கோவைக்கிழார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் (சி. எம். இராமச்சந்திரன், நவம்பர் 30, 1888 - டிசம்பர் 3, 1969) வழக்குரைஞராய் இருந்து தமிழறிஞரானவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு,கல்வெட்டு, கவிதை,உரைநடை,நாட்டுப்புற இலக்கியம்,கோயிற்கலை,சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத கொங்குநாட்டு வரலாற்றை எழுதினார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார்(கோவைக்கிழார்), பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

கோவைக்கிழாரின் இயற்பெயர், இராமச்சந்திரன் செட்டியார். 1888ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் நாள் மருதாசலம் செட்டியார் - கோனம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். தொடக்கக்கல்வியை கோவை நகராட்சிப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை இலண்டன் மிசன் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1912 இல் பி.எல். பட்டமும் பெற்று கோவையில் வழக்குரைஞராய் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். அத்தொழிலில் அவர் மனம் ஈடுபடவில்லை. தமிழ் இலக்கண, இலக்கியங்களை, திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோரிடம் கற்றுக்கொண்டார்.

Remove ads

இலக்கியப்பணி [1]

இவர் நாள்தோறும் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உடையவர். அவர் எழுதியுள்ள நாட்குறிப்புகள் அக்காலச் சூழல், பண்பாடு,வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணை செய்கின்றன. இவருடைய நாட்குறிப்புகள் ஏறத்தாழ 160 தொகுப்புகளில் காணப்பெறுகின்றன. கட்டுரைகளையும்,கவிதைகளையும் தாமே தம் கைப்பட எழுதி ஒவ்வொரு தொகுதியாகப் பகுத்து அட்டை கட்டி நாற்பது தொகுதிகளுக்கும் மேல் வைத்துள்ளார்.

இந்து அறநிலையத் துறை ஆணையாளராக விளங்கியபோது தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துக் கோயில்களுக்கும், இவரே நேரில் சென்று அவ்வக் கோயில்களின் வரலாறு, நிர்வாக முறை, கோயில் அமைந்திருந்த சூழல் ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக குறிப்புகள் எழுதியுள்ளார். இக்குறிப்புகள், இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இக்குறிப்புகள் தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய வரலாறு எழுதுவோர்க்குப் பெரிதும் பயன்படவல்லன.

சமயக் கருத்துக்களையும் அனைவரும் நன்கு புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையான நடையில் பல கட்டுரைகளாக எழுதி வைத்துள்ளார். இவர் எழுதியுள்ள வரலாற்று நாடகங்கள், சிறுகதைகள், ஆங்கிலக் கவிதைகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சில் வராத நிலையில் உள்ளன.

பல ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ள அவர் படைப்புகளுள் ஒரு சிலவே வெளிவந்துள்ளன. அவர் எழுதிய சுவடிகளில் இதுவரை வெளிவந்தவை காற்பகுதிக்கும் குறைவே. இன்னும் வெளியிடப் பெறாத நூல்களும், கட்டுரைகளும், கவிதைகளும், நாட்குறிப்புகளும், பல்வேறு மாநாட்டுத் தலைமையுரைகளும் எனப் பல தொகுதிகள் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவுவன ஆகும். அவற்றை உரியவாறு தொகுத்துப் பதிப்பித்தல் வேன்டும். இச்சுவடிகள் அனைத்தையும், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம் நன்கு பேணிப் பாதுகாத்துத் தமிழ் கல்லூரி நூலகத்தில் வைத்துள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தில் பங்கு கொண்டு பழங்காலத்து அணிவகைகளை எல்லாம் கல்வெட்டின் துணை கொண்டு ஆய்ந்து அவை வழக்கில் இருந்த காலநிரல்படித் தொகுத்து, 'அணிப்பித்து' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். மேலும் 'அடியார்களும் கல்வெட்டுக்களும்' என்னும் தலைப்பில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னை அரசினர் ஓலைச் சுவடிகள் நூலகத்தின் துணையுடன் 'சோழன் பூர்வ பட்டயம்','கொங்குதேச ராசாக்கள்', 'பேரூர்க் கோவை' நூல்களையும், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் துணையுடன் 'இராமப்பய்யன் அம்மானை' நூலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணையுடன் 'தமிழிசைக் கருவிகள்' நூலையும் வெளியிட்டுள்ளார்.

இன்னும் வெளியிடப்பெறாத வரலாற்றுச் சுவடிகள் பல உள்ளன. இவற்றுள் சில 'சேல வரலாறு', 'ஈரோடு வரலாறு','இடிகரை வரலாறு','கொங்கு நாட்டு இடப்பெயர்கள்','பொள்ளாச்சி வரலாறு' ஆகியனவாகும்.

சமயம், உலகியல்,மருத்துவம்,அரசியல்,இலக்கியம் எனப் பல நிலைகளில் இவருடைய கட்டுரைகள் உருவாகியுள்ளதைக் காணலாம்.

'சமய நிலையங்கள்' என்னும் கட்டுரையில் நம்நாட்டில் அமைந்துள்ள சமயச் சார்பான நிறுவனங்கள் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தைச் சுட்டுகிறார். 'லீலைகள்' என்னும் கட்டுரையில் கோவை மாநகரில் சில நாட்கள் ஓய்விற்காக வந்து தங்கிய நவாப்பின் வினோத லீலைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எள்ளல் சுவை அமைந்த இக்கட்டுரையில் நவாப் காலையில் எழுந்து இரவில் படுக்கைக்குச் செல்லும் வரையில் அவர் நடத்திய கேளிக்கைகளையும், அவற்றிற்கான செலவு விவரங்களையும் , நவாப்பின் துணைவர்களும் , பிறரும் செய்யும் கேடுகளையும் சுட்டி, ஒருவருக்கு இந்த நாட்டில் இத்துணைச் செலவா? என மனம் புழுங்குகின்றார்.

'கருவறுப்பு','குடும்பத் திட்டம்','சமுதாய அரசியல்','ஒளிவீசும் நூல்','நாட்டுத்துறவிகளில் வேறுபாடுகள்', 'பரம்பரைக் குணங்கள்','அணி வேறுபாடுகள்', 'கதைகளில் ஆபாசம்', 'அகத்துறைப் பாடல்கள்','டால்பின்','இரத்த ஆராய்ச்சி','கட்டுரை தமாஷா','நன்மை தீமை', 'பிசாசின் பேச்சாளன் -Devils Advocate'-ன் மொழிபெயர்ப்பு, 'அறம் தோன்றிய புனித இடம்' ஆகியவை இவர் எழுதிய கட்டுரைகளில் சிலவாகும்.

கட்டுரைகள் மட்டுமல்லாது இவர் கவிதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதை நூல் தொகுப்புகளைப் பார்க்கும்போது இவர் கவிதை எழுதாத நாட்கள் இல்லை எனலாம். 'எனது செய்யுட்கள்','எனது செய்யுட்கள் - மொழிபெயர்ப்புகள்' என்ற தலைப்புகளில் இவர் தனது கவிதைகளைத் தொகுத்துள்ளார்.

முப்பது கதைகளுக்கு மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். 'இரயிலில் மோசடி','சிறுவர்க்கான கதைகள்,'ஒரு மூர்க்க வியாபரி' முதலாயின குறிப்பிடத்தக்கவை.

திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகள், இசை பற்றிய கட்டுரைகள், தேவாங்கர், கைத்தறி பற்றிய பல கட்டுரைகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கட்டுரைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கன்னடத்திலும், தெலுங்கிலும் ஆற்றிய உரைகள், சைவ சித்தாந்த மாநாட்டுத் தலைமையுரைகள், அறிவியல் சித்தாந்த மாநாட்டு உரைகள், தொல்பொருள் ஆராய்ச்சி மாநாட்டு உரைகள், இலங்கை நாட்டில் ஆற்றிய பல்வேறு உரைகள், ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன் சேர்ந்து நடத்திய தமிழர் மாநாட்டு உரைகள், பம்பாயில் 1922-ல் அன்னி பெசண்ட் அம்மையார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகள் எனப் பலநூறு கட்டுரைகள் இவருடைய கையெழுத்துச் சுவடித் தொகுப்புகளில் உள்ளன.

Remove ads

சமூகப் பணி

தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொண்டார். சென்னையில் படிக்கும் காலத்திலேயே சமூகப் பணியிலும் ஈடுபட்டார். தாம் வழக்குரைஞர் தொழிலுக்குச் சென்றபிறகு, தம் குலத்துச் சிறுவர்களுக்குப் பணிபுரிய விரும்பி, "தேவாங்கர் சிறுவர் சபை" என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் செயலராக இருந்து பணிபுரிந்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டிப் பணிபுரிந்தார். அச்சபை இன்றும் கோவை - சுக்கிரவாரப்பேட்டையில் இயங்கி வருகிறது.

கோவைக் கிழார், 1918 ஆம் ஆண்டில் கோவை நகராட்சியின் துணைத் தலைவரானார். 1943, 1946 ஆகிய ஆண்டுகளில் பட்டதாரித் தொகுதியில் நின்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சி ஆலோசகராக இருந்தார்.

கோவையில் தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்து அதன் ஆட்சிக்குக்குழு உறுப்பினராய் இருந்தார். கோவைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் செயலாளராகப் பணிபுரிந்தார். கோவை - அரசுக் கல்லூரி பழைய மாணவர் கழகத்திலும், கோவை - காஸ்மோபாலிடன் கிளப்பிலும் (இறுதிக்காலம் வரை) தலைவராய் இருந்தார்.

சென்னை சுவடிச்சாலை, தஞ்சை சரஸ்வதி மகால் புத்தகசாலை ஆகியவற்றிலும் இவர் உறுப்பினராய் இருந்தார்.

தேவாங்கர் சாதியினர் நெசவுத் தொழில் ஒன்றிலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்ததால் அத்தொழிலை வளமுடையதாக்கப் பல கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார். இதற்காகப் பல மாநாடுகள் நடத்தி அவர்களின் குறைகளைப் போக்க முயன்றார்.

சமயப் பணி

கோவைக்கிழார், சென்னை - இராஜதானியின் அறநிலையத்துறை ஆணையாளராக இருந்தபோது, கோயில்களின் வருவாயில் ஒரு பகுதியை, சமய வளர்ச்சிக்கென ஒதுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியிடுதல், நூல் நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினார்.

கோயில்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறைப் பதிகங்களைக் கல்லில் பதித்தல், தல வரலாறுகள் எழுதுதல், கோயில் குடமுழுக்குகளை ஆகம முறைப்படி செய்தல் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தமிழ் நாடெங்கும் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறப் பாடுபட்டார்.

சமய ஆதீனங்களான தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, மயிலம் முதலியவற்றில் தமிழ்க் கல்லூரிகள் தோன்றக் காரணமாக இருந்தார்.

கொங்குநாட்டுப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பிலும் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாருடன் சேர்ந்து தோற்றுவித்து, அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

Remove ads

இதழ்கள் வெளியீடு

கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக கோவைக்கிழார் இருந்தபோது, "கொங்குமலர்" என்னும் திங்கள் இதழை நடத்தினார்.

சைவசித்தாந்த சமாசத்தின் இதழான, "சித்தாந்தம்" இதழுக்கும் ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார்.

நூல்கள் வெளியீடு

தஞ்சை சரஸ்வதி மகாலில் உறுப்பினராய் இருந்தபோது, "இராமப்பய்யன் அம்மானை" என்ற நூலையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக "தமிழிசைக் கருவிகள்" என்ற நூலையும் பதிப்பித்து வெளிப்படுத்தினார்.

கோவைகிழார், தமிழ் நாட்டின் வரலாற்றையும், புலவர்களின் வரலாற்றையும், கல்வெட்டு - செப்பேடுகளின் துணையால் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத கொங்குநாட்டு வரலாற்றை எழுதினார்.

ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்னும் அச்சில் ஏறாத நூல்களும் பல உள்ளன.

Remove ads

வெளிவந்த நூல்கள்

செய்யுள் நூல்கள்

  1. நாங்கள் எழுவர்
  2. வானவில்
  3. ஐயமதி
  4. தமையனும் தங்கையும்
  5. ஒரு துளி கடுகு
  6. மறைந்த பெருமை
  7. இளைஞர் பாடல்கள்
  8. கடவுள் வணக்கம்
  9. சிறுகதை பிற்பகுதி
  10. வாழ்க்கையோ கவலையோ
  11. தெய்வங்களின் புலம்பல்கள்
  12. திருவஞ்சைக்களம் செலவு
  13. மண்டைக்காடு விழா
  14. கடோப நிஷத்து

உரைநடை நூல்கள்

  1. கோயில் பூனைகள் (பேரூர் புலவர் பேரவை 1995)
  2. வீட்டு எலிகள்
  3. காட்டு எருமைகள்
  4. கடலில் கண்முத்து
  5. நாங்கள் எழுவர்
  6. சுந்தரரும் கொங்கும்
  7. செயற்கை நலம்
  8. மருதமலை மானமியம்
  9. பேரூர் வரலாறு
  10. பேரூர் மூர்த்திகள்
  11. தேவாங்கர் குல வரலாறு
  12. கொங்குநாட்டு வரலாறு
  13. கொங்குக் கட்டுரைகள்
  14. தேவியர் வரலாறு
  15. முட்டம் வரலாறு
  16. அன்னூர் வரலாறு
  17. கலசை வரலாறு
  18. சமணமும் கொங்கும் அபயசந்து
  19. சிறுகதைத் திறன்
  20. நாட்டுப்புறம்
  21. இதுவோ எங்கள் கோவை
  22. நால்வர்களும் கல்வெட்டுகளும்
  23. சேக்கிழாரும் கல்வெட்டுகளும்
  24. சமாஜத் தலைமை உரைகள் (விருதுநகர் மயிலம்)
  25. ஆண்டுவிழா தலைமை உரைகள் (தூத்துக்குடி,சாத்தூர்)
  26. துரையுர் மாணவர் தலைமை உரை
  27. கல்வி மாநாடுகள் உரைகள் (கோவை
  28. தேவாங்க மாநாடு உரைகள் (கோவை)
  29. உடற்பயிற்சி மாநாடு
  30. திருவாலங்காடு வரலாறு
  31. சமயங்கள் (கழக வெளியிடு)
  32. தமிழ் இசைக் கருவிகள்
  33. ஆங்கிலப் பாமகள்

நாடகங்கள்

  1. வீழ்ச்சியம் மீட்சியும்
  2. காஞசி மாதேவி
  3. சிவராத்திரி பெருமை
  4. நாட்டுப்பற்று
  5. சென்றமைந்தன் வென்றுவந்தது

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  1. கோவைகிழார்
  2. சிவக்கவிமணி
  3. அப்பாவு
  4. இராமலிங்கர்
  5. வெள்ளியங்கிரி கொங்கர்
  6. சுப்பைய கவுண்டர்
  7. விவேகானந்தர்
Remove ads

வெளிவராத நூல்கள்

செய்யுள் நூல்கள்

  1. அநாதை பெண்
  2. ஷேத்திரப் பிள்ளைத் தமிழ்
  3. சவுடாம்பிகை மாலை
  4. மாரியம்மை நூறு
  5. காந்தி பொன்மொழிகள்
  6. மிசிரக் கதைகள்
  7. ஆங்கிலப்பாக்கள் (மொழிபெயர்ப்பு)

உரை நடைகள்

  1. கன்னடமும் களிதெலுங்கும்
  2. மூன்று நவீனங்கள்
  3. யவன கதைகள்
  4. கல்லும் பேசுகிறது
  5. இயற்கை வளம்
  6. பெரியவர்கள்
  7. முகமது சரிதம்
  8. திரு.வி.க
  9. என் கதை -25 ஆண்டு
  10. என் கதை -பிற்பகுதி
  11. மெய்ப்பாடு - இன்பம்
  12. மெய்ப்பாடு - அவலம்
  13. ஜன்னல் வெளியே
  14. திருப்பருப்பதச் செலவு
  15. இலங்கைச் செலவு
  16. சேல வரலாறு
  17. ஈரோடு வரலாறு
  18. கொங்கு நாட்டுப் பெயர்கள்
  19. கைக்களஞ்சியம்
  20. பெருங்கதை
  21. இடிகரை வரலாறு
  22. இலக்கியத்தில் தாவரம்
  23. காவிரிக் கரையில்
  24. இந்திய வரலாற்றுக் கதைகள்
  25. துளசி தாசர் முதுமொழிகள்
  26. சிவமகிமை தோத்திரம்
  27. பொள்ளாச்சி வரலாறு
  28. தீமை யாதோ

நாடகங்கள்

  1. அட்டிகை
  2. ஜான்சி ராணி
  3. செருக்கின் வீழ்ச்சி
Remove ads

பட்டங்களும் விருதுகளும்

  • கோவைக்கிழாரின் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு, 1930 இல் இராவ்சாகிப் என்ற பட்டத்தையும், 1938 இல் இராவ்பகதூர் என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தது.
  • சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம், "செந்தமிழ்ப்புரவலர்" என்ற பட்டத்தையும் சென்னை மாநிலச் தமிழ்ச்சங்கம், "சிந்தாந்தப்புலவர்" என்ற பட்டத்தையும் மதுரை ஆதீனம் "சைவஞாயிறு" என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டியது.
  • கொங்குநாட்டு வரலாறு என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசளித்துப் போற்றியது. கோவை நன்நெறிக்கழகம் பொற்பதக்கம் வழங்கிப் போற்றியது.

மறைவு

கோவைக்கிழார் 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரின் சமாதி பேரூர் தமிழ்க்கல்லூரித் தோப்பில் அமைந்துள்ளது.

உசாத்துணை

குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads