கொர்னேலியுசு (திருத்தந்தை)

From Wikipedia, the free encyclopedia

கொர்னேலியுசு (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை கொர்னேலியுஸ் (Pope Cornelius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச்சு 6 (அ) 13ஆம் நாளிலிருந்து அவர் இறப்பு நிகழ்ந்த சூன் 253 வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை ஃபேபியன் ஆவார். திருத்தந்தை கொர்னேலியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 21ஆம் திருத்தந்தை ஆவார்.

  • கொர்னேலியுஸ் (இலத்தீன்: Cornelius) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் "கொம்பு" எனப் பொருள்படும் "Cornu" என்னும் சொல்லிலிருந்து பிறந்த குடும்பப் பெயராக இருக்கலாம். "உறுதியான" என்னும் பொருளும் உண்டு.
விரைவான உண்மைகள் திருத்தந்தை கொர்னேலியுஸ்Pope Cornelius, ஆட்சி துவக்கம் ...
Remove ads

கிறித்தவம் துன்புறுத்தப்படல்

உரோமைப் பேரரசனாக 249-251 காலகட்டத்தில் ஆட்சி செய்த டேசியஸ் (Decius) என்பவர் கிறித்தவர்களை அவ்வப்போது சில இடங்களில் கொடுமைப்படுத்தினார். ஆனால், 250 சனவரி மாதத்திலிருந்து கிறித்தவத்தை மிகக் கடுமையாகத் துன்புறுத்தலானார்.

அரசு நியமித்த அதிகாரிகளின் முன்னிலையில் கிறித்தவர்கள் உரோமைத் தெய்வங்களுக்குப் பலி செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்ய மறுத்தால் சாவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் ஆணை பிறப்பித்தார்.

அரசனின் ஆணைக்குப் பணிந்து பலிசெலுத்த மறுத்த கிறித்தவர் பலர் கொல்லப்பட்டு, மறைச்சாட்சிகளாக உயிர்துறந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்த ஃபேபியன் என்பவரும் 250 சனவரி 20ஆம் நாள் கொல்லப்பட்டார்.

அரசனுக்கு அஞ்சித் தங்கள் உயிரைக் காக்கும் வண்ணம் பல கிறித்தவர்கள் பலி ஒப்புக்கொடுத்தனர்.

Remove ads

கிறித்தவம் துன்புறுத்தப்பட்ட காலத்திற்குப் பின் எழுந்த பிரச்சினை

கிறித்தவம் துன்புறுத்தப்பட்ட காலத்தில் தங்கள் உயிரைக் காக்கும் எண்ணத்துடன் அரச ஆணைக்குப் பணிந்து உரோமை தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, கிறித்தவத்தை மறுதலித்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மனம் மாறி மீண்டும் கிறித்தவ சபையோடு இணைய விரும்பினர். அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்பது குறித்து இருவித கருத்துகள் எழலாயின.

1) கிறித்தவத்தை மறுதலித்தவர்கள் மனம் திரும்பி மீண்டும் திருச்சபையில் சேர விரும்பினால் அவர்கள் மீண்டும் ஒருமுறை திருமுழுக்குப் பெற வேண்டும் என்று நோவாசியன்[2] என்பவரும் அவருடைய குழுவும் கூறினார்கள்.

2) தங்கள் தவற்றிற்கு வருந்தி மீண்டும் சபையில் புக விரும்புவோருக்கு இரண்டாம் முறையாகத் திருமுழுக்குக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்மையாகவே மன வருத்தம் தெரிவித்தால் போதும் என்று திருத்தந்தை கொர்னேலியுஸ் கூறினார். அவருக்கு ஆதரவாக புனித சிப்ரியான்[3] என்னும் தலைசிறந்த இறையியல் அறிஞரும் கருத்துத் தெரிவித்தார்.

Remove ads

திருத்தந்தைத் தேர்தல் தடைபட்டது

உரோமை மன்னன் டேசியஸ் கிறித்தவத்தைக் கடுமையாகத் துன்புறுத்தினால் அது தானாகவே அழிந்துபோகும் என்று நினைத்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் அவர் திருத்தந்தை ஃபேபியனை சிறையிலடைத்து சாகடித்தபின் (சனவரி 20, 250), அவருக்குப் பின் இன்னொரு திருத்தந்தை பதவி ஏற்காமல் தடைசெய்தார்.

ஆனால், அச்சமயத்தில் கோத் இனத்தவர்கள் (Goths) பால்கன் பகுதியில் தாக்குதல் நிகழ்த்தினார்கள். அவர்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு டேசியஸ் தமது படைகளோடு புறப்பட்டார். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கிறித்தவர்கள் புதிய திருத்தந்தையைத் தெரிந்தெடுத்தார்கள்.

பதினான்கு மாதகாலமாகத் திருத்தந்தையின் பணியிடம் வெறுமையாக இருந்தது. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட மிகத் தகுதிவாய்ந்தவராகக் கருதப்பட்ட மோசே என்பவர் திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய சாவைத் தொடர்ந்து, நோவாசியன் தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால், கிறித்தவர்கள் கொர்னேலியுசைத் திருத்தந்தையாகத் தெரிந்தெடுத்தனர். அவரும் தயக்கத்தோடு அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

திருத்தந்தை கொர்னேலியுசுக்கு எதிராக நோவாசியான் என்னும் எதிர்-திருத்தந்தை

கொர்னேலியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த நோவாசியன் மிகுந்த சினம் கொண்டார். தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குறை ஒருபுறம் இருக்க, கிறித்தவத்தை மறுதலித்தவர்களை மறு திருமுழுக்குக் கொடுக்காமல் திருச்சபையில் மீண்டும் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறிய ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முறையல்ல என்று அவர் எண்ணினார்.

எனவே, நோவாசியான் "நானே திருத்தந்தை" என்று கூறி, தம்மைத் தாமே திருத்தந்தை நிலைக்கு உயர்த்திக்கொண்டர். இவ்வாறு நோவாசியான் என்னும் உரோமைக் குரு கொர்னேலியுஸ் திருத்தந்தைக்கு எதிரான எதிர்-திருத்தந்தையாக மாறினார். திருச்சபையில் ஒரு பிளவு ஏற்பட்டது.

கொர்னேலியுஸ் திருத்தந்தையாக மாறியதைத் தொடர்ந்து நோவாசியான் தம் நிலையை இன்னும் அதிகக் கடுமைப்படுத்தினார். கிறித்தவர்கள் தம் மதத்தை மறுதலிப்பது போன்ற எந்தவொரு கொடிய பாவத்தைக் கட்டிக்கொண்டால் அவர்களுக்குப் பாவ மன்னிப்பே கிடையாது என்றும், கடவுளின் நீதி இருக்கையின் முன் இறுதித் தீர்ப்பின்போது மட்டுமே அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற முடியும் என்றும் நோவாசியான் கூறலானார்.[4] இது "நோவாசியக் கொள்கை" (Novatianism) என்று பெயர்பெறலாயிற்று.[5]

Remove ads

கொர்னேலியுஸ் படிப்பினைக்கு சிப்பிரியான் ஆதரவு

திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் உரோமைத் தெய்வங்களுக்கு பலிசெலுத்திய கிறித்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று திருத்தந்தை கொர்னேலியுஸ் கூறிய கருத்துக்கு அவருடைய நண்பரும் தலைசிறந்த இறையியல் வல்லுநருமான புனித சிப்பிரியான் என்பவர் முழு ஆதரவு தெரிவித்தார். அவர் நோவாசியானைச் சபைநீக்கம் செய்தார்.

மேலும், அலெக்சாந்திரிய நகர் ஆயர் புனித தியோனீசியுஸ் மற்றும் பெரும்பான்மையான ஆப்பிரிக்க, ஆசிய ஆயர்கள் அப்போதனைக்கு ஆதரவு அளித்தார்கள். உரோமையில் ஒருசில குருக்களும் பொதுநிலையினரும் கொர்னேலுயுசுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நோவாசியானை ஆதரித்தார்கள்.

Remove ads

உரோமைச் சங்கம் அளித்த தீர்ப்பு

இதைத் தொடர்ந்து கொர்னேலியுஸ் உரோமையில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அதில் 60 ஆயர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கொர்னேலியுசை முறைப்படியான திருத்தந்தை என்று உறுதிப்படுத்தியதோடு, எதிர்-திருத்தந்தையாகத் தம்மை அறிவித்துக்கொண்ட நோவாசியானையும் ஆதரவாளர்களையும் சபைநீக்கம் செய்தனர்.

திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் தங்கள் உயிரைக் காப்பதற்காகக் கிறித்தவத்தை மறுதலித்தவர்கள் பொருத்தமான விதத்தில் மனவருத்தம் தெரிவித்தபின் நற்கருணை விருந்தில் பங்கேற்க அனுமதிக்கப்படலாம்; அவர்களுக்கு மறு திருமுழுக்கு வழங்கவேண்டியதில்லை என்று சங்கம் தீர்ப்பளித்தது.

Remove ads

கொர்னேலியுஸ் எழுதிய கடிதம்

உரோமையில் நடந்த சங்கத்தின் முடிவுகளை உள்ளடக்கிய ஒரு கடிதத்தை கொர்னேலியுஸ் அந்தியோக்கியா நகர் ஆயராகவும் நோவாசியானின் ஆதரவாளருமாக இருந்த ஃபாபியுஸ் (Fabius) என்பவருக்கு அனுப்பினார். நோவாசியானுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியல்ல என்று அக்கடிதத்தில் கொர்னேலியுஸ் எழுதினார்.

மூன்றாம் நூற்றாண்டுத் திருச்சபை

திருத்தந்தை கொர்னேலியுஸ் அந்தியோக்கியா நகர் ஆயரான ஃபாபியுசுக்கு எழுதிய கடிதம் நோவாசியானை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. அதே நேரத்தில் அக்கடிதத்திலிருந்து மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உரோமைத் திருச்சபை எந்த அளவு பரவியிருந்தது என்பது பற்றி சில தகவல்கள் கிடைக்கின்றன. உரோமைத் திருச்சபையில் திருப்பணி புரிந்தவர்கள்:

  • குருக்கள்: 46
  • திருத்தொண்டர்கள்: 7
  • துணைத் திருத்தொண்டர்கள்: 7
  • பீட உதவியாளர்: 42
  • பேயோட்டுநர்: 52
  • பல வாசகர்கள், காவலர்கள்
  • கைம்பெண்கள்: 1500 (திருச்சபை அலுவலர்கள்)
  • மொத்த கிறித்தவர்கள்: 50 ஆயிரம் பேர் (மதிப்பீடு).
Remove ads

கொர்னேலியுசின் இறப்பு

மன்னன் டேசியுசுக்குப் பிறகு கால்லுஸ் (Gallus) மன்னர் ஆனார். அவரும் கிறித்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். 252, சூன் மாதத்தில் மன்னனின் ஆணைப்படி திருத்தந்தை கொர்னேலியுஸ் கைதுசெய்யப்பட்டு, உரோமையின் துறைமுகப் பட்டினமாகிய சீவித்தா வேக்கியா என்னும் இடத்துக்கு நாடுகடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின் அவர் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். சிறையில் இருக்கும்போது அவருக்கு ஆதராவாக புனித சிப்பிரியான் அவருக்கு உருக்கமானதொரு கடிதம் எழுதினார்.

கொர்னேலியுசுன் உடல் உரோமைக்குக் கொண்டுபோகப்பட்டு, ஆப்பியா நெடுஞ்சாலையில் உள்ள கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய கல்லறைமீது வைக்கப்பட்ட கல்வெட்டு இலத்தீன் மொழியில் உள்ளது. அதற்கு முன்னர் கிரேக்க மொழி பயன்படுத்தப்பட்டது.

உரோமை திருப்பலி நூலில் பெயர் சேர்ப்பு

புனித கொர்னேலியுவின் பெயர் உரோமை திருப்பலி நூலில் (Roman Missal) நற்கருணை மன்றாட்டில் சேர்க்கப்பட்டது. அதுபோலவே அவருடைய நண்பரும் ஆதரவாளருமான புனித சிப்பிரியானின் பெயரும் அதில் இடம்பெற்றது.

இந்த இரு புனிதர்களின் திருநாளும் செப்டம்பர் 16ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்

நூல் பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads