சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை புனித சிம்ப்ளீசியுஸ் (Pope Simplicius) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 47ஆம் திருத்தந்தையாக 468, மார்ச்சு 3ஆம் நாளிலிருந்து 483, மார்ச்சு 10ஆம் நாள்வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் மேற்கு உரோமைப் பேரரசன் ரோமுலுஸ் அகுஸ்துஸ் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது.
Remove ads
வாழ்க்கை
திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ் பற்றிய சில குறிப்புகள் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) என்னும் ஏட்டின் வழி கிடைக்கின்றன.
இவர் இத்தாலியில் உரோமை நகருக்கு அருகே உள்ள தீவொலி என்னும் இடத்தில் பிறந்தார். இவர்தம் தந்தை பெயர் காஸ்தீனுஸ்.
சிம்ப்ளீசியுசின் ஆட்சியின்போது திருத்தந்தையின் அதிகாரம் கிழக்கு உரோமைப் பேரரசில் குறைவாகவே இருந்தது. காண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதல்வராய் இருந்த அக்கேசியுஸ் என்பவர் தமது அதிகாரம் உரோமை ஆயரின் அதிகாரத்துக்கு இணையாகக் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். சிம்ப்ளீசியுஸ் அதற்கு இணங்கவில்லை.
திருத்தந்தை லியோ காலத்தில் நிகழ்ந்த கால்செதோன் பொதுச்சங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, சிம்ப்ளீசியுஸ் இயேசு கிறிஸ்து பற்றிய திருச்சபைக் கொள்கையைத் திரிபுக் கொள்கையிலிருந்து பாதுகாக்க பாடுபட்டார். திரிபுக்கொள்கையை ஆதரித்த யூட்டிக்கஸ், இயேசு கிறிஸ்து உண்மையாக இறைப்பண்பும் மனிதப்பண்பும் ஒருங்கே கொண்டிருக்கின்றார் என்னும் திருச்சபைக் கொள்கையை மறுத்திருந்தார்.
இவ்வாறு கீழைத் திருச்சபையில் கொள்கை பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில் சிம்ப்ளீசியுஸ் அந்த விவாதத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை. தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற வசதிகள் இல்லாத அக்காலத்தில் செய்தி கிழக்கிலிருந்து மேற்கு சென்று சேர காலம் பிடித்ததும் இதற்கு ஒரு காரணம். மேலும், அக்கேசியுஸ் வேண்டுமென்றே சிம்ப்ளீசியக்கு ஒத்துழைப்பு நல்க மறுத்ததும் இன்னொரு காரணம்.
Remove ads
மேற்கு உரோமைப் பேரரசின் முடிவு
சிம்ப்ளீசியுசின் ஆட்சிக் காலத்தில் மேற்கு உரோமைப் பேரரசு மிகவும் சுருங்கிவிட்டிருந்தது. இத்தாலியும் பிரான்சின் ஒரு சிறு தென்பகுதியும் பேரரசுக்குள் இருந்தன. மேலும் செருமானிய படைத்தலைவர்கள் பேரரசின் அதிகாரத்தில் அதிகமதிகம் பங்கேற்கலாயினர். மேற்கு உரோமைப் பேரரசின் கடைசி பேரரசர் என்று கருதப்படுகின்ற ரோமுலுஸ் அகுஸ்துஸ் அப்போது சிறுவனாக இருந்தார். அவர்தம் தந்தை ஒரேஸ்தஸ் என்பவர் உரோமைப் படைத்தலைவராக இருந்தபோது ஜூலியஸ் நேப்போஸ் என்னும் உரோமை மன்னரைப் பதவி இறக்கிவிட்டு தாமே ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு தம் மகன் ரோமுலுஸ் அகுஸ்துஸ் உரோமைப் பேரரசன் என்று அறிவித்திருந்தார்.
அவ்வமயம் வடக்கிலிருந்து பார்பேரிய படைத்தலைவர்கள் கூலிப்படைகளின் உதவியோடு இத்தாலி மீது படையெடுத்துவந்தனர். அவர்களுள் முக்கியமான ஓடோவாக்கர் என்பவர் 476, செப்டம்பர் 4ஆம் நாள் ரோமுலுஸ் அகுஸ்துசைப் பதவி இறக்கிவிட்டு தம்மை ஆளுநராக அறிவித்தார். ஓடோவாக்கர் தனித்தியங்கிய அரசனாகத் தம்மைக் கருதாமல், கிழக்கு உரோமைப் பேரரசனாக இருந்த சேனோ (Zeno) என்பவரின் தலைமையை ஏற்று, தாம் அவர்க்குக் கீழே இத்தாலிப் பகுதியை ஆளுவதாக அறிவித்தார்.
Remove ads
சிம்ப்ளீசியுஸ் ஆற்றிய பணிகள்
ஓடோவாக்கர் கத்தோலிக்க திருச்சபையின் கொள்கையை ஏற்காத திரிபுக் கொள்கையைக் கொண்டிருந்தாலும், திருத்தந்தையின் ஆட்சியில் குறுக்கிடவில்லை.
திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ் உரோமையில் பல கட்டடங்களை எழுப்பினார். பொதுக் கட்டமாக இருந்த ஓர் இடத்தை அவர் கோவிலாக மாற்றினார். அக்கோவில் கத்தாபார்பராவில் அமைந்த புனித அந்திரேயா கோவில் என்று பெயர்பெற்றது.
மறைச்சாட்சியாக உயிர்நீத்த புனித பிபியானா என்பவரின் நினைவாக திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ் உரோமையில் ஒரு கோவில் கட்டுவித்தார்.
திருத்தந்தை தம் தூதுவர்கள் வழியாக எசுப்பானியாவில் தம் அதிகாரத்தை நிலைநாட்டினார். செவில் நகர சேனோ என்பவரை அங்கு தம் பதிலாளாக நியமித்து, தம் கட்டளைகள், வழிமுறைகள் போன்றவற்றைச் செயல்படுத்தினார்.
இறப்பும் அடக்கமும்
திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு, 483, மார்ச் 10ஆம் நாள் உயிர்துறந்தார். அவருடைய உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் உள்முற்றத்தில் திருத்தந்தை லியோவின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.
திருவிழா
சிம்ப்ளீசியுசின் திருவிழா அவர் இறந்த நாளான மார்ச் 10ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads