சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சைகள்
subash santhra bosh From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து சர்ச்சைகள் உள்ளன. இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட போதும் அறுபதாண்டுக்குப் பிறகும் நேதாஜி இறப்பின் மர்மம் விலகவில்லை. நேதாஜி பிழைத்திருந்ததற்கான சாத்தியங்கள், சாட்சியங்கள் தவிர்க்க முடியாதவை. அவர் மீது மக்கள் வைத்திருந்த அளவு கடந்த மரியாதையை வெளிப்படுத்த முடியாமல் தடுத்தது யார்? அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களின் முடிவுகள் வெவ்வேறாக இருப்பது ஏன்? மக்கள் அவர்களின் அன்புக்குரிய தலைவர் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறப்பட்டதை நம்பவில்லை. "Back from Dead", "India's biggest cover up" என்ற நூல்களின் ஆசிரியரான அனுஜ் தர், " இந்தியா சுதந்திரம் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்த நேதாஜி இறப்பின் மர்மம் குறித்துக் கண்டறிவது இந்திய அரசின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது ஒருபோதும் செய்யப்படவில்லை. மக்களின் வற்புறுத்தலுக்காக கமிஷன்கள் போடப்பட்டன.", என்று கூறுகிறார்.
Remove ads
கமிட்டியும் கமிஷன்களும்
1955 அக்டோபர் 6 ல் நேதாஜி ஸ்மாரக் சமித்தி என்ற தனியார் அமைப்பு விமான நிலையத்தில் நடந்த விபத்தில் நேதாஜி இறந்தாரா என்பதை ஆய்வு செய்ய முற்பட்டபோது தான் நேரு ஷாநவாஸ் கமிட்டியை அமைத்தார்.
ஷாநவாஸ் கமிட்டி
நேதாஜி 1945, ஆகஸ்டு 16 அன்று தபே விமான நிலையத்தில் நடந்த விபத்தில் இறந்தாரா என்பதை ஆய்வு செய்ய அரசால் அதிகார பூர்வமாக முதன்முதல் நியமிக்கப்பட்ட குழு ஷாநவாஸ் கமிட்டி. சுதந்திரம் அடைந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு - நேதாஜி காணாமல் போய் 11 ஆண்டுகளுக்குப் பிறகு- 1956- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. அது விபத்து நடந்த இடமான தைவானுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.காரணம் அந்த அரசுடன் சுமுக உறவு இல்லை என்று அரசால் கூறப்பட்டது. 1956 மே 18 ல் ஜப்பான் சென்றபோது ஷாநவாஸ் தைவான் செல்ல ஜப்பானுக்கான இந்திய தூதரான B.R. சென்னிடம் அனுமதி கேட்டபோது தைவான் செல்லத் தேவையில்லை என்றும் நேதாஜி இறந்துவிட்டதாக அறிவித்த ஜப்பானின் உதவி மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தைவானுக்குச் சென்றிருந்தால் விமான விபத்து எதுவும் நடக்கவில்லை என்ற உண்மை அப்போதே தெரிந்திருக்கும். காங்கிரஸ் அரசு இது குறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. ஷாநவாஸ் கமிட்டி ஜப்பான் அறுவை சிகிச்சை நிபுணர்களைச் சந்தித்தது. அவர்கள் "தீவிரமாகக் காயம்பட்ட நேதாஜிக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால் காயம் காரணமாக பின்னர் அவர் இறந்தார்" என்றும் கூறினார்கள். ஷாநவாஸ் கமிட்டி அதையே அறிக்கையாக சமர்ப்பித்தது. ஆனால் கமிட்டி உறுப்பினரும் நேதாஜியின் மூத்த சகோதரருமான சுரேஷ் சந்திர போஸ் கமிட்டி முடிவுடன் ஒத்துப்போக மறுத்துவிட்டார்.
கோஸ்லா கமிஷன்
1974- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு 1978- ல் அறிக்கை சமர்ப்பித்த கோஸ்லா கமிஷன் எந்த திட்டவட்டமான முடிவுக்கும் வரவில்லை.
ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன்
1999- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் 2005-ல் சமர்ப்பித்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அது எழுத்துப் பூர்வமான சாட்சிகள், மருத்துவ பதிவுகள், விமான நிலைய பதிவுகள் ஆகியவற்றை ஆதாரமாக எடுத்துக் கொண்டது. முகர்ஜி கமிஷனிடம் 5 கேள்விகளுக்கான பதில் கூறும்படி கூறப்பட்டது. கேள்விகள்: 1. சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? 2. இறந்து விட்டார் என்றால் கூறப்பட்ட விமான விபத்தில் தான் இறந்தாரா? 3. ஜப்பானியக் கோவிலில் உள்ளது நேதாஜியின் அஸ்தியா? 4. வேறு இடத்தில் இறந்தார் என்றால் எங்கே? எப்போது? எப்படி? 5. உயிருடன் இருக்கிறார் என்றால் எங்கே? பதில்கள்: 1. சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டார். 2. விமான விபத்தில் இறக்கவில்லை. ரஷ்யாவிற்குத் தப்பியிருக்கலாம். 3. ஜப்பானியக் கோவிலில் உள்ளது நேதாஜியின் அஸ்தி இல்லை. 4. நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாததால் கூற இயலாது. 5. கேள்வி பொருந்தாது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் 2005-ல் சமர்ப்பித்த அறிக்கையை காங்கிரஸ் அரசாங்கம் காரணம் கூறாமல் நிராகரித்தது. இந்த கமிஷன் பாரதீய ஜனதாக் கட்சி அரசால் அமைக்கப்பட்டது. அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பு காங்கிரஸ் அரசு வந்துவிட்டது. உள்துறை மந்திரி சிவராஜ் பாடீல் அவசரப்படுத்தியதால் உடனே அறிக்கை சமர்ப்பிக்க நேர்ந்தது. தைவான் அரசு மட்டும்தான் விசாரணைக்கு ஒத்துழைத்தது. அதனால் தான் அந்த தேதியில் அங்கே விமான விபத்து எதுவும் நடக்காததால் சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் ஜப்பானியக் கோவிலில் உள்ளது நேதாஜியின் அஸ்தி இல்லை என்றும் அறிக்கையில் உறுதியாகக் கூறமுடிந்தது. இந்திய அரசு உட்பட எந்த அரசும் ஒத்துழைக்கவில்லை.
Remove ads
ஹபிபுர் ரஹ்மான்
இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான லெப்டினன்ட் கர்னல் ஹபிபுர் ரஹ்மான் (B1269) என்பவர் மட்டுமே அந்த விமான விபத்தில் தப்பிய ஒரே நபர். நேதாஜி விமான விபத்தில் மரணமடைந்ததற்கு ஒரே நேரடி சாட்சி. மீண்டும் மீண்டும் பிரித்தானிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போதும் அவர் ஒரே பதிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறியதை மாற்றவேயில்லை. அவர் வாழ் நாள் முழுவதும் தனது தலைவரிடம் கொடுத்த இரகசிய வாக்குறுதியைக் காப்பாற்றினார் என்று கூறப்படுகிறது. அவர் திரும்பத் திரும்ப நேதாஜி விமான விபத்தில் தான் மரணமடைந்தார் என்று கூறினாலும் குறுக்கு விசாரணைகளில் தகவல்களை ஒரே மாதிரியாகத் தர இயலவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விவரிக்கும் போது ஒவ்வொரு முறையும் பதில்கள் மாறுபடுகின்றன. ஏன் மறைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகையில் நேச நாடுகள் அவரை எதிரியாக நினைத்தது தான் பதிலாக இருக்க முடியும். நேச நாடுகள் அவரை எதிரியாக நினைத்ததிலிருந்தே அவரால் தான் பிரித்தானிய அரசு கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்பது புரியும்.
போன்ஸ்லே(B1189) என்பவர் ஹபிபுர் ரஹ்மான் பற்றிக் குறிப்பிடும்போது நேதாஜி தன்னுடன் எப்பொழுதும் மிகவும் நம்பத் தகுந்த ஒரே ஒருவரை மட்டுமே அழைத்துச் செல்வார் என்று கூறுகிறார். இதற்கு முன்பு வீட்டுக் காவலில் இருந்து தப்பிச் செல்லும்போதும் ஒரே ஒரு உறவினரை மட்டுமே தன்னைச் சந்திக்க அனுமதித்திருந்தார்.
நேதாஜியின் சகோதரர் ஹபிபுர் ரஹ்மானைச் சந்திக்கச் சென்ற போது ரௌத்ரி என்ற இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர் சீருடை சம்பந்தமான ஒரு விதி மூலம் அவர் கூறுவது உண்மையல்ல என்று கூறினார். மேலும் கூறுகையில், "எனக்கு ஹபிபுர் ரஹ்மானைத் தெரியும். அவர் தனது தலைவருக்கு ஏதாவது உறுதி மொழி கொடுத்திருந்தாரானால் அவர் இறக்கும் வரை அவர் அதை மீற மாட்டார்", என்றார்.
Remove ads
நேதாஜி இறப்பு அறிவிப்பு பற்றி மற்றவர்கள் கருத்து
நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலியும் அரசாங்கமும் அறிவித்தது. நேச நாடுகள் இதை ஒரு தந்திரமாகத்தான் கருதின, நம்பவில்லை. அப்போதைய இந்திய வைஸ்ராய் அர்ச்சிபால்டு வாவெல் தனது டைரியில் " அவர் மறைந்து கொள்வதற்காக இந்த செய்தி கொடுக்கப்படுகிறது என்று சந்தேகிக்கிறேன்" என்று எழுதியுள்ளார். அப்போதிருந்த பிரித்தானிய இந்திய அரசாங்கம் நேதாஜி இறப்பை உறுதி செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நேதாஜியின் உறவினரான போஸ் (Grand nephew) ஜெர்மனியில் 1972 லிருந்து வசித்து வருகிறார். நேதாஜியின் மனைவி ஆனதால் அவரது உறவினரான(Great aunt) எமிலி செனகல், நேதாஜி உயிருடன் இருப்பது தனக்குத் தெரியும் என்று 1973-ல் கூறினாராம். எப்படியென்றால் நேதாஜி 1945க்குப் பிறகு ரஷ்யாவில் இருந்ததாக ராய்முண்ட் செனகல் என்ற ஜெர்மனி பத்திரிக்கையாளர் 1950- ஆரம்பத்தில் எமிலி செனகலிடம் கூறினாராம்.
1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்
- விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
- 1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிற்பாடுதான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மம்த்தை அறிய மக்களிடம் அலையை ஏற்படுத்தியது. அதுவே நேருவை ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுகமாக தூண்டியது.
- மேலும் திடுக்கிட வைக்கும் விஷயம் இந்தியாவின் ரஷ்ய தூதர் Dr. S. ராதாகிருஷ்ணன் நேதாஜியை ரஷ்யாவில் வெளியே தெரியாத இடத்தில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பதாகும்.
- காபூலில் ஆப்கன் கவர்னர் கோஸ்ட் -இடம் ஆப்கனுக்கான ரஷ்ய தூதர்," மாஸ்கோவில் காங்கிரஸ் அகதிகள் உள்ளனர். அதில் நேதாஜியும் உள்ளார். கிலாசி மலாங்கிற்கு நேதாஜியுடன் நேரடித் தொடர்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.
- 1945க்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பின் வியட்னாமின் மரியாதைக்குரிய தலைவர் ஹோஸோமின் - உடன் நேதாஜிக்கு நட்பு இருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வியட்னாமில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- 1945 டிசம்பர் 20 அன்று வெளியான செய்திக்குறிப்பில் நேதாஜி உயிருடன் இருப்பதாக H.V. காமத் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மோலொடோஃப் என்ற ரஷ்ய வெளியுறவு மந்திரி மார்ச் 1946-ல் நேதாஜி ரஷ்யாவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
- 1946 நவம்பர் 7 அன்று ராஜா யுவராஜ் தத்தா சிங் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் துணைத்தலைவரான ஷீல் பத்ர யாஜீ நேதாஜி, உயிருடன் இருப்பதாகக் கூறியதாகக் குறிப்பிடுகிறார்.
- மாஸ்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள படோல்ஸ்க் இராணுவ ஆவணக் காப்பகத்தில் அலெக்சாண்டர் கொலசிரிகோவ் என்ற warsaw pact-ன் முன்னாள் மேஜர் ஜெனரல் 1996 அக்டோபரில் சில ஆவணங்களைப் பார்த்துள்ளார். அதில் நேதாஜியை ரஷ்யாவில் தங்க வைத்திருப்பதன் பல்வேறு விளைவுகள் குறித்து ஆராய்ந்ததற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் அதை நகலெடுக்கவோ ஆவண எண் போன்றவற்றைக் குறிப்பெடுக்கவோ அவர் அனுமதிக்கப்படவில்லை.
நேதாஜி உயிருடன் இருந்ததற்கு இவ்வளவு சாட்சியங்கள் இருந்த போதும் அதைப்பற்றி ஆராய காங்கிரஸ் அரசாங்கம் தயாராக இல்லை.
Remove ads
பகவான்ஜி
பகவான்ஜி அல்லது கும்னாமி பாபா(கும்னாமி பாபா என்றால் பெயரில்லாத துறவி என்று பொருள்) என்ற துறவி உத்தரப்பிரதேசத்தில் அயோத்யாவுக்கு அருகில் ஃபைசாபாத் என்ற இடத்தில் ராம்பவன் என்ற இல்லத்தில் வசித்தார். அவர் நேதாஜிதான் என்று மக்கள் நம்புகிறார்கள். அதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. Dr. B. Lal (Additional Director of the National Institute of Criminology and Forensic Science) என்ற கையெழுத்தியல் நிபுணர் முகர்ஜி கமிஷன் முன்பு ஆஜராகி "பகவான்ஜி மற்றும் நேதாஜி இருவரின் கையெழுத்து பொருந்துகிறது", என்று சாட்சியம் அளித்தார். பகவான்ஜி லக்னோவில் ஆலம்பா என்ற இடத்தில் ஸ்ரீநகர் என்ற பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை கொடுக்க இயலாததால் வீட்டு சொந்தக்காரர் தொந்தரவினால் காதியா என்ற கிராமத்தில் கோமதி நதிக்கரையில் ஒரு இடிந்த சிவன் கோவிலில் அடுத்த ஆறேழு மாதங்கள் வசித்தார். பகவான்ஜி ஒரு முறை "ஒரு துறவி ஆரம்ப கால வாழ்க்கையைப் பொறுத்தவரை இறந்தவராவார். அந்த துறவி இந்து மத முறைப்படி இயற்கையான மரணம் அடைய விரும்புகிறார். போர்க்குற்றவாளியாக அல்ல", என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான Dr.சம்பூர்ணாநந்த் டிசம்பர் 1954 முதல் ஏப்ரல் 1957 வரை பகவான்ஜியுடன் தொடர்புகொண்டு அவரது தேவைகளைக் கவனித்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
பகவான்ஜியுடன் தொடர்பில் இருந்தவர்கள்
சுரேஷ் போஸ்
நேதாஜியின் அண்ணன். ஷாநவாஸ் கமிட்டியின் உறுப்பினர். கமிட்டி முடிவுடன் ஒத்துப்போக மறுத்துவிட்டார்.
திலீப்ராய்
இவர் D.L. ராய் என்ற பிரபலமான பாடகரின் மகன். பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். நேதாஜி லண்டனில் இருந்தபோது உடன் இருந்தவர். இவர் துறவியாகி 1980 களில் இறந்தார்.
சுனில்தாஸ்
தேசப்பற்று மிகுந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதரர் அனில் தாஸ் டாக்கா சிறையில் சாகும் வரை அடித்துக் கொல்லப்பட்டார். அவருடைய தம்பியும் சகோதரியும் கூட சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள். அவர் ஒரு MSc பட்டதாரி. ராமன் விளைவு பற்றி அமெரிக்க இயற்பியல் இத்ழில் எழுதியுள்ளார். பகவான்ஜியின் நம்பிக்கைக்கு உரியவர்.
பசந்தி தேவி
சித்தரஞ்சன் தாஸின் மனைவி. நேதாஜியைத் தன் மகன் போல் நேசித்தார். அவரைப்பற்றிய செய்திகளால் மிகவும் வருத்தம் அடைந்து இருப்பதாக அஷூடோஸ் காளி என்பவர் பகவான்ஜிக்கு எழுதியுள்ளார்.
பபித்ரா மோஹன் ராய்
இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர். நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். 1962-லிருந்து 1985-ல் பகவான்ஜி மரணம் அடையும் வரை உடனிருந்தவர்.
சமர் குஹா
சமர் குஹா என்பவர், Nethaji: Dead or Alive என்ற நூலை எழுதியுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் நேதாஜியுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். பல முறை சந்தித்துள்ளார். நேதாஜி இந்தியாவில் இருப்பதாக சமர் குஹா அறிவித்தவுடன் பகவான்ஜி அவருடன் தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். அவரது பெரும் முயற்சியினால் நாடாளுமன்றத்தில் நேதாஜி படம் வைக்கப்பட்டது. 1967-ல் ஏப்ரல் 3-ல் 350 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிட்ட கோரிக்கையினால் கோசலா கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. நேதாஜி மத்தியப் பிரதேசத்தில் அமர்கந்தகா என்ற இடத்தில் செப்டம்பர் 27 1968 முதல் அக்டோபர் 2 1968 வரை இருந்ததாகவும் உத்தரப்பிரதேசத்தில் மணிப்பூரி என்ற இடத்தில் பிப்ரவரி, மார்ச் 1969 ல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
லீலாராய்
1963-ல் இருந்து அவர் இறக்கும் வரை (1970) பகவான்ஜியின் செலவுகளைக் கவனித்துக் கொண்டார். 1963 மார்ச் 25 அன்று ஸ்ரீகாந்த் என்பவரிடம் கூறுமாறு லீலாராயிடம்,"நான் என்னை வெளிப்படுத்துவது யாருக்கும் நன்மை தராது", என்று பகவான்ஜி கூறினார். லீலாராய் தனது கணவருடன் இந்திய காங்கிரசில் இருந்தவர். பின்னர் நேதாஜி காங்கிரசிலிருந்து விலகிய போது அவருடன் சேர்ந்துவிலகி ஃபார்வர்டு ப்ளாக்கில் சேர்ந்தனர். அவர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல பள்ளிகள், நிறுவனங்கள் துவக்கியவர். 1970-ல் லீலாராய்க்கு நேதாஜி எழுதிய கடிதம் தான் கையெழுத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கடிதம் ஆகும். பகவான்ஜி அறிவுரையின்படி அவர் 1963 செப்டம்பர் 7 அன்று திலீப் ராய்க்கு " உங்கள் நண்பர் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார்", என்று கடிதம் எழுதினார்.
1978-ல் மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாக இருந்தபோது முதல் 2 கமிட்டிகளின் முடிவுகளைத் தள்ளுபடி செய்தார். 1983 ஜூலை 6 அன்று Nethaji: Dead or Alive என்ற நூலின் மறு வெளியீட்டு விழாவில் மொரார்ஜி தேசாய், "நேதாஜி உயிருடன் இருக்கிறார். ஆனால் துறவு பூண்டுள்ளார்", என்று கூறினார்.
ஜஸ்டிஸ் முகர்ஜி பெங்காலியில் Times Now -இடம் 2010-இல் பகவான்ஜி நேதாஜியாக இருக்க 100% வாய்ப்புள்ளது." என்று கூறியது ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
பகவான்ஜி 1985 செப்டம்பர் 16 அன்று இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பொருட்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்க்கும் போது அவர் நேதாஜி தான் என்பது சந்தேகமில்லாமல் நிரூபணம் ஆகிறது. Charles Dickens-இன் புத்தகங்கள் பல, ஷேக்ஸ்பியரின் மொத்தப் படைப்புகள் அடங்கிய நூல், இன்னும் பல ஆங்கில புத்தகங்கள், புகைப்படங்கள் (அவை அனைத்தும் நேதாஜியுடன் சம்பந்தப்பட்டவை), பத்திரிக்கைக் குறிப்புகள் (அவை அனைத்தும் நேதாஜியுடன் சம்பந்தப்பட்டவை) போன்றவை அங்கிருந்தவை ஆகும். பகவான்ஜியின் பிறந்த நாளும், நேதாஜியின் பிறந்த நாளும் ஜனவரி 23 தான்.
Remove ads
நேதாஜி சந்தித்த துரோகங்கள்
அஹமது ஹெச் ஜாஃபர் 1946 அக்டோபர் 3 அன்று உள்துறை மந்திரியாக இருந்த சர்தார் வல்லபாய் படேலிடம் நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு "இல்லை" என்று பதில் கூறினாராம்.சர்தார் மங்கள் சிங்கின் இதே கேள்விக்கும் இதேபதில் அளித்துள்ளார். மேலும் மங்கள் சிங் "நேருஜி நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளாரே, அது அரசாங்கத்தின் கருத்தா அல்லது சொந்தக் கருத்தா" என்று கேட்டதற்கு அரசாங்கத்திற்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறினாராம்.
குருஷேவ் நௌரோஜி என்ற காந்திஜியின் காரியதரிசி காந்திஜி சார்பாக புரஃபசர் லூயிஸ் பிஷருக்கு எழுதிய கடிதத்தை ஃபைரவ் சந்திர பட்டாச்சார்யா, பிரின்ஸ்டன் யுனிவர்சிடி, USA- 1993-ல் பார்த்திருக்கிறார். அதன் ஒளிநகலை அமியா நாத் போஸ்க்கும் சமர் குஹாவிற்கும் அனுப்பியுள்ளார்.அக்கடிதம் 1946 ஜூலை 22-ல் எழுதப்பட்டுள்ளது. அதில் "இந்திய ராணுவத்தினருக்கு இந்திய தேசிய ராணுவத்தினரிடம் பரிவு உள்ளது. நேதாஜி ரஷ்யாவின் உதவியுடன் இந்தியா திரும்பினால் இந்தியர்களின் எழுச்சியை காந்தியாலோ காங்கிரசாலோ தடுக்க இயலாது", என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கடிதத்தில் நேதாஜியின் அப்போதைய நிலைமை குறித்தும் கேள்விகள் உள்ளன. காந்திஜி 1946 ஜனவரி 6-ல் மேற்கு வங்கத்தில் காண்டை என்ற இடத்தில் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் நேதாஜி உயிருடன் இருப்பதாகக் கூறினார்.
நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது. அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும் அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தாராம்.
மீரட்டைச் சேர்ந்த ஷியாம்லால் ஜெயின் என்பவர் கோசலா கமிஷன் முன்பு கொடுத்த விவரம் பின்வருமாறு:
1945 டிசம்பர் 26 அல்லது 27 அன்று ஸ்ரீ ஜவஹர் லால் நேரு என்னை ஸ்ரீ ஆசஃப் அலி இருப்பிடத்திற்கு தட்டச்சு இயந்திரத்துடன் வரச்சொன்னார். கொஞ்சம் தட்டச்சு செய்த பிறகு அவர் தனது அங்கியின் பையிலிருந்து எடுத்த ஒரு தாளை 4 நகல் தட்டச்சு செய்யும்படி கூறிவிட்டு ஸ்ரீ ஆசஃப் அலியுடன் பேசப் போய்விட்டார். அதில் "நேதாஜி 1945 ஆகஸ்டு 23 அன்று பைரன்(மஞ்சூரியா) பகுதிக்கு பகல் சுமார் 1.30 மணிக்கு (சைகானிலிருந்து) வந்தார். அது ஜப்பானியரின் வெடிகுண்டு வீசும் விமானம். நேதாஜி தேநீரும் வாழைப்பழமும் சாப்பிட்டார். நேதாஜி கைக்கு ஒன்றாக 2 பெட்டிகளை எடுத்துக்கொண்டு 4 பேருடன் ஒரு ஜீப்பில் ஏறினார். அதில் ஒருவர் ஜெனரல் ஷெய்தி(நேதாஜியுடன் விமான விபத்தில் மரணமடைந்தததாகக் கூறப்பட்டவர்). ஜீப் ரஷ்ய எல்லைப்பக்கமாகச் சென்றது. 3 மணி நேரம் கழித்து ஜீப் திரும்பி வந்து விமானியிடம் தகவல் தெரிவித்தபிறகு விமானம் டோக்கியோ சென்றது."', என்று எழுதியிருந்தது. கையொப்பம் புரியாததால் ஸ்ரீ நேருவுக்காக காத்திருந்த போது கடிதத்தைப் பலமுறை படித்தேன். பின்னர் நேரு 4 தாள்களைக் கொடுத்து அவர் கூறுவதைத் தட்டச்சு செய்யச் சொன்னார். அது
"திரு.கிளமண்ட் அட்லீ,
பிரித்தானிய பிரதம மந்திரி,
10, டௌனிங்க் தெரு,
லண்டன்.
அன்புள்ள திரு.அட்லீ,
சுபாஷ் சந்திர போஸ், உங்கள் போர்க்குற்றவாளி, ரஷ்ய எல்லைக்குள் வர ஸ்டாலினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் அறிகிறேன். இது ரஷ்யாவின் ஏமாற்றுவேலையும் நம்பிக்கைத் துரோகமும் ஆகும். ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்காவுடன் கூட்டு இருக்கும் போது இப்படிச் செய்யக்கூடாது. அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.
உங்கள் அன்புள்ள,
ஜவஹர் லால் நேரு.
மேற்கண்ட விஷயம் உள்ள முகவரி: hindustantimes.com/news/speacials/Netaji/pradip5.htm (மேற்கண்ட முகவரியிலிருந்து அந்த ஆதாரம் நீக்கபட்டுள்ளது)
நேதாஜி இந்திய தேசிய ராணுவம் அமைத்து நேச நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்ததால் நேசநாடுகள் அவரைப் போர்க்குற்றவாளியாகக் கருதின. அவர்கள் குற்றம் என்று குறிப்பிடுவது இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்திய சுதந்திரத்திற்காக நாடு நாடாக அலைந்து ஆதரவு திரட்டிப் பாடுபட்டது ஆகும். இந்திய தேசிய ராணுவத்தின் தியாகம் மிகுந்த செயல்பாடுகளால் இந்திய ராணுவத்திற்குள்ளேயே ஆங்கில எதிர்ப்பு தோன்றிவிட்டது. அதனால்தான்- இனியொரு போராட்டம் இந்தியாவில் ஏற்பட்டால் அதை அடக்க இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால்தான்- பிரித்தானிய அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது. அதனால்தான் நேசநாடுகளுக்கு நேதாஜி மீது அப்படி ஒரு கோபம். பார்த்த இடத்தில் தண்டிக்கக் காத்திருந்தார்கள். ஆனால் அவர் யார் கையிலும் சிக்கவில்லை. இந்திய காங்கிரஸ்காரர்களை விட ஜப்பன் அரசுக்கு நேதாஜி மீது மிகுந்த மரியாதை இருந்ததால்தான் நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலியும் அரசாங்கமும் அறிவித்தது. நேச நாடுகள் கூட்டணியில் இருந்தாலும் ரஷ்ய அரசு அவரைத் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. இந்திய அரசு கேட்டுக்கொண்டால் 45 நாட்களில் நேதாஜியை இந்தியாவுக்கு அனுப்புவதாக ரஷ்ய அரசு கூறியும் கேட்கத்தான் யாருக்கும் மனமில்லை. ஏனெனில் மக்களுக்கு நேதாஜி மீது மிகுந்த மரியாதை இருந்தது.
Remove ads
1971 ஜனவரி 23 அன்று வெளியான ஒரு செய்தித் தாள் குறிப்பு
நேதாஜியின் மெய்க்காப்பாளரான திரு. உஸ்மான் படேல் கூறுகிறார்," காந்திஜி, நேரு, ஜின்னா, மௌலானா ஆசாத் ஆகியோர் பிரித்தானிய நீதிபதி ஒருவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்களாம். அது நேதாஜி இந்தியாவில் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டு பிரித்தானிய அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என்பதாகும்". இதை மௌலானா ஆசாத் தன்னிடம் கூறியதாகவும் தான் எழுதப்போகும் புத்தகத்தில் இதைக் குறிப்பிடப்போவதாக கூறியதாகவும் கோசலா கமிஷன் முன்பு கூறியுள்ளார். மேலும் கூறுகையில் அவர் கண்ணீர் விட்டுக் கதறினார். உஸ்மான் படேலை 1945 அக்டோபர் 13 அன்று கைது செய்யும்பொழுது அவரிடம் இருந்து 21,600 சிங்கப்பூர் டாலர் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய தேசிய ராணுவத்தினருக்கு உணவுக்கான பொருட்கள் வாங்க வைத்திருந்த அந்தப்பணத்தை அவர் ரப்பர் விற்று சம்பாதித்த பணம் என்று கூறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மேற்கண்ட விஷயம் உள்ள முகவரி: hindustantimes.com/news/speacials/Netaji/images/jan_23_71.gif (மேற்கண்ட முகவரியிலிருந்து அந்த ஆதாரம் நீக்கபட்டுள்ளது)
அம்ரித் லால் சேத் என்ற குஜராத் தினசரி ஜனம்பூமியின் எடிட்டர் நேருவுடன் மார்ச் 1946-ல் சிங்கப்பூருக்குச் சென்றவர்களில் ஒருவர். அங்கிருந்து வந்தவுடன் சரத் சந்திர போஸிடம் பின்வருமாறு கூறினார்." மௌண்ட்பேட்டன் நேருவிடம் சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்ய வேண்டாம் என்றும் இந்திய ராணுவத்தில் இந்திய தேசிய ராணுவ வீரர்களைச் சேர்க்கவேண்டாம் என்றும் கூறியதாக தகவல் உள்ளது. இந்திய தேசிய ராணுவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது நேதாஜி இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் அவரிடம் தலைமைப்பதவியைத் தட்டில் வைத்து அளிப்பதற்குச் சமம் ஆகும் என்று கூறினாராம்."
Remove ads
வெளி இணைப்புகள்
- நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு
- நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மங்களை வெளியிட மோடி அரசு மறுப்பது ஏன்?: வைகோ கேள்வி பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம்
- நேதாஜியின் மரணத்தின் மர்மம்' மோடியிடம் கோரிக்கை!
- நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும்: மாநிலங்களவையில் வலியுறுத்தல்
- நேதாஜி கோப்புகளை வெளியிட வலியுறுத்தி டிச.23-ல் வைகோ ஆர்ப்பாட்டம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads