செக்கரியா (நூல்)
எபிரேய திருவிவிலிய நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செக்கரியா (Zechariah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]

செக்கரியா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் זְכַרְיָה (Zekharya, Zəḵaryā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Ζαχαριας (Zakharias) என்றும் இலத்தீனில் Zacharias என்றும் உள்ளது. இப்பெயருக்குக் "கடவுள் நினைவுகூர்ந்தார்" என்று பொருள்.
Remove ads
நூல் எழுந்த காலமும் உள்ளடக்கமும்
செக்கரியா நூலை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதற் பகுதி: 1 - 8 அதிகாரங்கள். இப்பகுதி கி.மு. 520 முதல் 518 வரையுள்ள காலத்தைச் சார்ந்தது. இதில் எட்டு காட்சிகள் அடங்கியுள்ளன. எருசலேமின் மீட்பு, கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற வாக்குறுதி, இறைமக்கள் தூய்மைப்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பு, மெசியாவின் வருங்கால ஆட்சி ஆகியன சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றன.
இரண்டாம் பகுதி: 9 - 14 அதிகாரங்கள். இப்பகுதியில் அடங்கியுள்ள குறிப்புகள் அனைத்தும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி மெசியாவைப் பற்றியும் இறுதித் தீர்ப்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது (9:9).
Remove ads
மையக் கருத்துகள்
இந்நூலில் இறையியல் கருத்துகள் பல உள்ளன. கடவுள் தம் மக்களைக் கைவிட்டுவிடவில்லை என்றும், அவர்களோடு எருசலேமில் அவர் தங்கியிருப்பார் என்றும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களை விடுவிப்பார் என்றும் செக்கரியா எடுத்துக் கூறுகின்றார்.
எருசலேம் கோவிலையும் அதற்குத் தலைமையாகக் குருத்துவத்தையும் செக்கரியா உயர்த்திப் பேசுகிறார்.
வரவிருக்கும் மெசியா பற்றிய முன்னறிவிப்பு செக்கரியா நூலில் உள்ளதாகக் கிறித்தவர்கள் விளக்கம் தருகின்றனர். குறிப்பாக இந்நூலின் அதிகாரங்கள் 7 முதல் 14 வரையுள்ள பகுதியில் மெசியா குறித்த இறைவாக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளன. இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் பற்றிய முன்னறிவிப்புகள் இங்கே காணப்படுகின்றன என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. அதுபோலவே, திருவெளிப்பாடு என்னும் புதிய ஏற்பாட்டு நூலிலும் செக்கரியா நூலிலுள்ள உருவகங்கள் வருகின்றன.
Remove ads
நூலிலிருந்து சில பகுதிகள்
செக்கரியா 2:10-11
ஆண்டவர் கூறுகிறார்:
"'மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி;
இதோ நான் வருகிறேன்;
வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர்.
அந்நாளில் வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்;
அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள்.
அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்."
செக்கரியா 7:9-10
"ஆண்டவர் கூறுகிறார்:
'நேர்மையுடன் நீதி வழங்குங்கள்;
ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்;
கைம்பெண்ணையோ, அனாதையையோ,
அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்;
உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத்
தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்.'"
உட்பிரிவுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads