றை தெளிவற்ற சிற்றெழுத்துகளில் வரைந்துள்ள வாட்டர்சன் தான் ”வாழ்க்கையில் சந்தித்துள்ள முட்டாள் முரடன்களின் ஒட்டுமொத்த உருவமே மோ” என்று சொல்கிறார்.[16]

மிஸ் வார்ம்வுட்

மிஸ் வார்ம்வுட் கால்வினின் ஆசிரியை. கனவுருப்புனைவு எழுத்தாளர் சி. எஸ். லூயிசின் தி ஸ்குரூடேப் லெட்டர்ஸ் என்ற புத்தகத்தில் வரும் இளைய சாத்தான் பாத்திரத்தின் பெயரையே இவருக்கு பயன்படுத்தினார் வாட்டர்சன். போல்கா புள்ளிகள் கொண்ட ஆடைகளை வழக்கமான அணியும் வார்ம்வுட் கால்வினின் அட்டகாசங்களை அடக்கக்கூடிய மற்றொரு பாத்திரமாவார். கால்வின் தன்னை விண்வெளிவீரன் ஸ்பிஃப் ஆகக் கற்பனை செய்துகொள்ளும் போதெல்லாம் வார்ம்வுட்டை ஒரு வேற்றுலக சர்வாதிகாரியாக உருவகப்படுத்துவது வழக்கம். கால்வின் செய்யும் தொந்தரவுகளைத் தாங்க முடியாமல் வார்ம்வுட் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு “ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஐந்தாண்டுகள் தான் உள்ளன. அதுவரை பொறுமையாக இரு” என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்வார். பள்ளிக்கல்வி முக்கியமானது என்ற வார்ம்வுட்டின் தீவிர நம்பிக்கை அவரை ஒரு மகிழ்ச்சியற்றவராக மாற்றிவிட்டதாக வாட்டர்சன் கூறியுள்ளார்.[19]

மிஸ்டர் ஸ்பிட்டில்

மிஸ்டர் ஸ்பிட்டில் கால்வின் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர். கால்வினின் குறும்புகள் அளவுக்கு மீறிப் போனால் மிஸ். வார்ம்வுட் அவனை இவரது அறைக்கு அனுப்பி வைப்பார். அவ்வப்போது சூசியும் கால்வினுடன் சேர்ந்து இவரது அறைக்கு அனுப்பப்படுவாள். கால்வினை அவர் மிரட்டும்போதெல்லாம் அவன் அவரை சுட்டு வீழ்த்தப்பட வேண்டிய சார்க் (zorg) வேற்றுலக வாசியாக கற்பனை செய்து பார்ப்பது வழக்கம்.

Remove ads

அடிக்கடிப் பயன்பட்ட கருப்பொருள்

கால்வினும் ஆபுசும் படக்கதையில் சில கருப்பொருட்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. கால்வினின் கற்பனை பாத்திரங்கள், அட்டைப்பெட்டிகள், கால்வின்பந்து, பனிச்சிற்பங்கள், பாரவண்டிகள், சறுக்குவண்டிகள், “அருவருப்பான பெண்களை ஒழிப்போர் சங்கம்” போன்றவை கதையில் பலமுறை தோன்றுகின்றன.

கால்வினின் கற்பனைப் பாத்திரங்கள்

கால்வின் தன்னை டைனோசர்கள், யானைகள், காட்டுவாசிகள், அதி நாயகர்கள் உட்பட பலவகைப் பாத்திரங்களாக கற்பனை செய்து கொள்வான். அவன் அடிக்கடி பயன்படுத்தும் தன்மாற்றுப்படிவங்கள் (alter egos) மூன்று:

Thumb
“பேபிசிட்டர் பெண்”ணைத் தாக்கும் வியத்தகு மனிதன்
  • விண்வெளிவீரன் ஸ்பிஃப் (Spaceman Spiff) : ஸ்பிஃப் விண்வெளியில் சாகசங்களை நிகழ்த்தும் ஒரு நாயகன். அவன் எப்போதும் தன் அனுபவங்களை படர்க்கையில் தான் விவரிப்பான். ஸ்பிஃப் வடிவத்தில் கால்வின் வேற்றுலக வாசிகளுடன் (வழக்கமாக அவனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ரோசலின்) போராடுவான், பல்வேறு கோள்களுக்குப் பயணிப்பான் (அவனது வீடு, பள்ளி, வீட்டின் அக்கம்பக்கம்). வேற்றுலக வாசிகளை அழிக்க தனது கதிர் துப்பாக்கியை (அவனது தண்ணீர் துப்பாக்கி அல்லது ரப்பர் பட்டை) பயனபடுத்துவான். கால்வின் ஸ்பிஃப் பாத்திரமாகும் போது அவனது வர்ணனையில் அடுக்குமொழி நிறைந்திருக்கும். எ. கா. "Zounds! Zorched by Zarches, Spaceman Spiff's crippled craft crashes on planet Plootarg!".[20]
  • டிரேசர் புல்லட் (Tracer Bullet): இவன் ஒரு தனியார் துப்பறிவாளன். காகிதக்கூழ் புனைவுகளில் வரும் அனுபவம் வாய்ந்த துப்பறிவாளர்களைப் போல இப்பாத்திரத்தை கால்வின் கற்பனை செய்திருந்தான். (கால்வினுக்கு துப்பறியும் கதைகள் படிப்பது பிடிக்கும்). ஆபுசு அவனுக்கு ஒரு முறை முடிதிருத்தம் செய்ய முயன்றதன் விளைவுகளை மறைக்க ஃபேடோரா வகைத் தொப்பியை அணிந்து திரிந்த போது இந்த பாத்திரத்தை உருவாக்கினான். (கதைகளில் துப்பறிவாளர்கள் இத்தொப்பியை அணிவது வழக்கு). டிரேசர் புல்லட் துப்பறியும் போது ஒரு சண்டைக்காரி (கால்வினின் அம்மா) எப்போதும் குறுக்கிடுவாள். சில சமயங்களில் அவள் தன் அடியாளை (கால்வினின் அப்பா) புல்லட் மீது ஏவி விடுவதுமுண்டு.
  • வியத்தகு மனிதன் (Stupendous Man) : இவன் தன் சக்திகளை மறைத்து வேடமிட்டு வாழும் ஒரு அதி நாயகன். தன் அம்மா தைத்துக் கொடுத்த முகமூடியை அணிந்து கொண்டு தனது அனுபவங்களை விவரிப்பான். இவன் கதைகளில் எப்போதும் இவனுடைய எதிரிகளே வெற்றி பெறுவர். இவன் ஏதாவது ஒரு சண்டையிலாவது வெற்றி பெற்றுள்ளானா என்று ஆபுசு கிண்டலடித்தால் வியத்தகு மனிதனின் தோல்விகள் அற ரீதியில் வெற்றிகள் தான் என்று கால்வின் சப்பைக்கட்டு கட்டுவான். வியத்தகு மனிதனின் எதிரிகளின் பட்டியல்: “தாய் பெண்மணி” (கால்வினின் அம்மா), “எரிச்சலூட்டும் பெண்” (சூசி), "நண்டு ஆசிரியை” (மிஸ். வார்ம்வுட்), “பேபிசிட்டர் பெண்” (ரோசலின்).

அட்டைப்பெட்டிகள்

Thumb
கால்வினின் இரட்டிப்பாக்கும் எந்திரம்

கால்வினும் ஆபுசும் கதைகளில் அட்டைப்பெட்டிகளுக்கு முக்கியமான இடம் உண்டு. கால்வினின் புனைவாற்றலை வெளிப்படுத்தும் ஒரு உத்தியாக வாட்டர்சன் அட்டைப்பெட்டிகளைப் பயன்படுத்தியுள்ளார். சாதாரண அட்டைபெட்டிகளை தலைகீழாக கவிழ்த்து, அவற்றின் மேல் ஒட்டப்பட்டுள்ள சீட்டில் விவரங்களை மாற்றி விட்டால் அவற்றை தான் விரும்பிய எந்திரமாக (கற்பனையில்) மாற்றி விடுவான் கால்வின். கால எந்திரம், உருமாற்று எந்திரம், இரட்டிப்பாக்கும் எந்திரமென பல “அறிவியல் கண்டுபிடிப்புகள்” இப்படி கால்வினால் உருவாக்கப்பட்டுள்ளன. கால்வின் வியாபாரியாக மாறி யாரும் விரும்பாத பண்டங்களையும் சேவைகளையும் (”ஒரு டாலருக்கு ஒரு உதை”, “50 செண்டுகளுக்கு உங்கள் தோற்றத்தின் உண்மையான வர்ணனை”) விற்க முற்படும் போது கவிழ்க்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் தாம் அவனுக்கு மேசைகளாக பயன்படுகின்றன.

கால்வின்பந்து

விதிமுறைகளுள்ள குழு விளையாட்டுகள் என்றால் கால்வினுக்கு அறவே பிடிக்காது. இதனால் எழுதப்பட்ட விதிமுறைகள் இல்லாத ஒரு விளையாட்டை உருவாக்கினான் கால்வின். கால்வின்பந்தில் ஒழுங்குமுறையே கிடையாது, விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கும், ஆட்ட எண்ணிக்கை அளவுகளும் ஆட்டக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப மாறும். கால்வின்பந்து எப்படி உருவானதென்று தெளிவாகத் தெரியவில்லை. ஒருமுறை கால்வின் ஒரு பேஸ்பால் அணியில் சேர்ந்து பின்பிடிக்காமல் வெளியேறியபின் முதன்முதலாக கால்வின்பந்து உருவாக்கப்பட்டது. கால்வின்பந்து காட்டப்பட்ட கடைசி கதையில் அது எப்படி உருவாகியிருக்கும் என்பதற்கான துப்பு கிடைக்கிறது. கால்வினும் ஆபுசும் அமெரிக்க கால்பந்து விளையாடத் தொடங்குகிறார்கள், விரைவில் அதன் விதிமுறைகள் மாற்றப்பட்டு, ஆட்டமே மாறிவிடுகிறது. ”இப்படித்தான் நாம் ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் கால்வின்பந்தில் போய் முடிகின்றன” என்று கால்வின் சொல்வதைக்கொண்டு கால்வின்பந்து எப்படி உருவாகியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.[21][22][23]

கால்வின்பந்தின் மாறாத ஒரே விதிமுறை - ஒரு முறை பின்பற்றிய விதிமுறைகளை அடுத்த ஆட்டத்துக்கு பயன்படுத்தக்கூடாது.[24] குரோக்கே, காற்பந்து, பூப்பந்து, கொடிகள், பைகள், சின்னங்கள், மரக்குதிரைகள், முகமூடிகள் என பலவகைப்பட்ட கருவிகள் கால்வின்பந்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவைதவிர குளிர்ந்த நீர், தண்ணீர் நிரப்பிய பலூன்கள், பாடல்கள், கவிதைகள் போன்ற விஷயங்களும் கால்வின்பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[25] கால்வின்பந்தில் ஆபுசு கால்வினை அடிக்கடி எளிதில் தோற்கடித்துவிடும். ஒருமுறை ரோசலினும் அவனைத் தோற்கடித்திருக்கிறாள்.[23] கால்வின்பந்தின் கருத்துப்பாடல் பின்வருமாறு:

மற்ற குழந்தைகள் விளையாடும் ஆட்டங்கள் அலுப்பூட்டுகின்றன
விதிமுறைகளும் எண்ணிக்கைகளும் யாருக்கு வேண்டும்
கால்வின்பந்து எவ்வளவோ மேல்
எல்லாவற்றிலும் வித்தியாசம், எப்போதும் வினோதம்
குழுக்களும் தேவையில்லை நடுவர்களுக்கும் வேலையில்லை
என் பேரை வைத்திருப்பதால் இந்த ஆட்டம் எப்போதும் கலக்கும்.[26]

பனிச் சிற்பங்கள்

கால்வின் பனிபொழியும் காலங்களில் வீட்டின் முற்றத்தில் பயங்கர பனிச்சிற்பங்களை உருவாக்குவான். சமூக விமர்சனத்துக்கும், எதிரிகளைப் பழிவாங்கவும், தன் படைப்பாற்றலை வெளிக்காட்டவும் இச்சிற்பங்கள் அவனுக்கு பயன்பட்டன. மற்றவர்களைப் போல வழமையான பனிச்சிற்பங்களை வடிக்காமல், தனது தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கொடூர உருவங்களை வடிப்பான் கால்வின். கால்வினின் படைப்புகள் திகிலும், இறுக்கம் இழையோடும் நகைச்சுவையும் கொண்டவை. கால்வினைப் பார்த்து கத்தும் பனி அப்பா, ஒரு பனிமனிதனைக் கொன்று விட்டு அவனது பனிப்பாகை (ice cream) பிடுங்கித் தின்னும் இன்னொரு பனிமனிதன் போன்றவை கால்வினின் படைப்புகளில் ஒரு சில. வாட்டர்சன் கால்வினது பனிச்சிற்பக் கலையினை கலையுலகின் நிலையை விமர்சிக்கப் பயன்படுத்துகிறார். தற்கால கலையில் தனித்துவம் குறைந்து வருகிறதென்பது அவருடைய முக்கிய குற்றச்சாட்டு. கால்வினும் ஆபுசும் தங்களை உண்மையான கலையின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.

பாரவண்டியும், சறுக்குவண்டியும்

கால்வினும் ஆபுசும் காலத்துக்கு ஏற்றார்போல பாரவண்டியிலோ சறுக்குவண்டியிலோ ஏறி குன்றின் மேலிருந்து கீழே வேகமாகப் பாய்வது வழக்கம். வார்த்தைகளின் நகைச்சுவையிலிருந்து சற்றே மாறுபாடாக அசையும் நகைச்சுவையை ஆங்காங்கே புகுத்த இந்த வண்டிச்சறுக்கு நிகழ்வுகளைப் பயன்படுத்தியதாக வாட்டர்சன் கூறியுள்ளார். சில கதைகளில் இந்த சறுக்குப்பயணமே கதையின் மையக்கருவாக அமைவதுண்டு. வாழ்க்கை, கடவுள், மாற்றம் போன்ற கனமான விஷயங்களைப் பற்றி கால்வினின் எண்ண ஓட்டத்தை உருவகப்படுத்த குன்றின் மேலிருந்து கீழே பாய்வதை வாட்டர்சன் பயன்படுத்தியுள்ளார். இந்த பாய்ச்சல்களின் முடிவில் பெரும்பாலும் கால்வினின் வண்டிகள் விழுந்து நொறுங்கி அவனுக்கு சிராய்ப்புகள் ஏற்படும். முடிவினை முன்பே அறிந்திருக்கும் ஆபுசு பல நேரங்களில் கால்வினுடன் சறுக்க மறுத்துவிடும், இல்லையெனில் பாதி வழியிலேயே குதித்து தப்பிவிடும். ஆனால் எத்தனை முறை மோதி கீழே விழுந்தாலும், சளைக்காமல் மீண்டும் சறுக்க நினைப்பது கால்வினின் குணம். படக்கதையின் இறுதி அத்தியாயத்தில் கால்வினும் ஆபுசும் இன்னொரு முறை சறுக்கத் தொடங்குவதுடன் கதை முடிகிறது.[8][27][27][28][29]

அருவருப்பான பெண்களை ஒழிப்போர் சங்கம்

அருவருப்பான பெண்களை ஒழிப்போர் சங்கத்தில் (Get Rid of Slimy Girls - G. R. O. S. S) கால்வின், ஆபுசு என மொத்தம் இரண்டே உறுப்பினர்கள் தான். இச்சங்கத்தின் குறிக்கோள் சூசியை வெறுப்பேற்றுவது. முதன் முதலில் கால்வின் வீட்டு வண்டிக்கொட்டகையில் உருவாக்கப்பட்ட இச்சங்கத்தின் கூட்டங்கள் பின் கால்வினின் மரவீட்டிலும் நடைபெற்றன. சூசிக்கு எரிச்சலூட்ட பல திட்டங்களை கால்வின் வகுத்தாலும் பெரும்பாலும் சூசி தனது புத்திகூர்மையால் அவற்றை முறியடித்துவிடுவாள். சங்கத்தில் இருப்பது இருவர் தானென்றாலும் அவ்விருவருக்குள்ளும் யாருக்கு அதிகாரம் அதிகம் என்று அடிக்கடி தகராறு ஏற்படும்.

Remove ads

நூல்கள்

1987 முதல் 2005 வரை மொத்தம் 18 கால்வினும் ஆபுசும் நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுள் ஒவ்வொரு ஆண்டும் வெளியான படக்கதைகளை தொகுக்கும் பதினொரு புத்தகங்களும், கருவூலங்கள் எனப்படும் தொகுப்புகளும் அடக்கம். கருவூலப் புத்தகங்களில் முன்வெளியான இரண்டு ஆண்டுத்தொகுப்புகளின் உள்ளடகங்களுடன் வாட்டர்சன் சில கூடுதலான படங்கள் குறிப்புகள், கவிதைகள் போன்றவற்றை இணைத்து வெளியிட்டுள்ளார். 2005ல் அதுவரை வெளியான அனைத்து கால்வின் படைப்புகளைக் கொண்ட ஒரு முழுமையான பதிப்பு - தி கம்பிளீட் கால்வி்ன் அண்ட் ஆபுசு - வெளியானது. 1440 பக்கங்களில் மூன்று உயர்தர கடினஅட்டை புத்தகங்களாக வாட்டர்சனின் முன்னுரையுடன் இது வெளியானது. இதுவரை வெளியாகியுள்ள கால்வினும் ஆபுசும் புத்தகங்களின் பட்டியல்:

மேலதிகத் தகவல்கள் புத்தகம் (ஆண்டு), வடிவம் ...
Remove ads

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads