சித்த மருத்துவம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அனுபவ அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டும், நவரத்தினம், நவலோகங்கள், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம் முதலிய தாதுப் பொருட்களைக் கொண்டும், சங்கு, பலகறை, நண்டு முதலிய சீவப் பொருட்களைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியன கொண்டும், தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்று விடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்றவற்றை ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். [மேற்கோள் தேவை] சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய சரநூல் மார்க்கம் கோதறு வகார வித்தை குருமுனி ஓது பாடல் தீதிலாக் கக்கிடங்கள் செப்பிய கன்ம காண்டம் ஈதெலாம் கற்றுணர்ந் தோர் இவர்களே வைத்தியராவர்..... (-- சித்தர் நாடி நூல் 18 --)

மனித சரீரத்தை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்கக் காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது.

#"உண்டிமுதற்றே உணவின்பிண்டம்
#உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - புறநானூறு,18"

நாம் உண்ணும் உணவே உயிர் உடலிலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.

நம் உடலில் வளி, அழல் மற்றும் ஐயம் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

Remove ads

வாதம் தொடர்பான பிணிகள்

வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பித்தம் தொடர்பான பிணிகள்

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

சிலேத்துமம் தொடர்பான பிணிகள்

சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றி திருக்குறள் கூறுவது,

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்'

(நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.)

மருந்து

சித்த மருத்துவத்தில் உள் மருந்து 32, வெளி மருந்து 32 என 64 வகை மருந்து வடிவங்கள் (forms of medicine) உள்ளன.
மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்
மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்ப தினிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே
(-- திருமூலர் திருமந்திரம் --)
திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களைப் போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும், மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்கவும் வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.

அகமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன

“உள்மருந்து சுரசஞ்சாறு குடிநீர் கற்கம்
     உட்களி அடை ஓர்சாமம்
 உயர்சூரணம் பிட்டு வடகம் வெண்ணெய் நான்கின்
     உயிர் மூன்று திங்களாகும்
 விள் மணப்பாகு நெய் இரசாயனம் இளகம் நால்
     மேவும் அறுதிங்கள் எண்ணெய்
 விரலிடும் உயர்ந்த மாத்திரை கடுகு பக்குவம் 
     மிளிறும் தேனுாறல் தீநீர்
 கொள்ளாறும் ஓராண்டு மெழுகோடு குழம்பு ஐந்து
     கோப்பதங்கம் பத்தாகும்
 குருதிபொடி எழுபானோடு ஐந்தாண்டு நீறு கட்டு
     உருக்கு களங்கு நானுாறு
 எள்ளிடாச் சுண்ணம் ஐநுாறு கற்பம் சத்து
     குருகுளிகை மிக்க ஆயுள் என்று
 எவரும் மகிழ்ச்சித்தர் முப்பத்திரண்டக மருந்து
     இசைத்தவராய் உள்ளனவரோ”

(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)

அகமருந்துகளும், அவற்றின் எடுத்துக்காட்டுகளும்:

 1.சுரசம் - இஞ்சி சுரசம்
 2.சாறு  - கற்றாழைச்சாறு
 3.குடிநீர் - ஆடாதோடைக்குடிநீர்
 4.கற்கம் -கீழாநெல்லிக்கற்கம்
 5.உட்களி -கடுகு உட்களி
 6.அடை - துாதுவளை அடை
 7.சூரணம் - அமுக்கிராச்சூரணம்
 8.பிட்டு 
 9.வடகம் -தாளிசாதி வடகம்
10.வெண்ணெய்- குங்கிலிய வெண்ணெய்
11.மணப்பாகு - மாதுளை மணப்பாகு
12.நெய் - ஆடாதோடைநெய்
13.இரசாயனம் - இஞ்சிஇரசாயனம்
14.இளகம்- கேசரிஇளகம்
15.எண்ணெய்- பூரஎண்ணெய் 
16.மாத்திரை-பாலசஞ்சீவிமாத்திரை  
17.கடுகு -
18.பக்குவம்- பாவனக்கடுக்காய் 
19.தேனுாறல் -இஞ்சி
20.தீநீர்- ஓமம்
21.மெழுகு - கிளிஞ்சல் மெழுகு
22.குழம்பு- சாதிஜம்பீரக்குழம்பு
23.பதங்கம் -சாம்பிராணிப்பதங்கம்
24.செந்துாரம்- இரசசெந்துாரம்
25.நீறு அல்லது பற்பம்- முத்துப்பற்பம்
26.கட்டு- இரசக்கட்டு 
27.உருக்கு -
28.களங்கு 
29.சுண்ணம்- வெடியுப்பச்சுண்ணம்
30.கற்பம்  
31.சத்து- கடுக்காய் சத்து
32.குருகுளிகை- இரசமணி

வெளி அல்லது புறமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

“வெளிமருந்தே கட்டு பற்று ஒற்றடம் பூச்சு
     வேது பொட்டணம் தொக்கணம்
 மென்புகை மைபொடி திமிர்தல் கலிக்கம் நசியம் ஊதல்
     மேவு நாசிகாபரணமும்
 களிம்பு சீலை நீர்வர்த்தி சுட்டிகை சலாகை பசை
     களி பொடி முறிச்சல் கீறல்
 காரம் அட்டை அறுவை கொம்புறிஞ்சல் குருதி
     கண்டு வாங்குதல் பீச்சு இவை
 வெளிமருந்து முப்பத்திரண்டென்று கூறினார்
     விண்ணுலவு சித்தராமால்
 மேல்வர்த்தியும் புகை பீச்சு மை நசியமும்
     மென்கலிக்கங்கள் ஓராண்டு
 ஒளிவர்த்தி பொடி நீர் நாசிகாபரணம் இவை
     ஒரு மூன்று திங்களாகும்
 உயர்சீலை களிம்பு இவைகள் ஆறுதிங்கள் ஆகுமென்று
     ஓதினாராய் உளருமரோ”

(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)

வெளி அல்லது புறமருந்துகள்:

 1.கட்டு - இலைகள் அல்லது பட்டைகளை நைய இடித்தோ அரைத்தோ வதக்கியோ புளித்தநீர் முதலியவற்றில் வேகவைத்தோ கட்டுதல்
 2.பற்று- சரக்குகளை நீர்மப்பொருள் விட்டு அரைத்து சுடவைத்தோ சுடவைக்காமலோ நோயுள்ள இடங்களில் அப்புதல் 
 3.ஒற்றடம்-சரக்குகளை சூடுபடுத்தி துணியில் முடிந்து நோயுள்ள இடங்களில் ஒற்றுதல் 
 4.பூச்சு-நீர்மப்பொருட்கள் மற்றும் பசை குழம்பு நிலையில் உள்ளவற்றை நோயுள்ள இடங்களில் பூசுதல் 
 5.வேது- சரக்குகளை எடுத்து கொதிக்க வைத்து அதனின்று எழும் ஆவியை நவதுவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக இழுத்தல் 
 6.பொட்டணம்- சரக்குகளை துணியில் முடிந்து சுடவைத்த நெய்ப்புப் பொருட்களில் நனைத்து நோயுள்ள இடங்களில் ஒற்றடமிடுதல்
 7.தொக்கணம்- இது மர்த்தனம் எனப்படும். இது வெறுங்கையால் பிடிப்பதும் தைலங்களை தடவிப்பிடிப்பதும் என இரு வகைப்படும்
 8.புகை-சரக்குகளை நெருப்பிலிட்டு எழும் புகையைப்பிடித்தல் அல்லது குடித்தல் அல்லத புண் முதலியவற்றுக்கு தாக்கும் படி செய்தல்       
 9.மை- உ-ம் நீலாஞ்சனமை
10.பொடிதிமிர்தல்- உடம்பில் தேய்த்து உருட்டி உதிர்த்தல் உ-ம் மஞ்சள் பொடி
11.கலிக்கம் - சில சரக்குகளை சில சாறுகளால் அரைத்த உருட்டி மாத்திரையாக்கி தேனிலாவது வேறு சாற்றிலாவது உரைத்து கண்ணில் போடுதல்
12.நசியம்- இலைச்சாறு அல்லது தைலம் அல்லது மாத்திரைகளை தாய்ப்பாலுடன் உரைத்து மூக்கிலிடுதல்
13.ஊதல்- (ஆக்கிராணம்) சரக்குகளை வாயிலிட்டு மென்று காது முதலியவற்றில் ஊதல்
14.நாசிகாபரணம்-சரக்குகளை இடித்து மூக்கிலிடுவது
15.களிம்பு- உ-ம் வங்கவிரணக்களிம்பு வங்கக்களிம்பு
16.சீலை- குழம்பில் துணித்தண்டை தோய்த்து விரணங்களுக்கு உபயோகிப்பது 
17.நீர்- விரணங்களை கழுவுவதற்கு உபயோகிக்கும் நீர்மப்பொருட்கள் 
18.வர்த்தி - ஆறாத விரணங்களுக்கும் புரையோடும் விரணங்களுக்கும் வைப்பது 
19.சுட்டிகை - சுடுகை எனப்படும்
20.சலாகை- கட்டிகள் புரைகள் சிலைப்புண் பவுத்திரம் போன்றவற்றின் நோய் நிலைமையை அறிய உதவும் உலோகக்கருவிகள்
21.பசை - உ-ம் கார்போகிப்பசை
22.களி - நீர் விட்டு அரைத்த சரக்குகளை கரண்டியிலிட்டு சுடவைத்தோ சுடவைக்காமலோ கட்டுதல் 
23.பொடி - சரக்குகளை பொடித்து எடுத்து கொள்ளுதல்
24.முறிச்சல் - எலும்புகள் பிறழ்ந்து இருந்தால் அதனை சரியான நிலைக்கு மாற்றுதல்
25.கீறல் - கட்டி பரு கொப்புளம் ஆகியவற்றில் தங்கியுள்ள சீழ் இரத்தம் நீர் என்பவற்றை நீக்க கீறிவிடல் 
26.காரம் - விரணத்தை ஆற்றுவதற்காக தோற்றவிப்பதற்காக பயன்படுத்தப்படும் சில நச்சுமருந்துகளும் அதன் கட்டுகளும்
27.அட்டை விடல்- நோயுற்று வீங்கின இடங்களில் தீய இரத்தத்தை அகற்றுவதற்காக அட்டை விடல்  
28.அறுவை- தேவையில்லாதவற்றை அறுத்து நீக்கி தைத்து செம்மைப்படுத்தல் 
29.கொம்பு கட்டல் - உடைந்த உறுப்புக்களை இணைத்து மீண்டும் ஒட்டும்படி மரச்சட்டம் கட்டி வடல்
30.உறிஞ்சல் - விரணங்களிலுள்ள சீழ் குருதி என்பவற்றை உறிஞ்சி எடுத்தல்
31.குருதி வாங்குதல்- இரத்தக்குழாயை கீறி இரத்தத்தை வெளிப்படுத்தல்
32.பீச்சு- மலம் வெளிப்படாவிடில் குழாய் மூலமாக நீர்மப்பொருட்களை உட்செலுத்துதல்

(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)

Remove ads

பரிசோதனை

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் ஒரு சொட்டு நல்லெண்ணெயை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் அதிகரித்து உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.

Remove ads

அறிவியல் முறையாக்கமும், சீர்தரப்படுத்தலும்

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துரைகளையும் அறிவியல் முறையில் கிளினிக்கல் சோதனைக்கு (clinical trials) உட்படுத்தி சீர்படுத்தும் பணியில் சித்த மருத்துவ ஆய்வுக்கான நடுவண் அரசு நடுவம் ஈட்பட்டுள்ளது.[1] நீரழிவு நோய்க்கான D 5 சூரணம் மற்றும் காளாஞ்சக படை நோய்க்கான தயாரிப்பு 777 எண்ணெய் ஆகியன இவ்வாறு கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.[1]

Remove ads

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads