சிறுநீரேந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறுநீரேந்தி (urinal) என்பது சிறுநீர் கழிப்பதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது ஆகும். இது பொதுவாக ஆண்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதை ஆண்களுக்கான பொதுக் கழிப்பறைகளிலேயே காண முடியும். சிறுநீரேந்திகளில் இரு வகைகள் உள்ளன. ஒன்று சுவர் வகை, மற்றது கிண்ண வகை. இரண்டுமே கழிவுநீர் அகற்றும் வசதிகளையும், தன்னியக்கமான அல்லது மனிதரால் இயக்கப்படும் நீரடிப்பு (flushing) வசதிகளையும் கொண்டன.


கிண்ணவகைச் சிறுநீரேந்திகள் தனித்தனியாகச் சுவரில் பொருத்தப்படுகின்றன. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். பல தேவைப்படுமிடத்துச் சுவரில் வரிசையாகக் கிண்ணங்கள் பொருத்தப்படும். இவற்றுக்கு இடையே பெரும்பாலும் சிறிய மறைப்புக்கள் பொருத்தப்படுவது உண்டு. சுவர் வகைச் சிறுநீரேந்திகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும்படி அமைந்தவை. இரண்டு வகைச் சிறுநீரேந்திகளுமே நின்ற நிலையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டவை.
பெருமளவினர் பயன்படுத்தக்கூடிய இடங்களில் மனிதரால் இயக்கப்படும் நீரடிப்பு வசதி போதுமானதல்ல. இதனால், தன்னியக்கமான நீரடிப்பு வசதிகள் பொருத்தப்படுவது விரும்பப்படுகிறது. இதிலும் பொறிமுறையாக இயங்கும் சாதனங்களும், மின்னணுவியல் அடிப்படையில் இயங்கும் நீரடிப்பு வசதிகளும் உள்ளன. முதல் முறையில் ஒரு தொகுதி சிறுநீரேந்திகளுக்குப் பொதுவாக ஒரு சிறிய நீர்த்தாங்கி இருக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இதற்குள் நீர் நிரம்பும்படி அமைக்கப்பட்டிருக்கும். நீர் குறிப்பிட்ட அளவுக்கு நிரம்பியதும், நீரிறக்கி முறையில் தன்னியக்கமாகவே சிறுநீரேந்திகள் நீரினால் அலசப்படும். இம்முறையில் சிறுநீரேந்திகள் பயன்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் நீரடிக்கப்படும். மின்னணு முறையில் ஒவ்வொரு சிறுநீரேந்திக்கும் மேல், மனிதருடைய மார்பளவு உயரத்தில் உணர்கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். ஒருவர் பயன்படுத்தியபின் வெளியேறியதும் அதை உணரும் கருவி சமிக்ஞை கொடுக்க, குறிப்பிட்ட சிறுநீரேந்திக்கு மட்டும் நீரடிப்பு நடைபெறும்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads