சீதக்காதி

வள்ளல் சீதக்காதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ் பெற்ற வள்ளல் ஆவார். இவர் பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும்.

வரலாறு

இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'முஹம்மது பாத்திமா நாய்ச்சியார்'. இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற 'முகம்மது அப்துல் காதிறு'; இவரின் தம்பியார் 'ஷைகு இப்றாகீம் மரக்காயர்' ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கல ஆயர் மரபில் வந்தவர்கள், அதாவது கப்பலில் வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; சீதக்காதியின் தாயைப் பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்' ஆவார். இவர் இறந்த நாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads

ஊர்

இவர் பிறந்து வளர்ந்த ஊர் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தது கீழக்கரை என்றும், காயல்பட்டினம் என்றும் இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. காயல் என்ற பெயரில் பழையகாயல், புன்னைக்காயல், கீழக்கரை, காயல்பட்டினம் என்ற நான்கு ஊர்கள் உண்டு. அவற்றுள் கீழக்கரை என்பதே சீதக்காதியின் ஊர் என்பர் ஆய்வாளர்[1] கீழக்கரைக்குத் தென்காயல் என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.அந்த நகருக்குப் பௌத்திரமாணிக்கம், அனுத்தொகைமங்கலம், செம்பிநாடு, நினைத்தது முடித்தான் பட்டினம், வகுதை, வச்சிரநாடு முதலிய பெயர்களும் உண்டு என்பர் ஆய்வாளர்.

Remove ads

காலம்

இவர் வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி; தோராயமாகக் கி.பி.1650-1720 என்பர். சீதக்காதி ஒரு தமிழர். இசுலாம் சமயத்தவர்; புகழ்பெற்ற வள்ளல். இந்து-முசுலீம் என்று வேற்றுமை பாராட்டாது அனைவரையும் சமமாகக் கருதி ஆதரித்தவர்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றிய பெருமகனார். சீதக்காதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இசுலாமியப் பெரியார் 'சதக்கத்துல்லா வலி' ஆவார்; இவர் இசுலாமியப் பேரறிஞர்; மார்க்கக் கல்வியைப் பரவச் செய்தவர். இவர் சீதக்காதியின் நண்பரும் குருவும் ஆவார். இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன்சேதுபதி இவரின் நெருங்கிய நண்பர். கிழவன் சேதுபதிக்குச் சீதக்காதி மதியுரை அமைச்சர் போன்று விளங்கினார். கிழவன் சேதுபதி அவர்களின் இயற்பெயர் 'விசய இரகுநாதத் தேவர்' என்பதாகும்; இவர் 1692 ஆம் ஆண்டில் மதுரையின் கீழ் உள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தனியாட்சி நடத்தத் தொடங்கினார். அப்பொழுது பாதுகாப்பிற்காக இராமநாதபுரக் கோட்டையும் அரண்மனையும் புதிதாக விரிவாக்கிப் பெரும் பாதுகாப்புடன் கட்டப்பட்டன. அதற்குப் பொன்னும், பொருளும் கொடுத்து உதவியவர் சீதக்காதி என்பர் [2]

கிழவன் சேதுபதி, சீதக்காதியை உரிமை பாராட்டி அவருக்கு 'விசயரகுநாதப் பெரியதம்பி' எனத் தன்பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

செய்தக்காதி(சீதக்காதி)நொண்டிநாடகத்தில்

இந்நிலம்புகழ்ப்ர தாபன் விசய/ இரகுநாத பெரிய தம்பி மகீபன், கன்னாவு தாரனையன் புகழ்பாடி நொண்டி/ களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.(1)

-எனச் சீதக்காதி, 'விசயஇரகுநாத பெரியதம்பி' எனப் புகழப்படுவதைக் காணலாம்.

அக்காலத்தே டில்லியை ஆண்ட முகலாயப்பேரரசர் அவுரங்கசீப் சீதக்காதியின்பால் பெருமதிப்புக் கொண்டவர்.

செல்வவளம்

இவர் பரம்பரையாகப் பெரும் செல்வமிக்க வணிகக்குடும்பத்தில் தோன்றியவர்; அன்றியும் இவரே கப்பல் வணிகம் செய்து பெரும்பொருளீட்டினார்.அக்காலத்தில் இங்கு வணிகம் செய்யவந்த ஆங்கிலக் கம்பெனி யாருக்குச் சீதக்காதியார் எழுதிய கடிதக்குறிப்புக்கள் உண்டு. அதில் "கும்பெனியாருக்கு எவ்வளவு மிளகு தேவையாயிருந்தாலும்தம்மால் அனுப்பமுடியும்" என்று அவர் எழுதிய கடிதக்குறிப்புஉண்டு.எனவே,அக்கால மிளகுவணிகம் முழுவதும் இவர்மூலமாகவே நடந்து வந்தது என்பர் ஆய்வறிஞர்.எனவே வணிகத்தின் மூலம் வானளாவிய செல்வத்தை ஈட்டினார்.ஈட்டிய செல்வத்தினை அனைவருக்கும் வழங்கிச் "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்.

Remove ads

இலக்கியங்கள்

பெரும்கொடைவள்ளலான இவர்மீது பல சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் எழுந்துள்ளன. அவை:

  • 1.செய்தக்காதி நொண்டிநாடகம்.
  • 2.செய்தக்காதி மரக்காயர் திருமணவாழ்த்து- ஆசிரியர் உமறு கத்தாப் புலவர்.
  • 3.சீதக்காதி பேரில் தனிப்பாடல்கள்.(படிக்காசுப்புலவர், நமச்சிவாயப்புலவர், தாசி முதலியோர் பாடியவை).

வள்ளல்தன்மை

நபிகள்நாயக மான்மியத்தைச் 'சீறாப்புராணம்' மூலமாக, உலகிற்குப் பரப்பப் பொருள்வளம் மிக்க சீதக்காதி பெரிதும் உதவினார். ஆனால் சீறாப்புராணத்தில் இவர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அபுல்காசிம் என்பவர் பற்றிய குறிப்புண்டு; மார்க்கப் பேரறிஞர் சதக்கத்துல்லா வலி பற்றிய குறிப்புண்டு; வள்ளல் சீதக்காதியை ஏன் அவர் சுட்டவில்லை என்பது குறித்துத் தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு விவாதங்கள் எழுந்ததுண்டு. 'செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும் -சாதி,மதம், இனம் பாராது வந்தோர்க்கெல்லாம்- இல்லையென்னாமல் வாரிவாரி வழங்கியமையே.

Remove ads

பஞ்சகாலத்தில்

அவர் காலத்தில் மிகப்பெரும் பஞ்சமொன்று வந்தது. அதில் ஏராளமானோர் உண்ண உணவின்றி மடிந்தனர். விலைவாசி உச்சக்கட்டத்தினை அடைந்தது. அத்தகைய பஞ்ச காலத்தில் ஏழை எளியோருக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் உணவு வழங்கி உதவினார் சீதக்காதி. இதனை,

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்

ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு

மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே

-என்ற படிக்காசுப்புலவரின் பாடல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சீதக்காதி இறந்தபின் படிக்காசுப்புலவர் பாடிய பாடல் படிப்போர் உள்ளத்தினை உருக்குவதாம்.

இவரின் மகள்வழிச் சந்ததியார் இன்னும் தமிழகத்தில் கீழக்கரையில் வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்ற சீதக்காதி வள்ளல் மிகப்பெரும் புகழ்வாழ்வு வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுள்ளார்.

Remove ads

சீதக்காதி வள்ளல்மேல் பாடிய தனிப்பாடல்கள்

  • படிக்காசுப்புலவர் பாடியவை

பாடல்: 1.

நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்/
பூசிக்கு நின்கைப் பொருளொன்றுமே, மற்றைப் புல்லர் பொருள்/
வேசிக்கும், சந்து நடப்பார்க்கும், வேசிக்கு வேலைசெய்யும்/
தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாநிதியே.

பாடல்: 2.

ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்/
கார்தட்டிய பஞ்ச காலத்திலே, தங்கள் காரியப்பேர்/
ஆர்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு/
மார்தட்டிய துரை,மால் சீதக் காதி வரோதயனே.

பாடல்: 3.

கஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன எட்டிமரம்/
காயாதிருந்தென்ன, காய்த்துப் பலனென்ன கைவிரித்துப்/
போய்,யாசகம்என உரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்/
ஓயாமல் ஈபவன், மால்சீதக் காதி ஒருவனுமே.

பாடல்: 4.

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே/
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில் பன்னூல்/
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் அனுதினமும்/
ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இருகரமுமே.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads