குருதித்தேக்க இதயத் திறனிழப்பு

From Wikipedia, the free encyclopedia

குருதித்தேக்க இதயத் திறனிழப்பு
Remove ads

இதயத் திறனிழப்பு (Heart failure, HF), அல்லது குருதித்தேக்க இதயத் திறனிழப்பு (congestive heart failure, CHF) அல்லது இதயத்தசை திறனிழப்பு (congestive cardiac failure, CCF), என்பது உடலின் குருதியோட்டத்திற்கு உதவுகின்ற எக்கியாக இதயம் செயற்படத் தவறுதலால் ஏற்படும் நோயறிகுறிகளின் தொகுப்பாகும்; தனது கட்டமைப்பு அல்லது செயற்பாட்டு குறைபாட்டால் இதயம் தன் ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும் குருதியால் நிரப்பாமலும் அல்லது வெளியேற்றாமலும் இருப்பதால் இந்த அறிகுறிகளும் உணர்குறிகளும் ஏற்படுகின்றன.[12][13][14] மூச்சுத் திணறல், சோர்வாக உணர்தல், கால் வீக்கம் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.[4] உடற்பயிற்சியின்போது மூச்சுத் திணறல் கடுமையாக இருக்கும்; படுத்திருக்கும்போதும் மூச்சுத் திணறல் அதிகமாகி இரவில் விழிப்பேற்படுத்தக் கூடும்.[4] உடற்பயிற்சி செய்யும் திறன் குறைவதும் பொதுவான இயல்பாகும்.[15] மார்பு நெரிப்பு உள்ளிட்ட நெஞ்சு வலி பொதுவாக இதயத் திறனிழப்பால் ஏற்படுவதில்லை.[16]

விரைவான உண்மைகள் இதயத் திறனிழப்பு, ஒத்தசொற்கள் ...
Remove ads

காரணங்கள்

இதயத் திறனிழப்பிற்கான பொதுவான காரணங்களாக குருதி ஊட்டக்குறை இதய நோய், முந்தைய மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், ஏட்ரியக் குறு நடுக்கம், இதய அடைப்பிதழ் நோய், கூடிய மதுப் பயன்பாடு, நோய்த்தொற்று, மற்றும் காரணமறியா இதயத் தசைநோய் ஆகியன உள்ளன.[4][5] இவை இதயத்தின் அமைப்பில் அல்லது செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத் திறனிழப்பிற்கு வித்திடுகின்றன.[4] இடது இதயக் கீழறை திறனிழப்புகள் இருவகையாக வகைபடுத்தப்பட்டுள்ளன – குறைந்த பகுதி வெளியேற்றம் (HFrEF), கேடுறா பகுதி வெளியேற்றம் (HFpEF) – இவை இடது இதயக் கீழறையின் சுருங்குதன்மை, இளப்பாற்றுகை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டு அமையும்.[4] இதயத் திறனிழப்பின் தீவிரம் எந்தளவில் பயிற்சி செய்யவியலும் என்பதைக் கொண்டு கணிக்கப்படுகின்றது.[8]

இதயத் திறனிழப்பும் மாரடைப்பும் இதய நிறுத்தமும் வெவ்வேறானவை. மாரடைப்பு இதயத்திற்கு குருதி வழங்கும் தமனியில் ஏற்படும் உறைகட்டிகளால் ஓட்டம் தடைபட்டு இதயத்தசையின் சில பகுதிகள் இறப்பதால் ஏற்படுவதாகும். இதய நிறுத்தத்தில் இதயம் முழுமையாக செயலிழந்து இரத்தவோட்டம் நிற்பதாகும்.[17][18] இதயத் திறனிழப்பின் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகள் கொண்ட பிற நோய்கள் உடற் பருமன், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் நோய்கள், குருதிச்சோகை, தைராய்டு நோய்கள் ஆகியன.[8] எனவே நோயறிகுறிகள், உடற் பரிசோதனை, மீயொலி இதயவரைவு ஆகியன கொண்டு அறுதியீடு செய்யப்படுகின்றது.[7] குருதிப் பரிசோதனைகள், இதய துடிப்பலைஅளவி, மற்றும் நெஞ்சக கதிர்வீச்சு ஒளிப்படம் ஆகியன அடிப்படைக் காரணத்தை தீர்மானிக்கப் பயன்படும்.[7]

Remove ads

சிகிச்சைகள்

இதற்கான சிகிச்சை நோயின் தீவிரத்தையும் அடிப்படைக் காரணத்தையும் சார்ந்துள்ளது.[7] நெடுநாள் நிலைத்த மிதமான இதயத் திறனிழப்பு நோயாளிகளுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள், (புகைநிறுத்தம், உடற் பயிற்சி, உணவுப் பழக்க மாற்றங்கள்) மருந்துகள் தரப்படுகின்றன.[9][19] இடது இதயக் கீழறை குறைபாடுள்ளோருக்கு ஏசிஈ தடுப்பான்பான்கள், ஆஞ்சியோட்டன்சின் ஏற்பி அடைப்பான்கள், வால்சர்டன்கள்,பீட்டா அடைப்பான்கள் போன்ற மருந்துகள் தரப்படுகின்றன.[7][20] தீவிரநிலை நோயாளிகளுக்கு அட்ரீனல் சுரப்பு இயக்குநீர் எதிர்மருந்துகள், நைட்ரேட் உடன் ஐட்ராலசைன் ஆகியன பயன்படுத்தலாம்.[7] சிறுநீரிறக்கிகள் நீர்ச் சேமிப்பை தடுத்து மூச்சிறைச்சலை கட்டுப்படுத்தப் பயனாகின்றன.[9] சில நேரங்களில், காரணத்தை முன்னிட்டு, செயற்கை இதயமுடுக்கி அல்லது பதிக்கக்கூடிய இதய துடிப்படக்கி பரிந்துரைக்கப்படலாம்.[7] மேலும் சிலருக்கு இதய மீயொத்தியைவு சிகிச்சை (CRT) தரப்படலாம்.[21] சிலருக்கு இதய சுருங்குதிறன் பண்பேற்றம் பயனாகலாம்.[22] இந்த சிகிச்சைகளுக்குப் பிறகும் குணமடையாதவர்களுக்கு கீழறை உதவி கருவியோ (இடது, வலது, அல்லது இரண்டு கீழறைகளுக்கும்), அல்லது அரிதாக இதய மாற்றோ பரிந்துரைக்கப்படலாம்.[9]

Remove ads

நோய்ப் பரவல்

இதயத் திறனிழப்பு மிகவும் பரவலான, விலையுயர்ந்த, இறப்புக்கு வாய்ப்புள்ள நோய்.[23] மூத்த குடிமக்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படும், மீளவும் அனுமதிக்கப்படும் நோய்களில் முதன்மையான காரணமாக இந்நோய் விளங்குகின்றது.[24][25] 2015இல் உலகளவில் இது ஏறத்தாழ 40 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.[10] ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 2% மூத்தோர் இதயத் திறனிழப்பால் அவதியுறுகின்றனர்.[23] இவர்களில் 65 அகவைக்கு மேலானவர்களில் இது 6–10% ஆக உயர்ந்து உள்ளது.[5][26] இந்த வீதங்கள் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[23] அறுதியாக நோயறிந்த முதலாமாண்டில் இறப்பு வீதம் ஏறத்தாழ 35% ஆகவும் இரண்டாமாண்டில் எஞ்சியிருப்போரில் 10%க்கு குறைவாகவும் உள்ளது.[4] இந்த அளவிலான இறப்பு வாய்ப்பு சில புற்றுநோய்களை ஒத்துள்ளது.[4] ஐக்கிய இராச்சியத்தில், அவசரநிலை மருத்துவமனை சேர்க்கைகளில் 5% இந்நோயாக உள்ளது.[4] இதயத் திறனிழப்பு பண்டைக்காலங்களிலேயே அறியப்பட்டிருந்தது. கி.மு 1550 ஆண்டிலேயே எபர்சு பாபிரசு இதனைக் குறித்து குறிப்பிட்டுள்ளார்..[15]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads