செவீயா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செவீயா என்பது எசுப்பானியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதி ஆகும். இது ஆந்தலூசியா பகுதியிலுள்ள செவீயாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 140 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 703,206 ஆகும். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. இது ஐபீரிய தீபகற்பத்தின் தென்மேற்கில் உள்ள குவாடல்கிவிர் ஆற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரமானது ஆந்தலூசுயாவின் மிகப்பெரிய நகரமாகவும், எசுப்பானியாவில் நான்காவது பெரிய நகரமாகவும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் 30 வது அதிக மக்கட் தொகை கொண்ட நகராட்சியாகவும் திகழ்கிறது. இதன் பழைய நகரம் 4 சதுர கிலோமீட்டர் (2 சதுர மைல்) பரப்பளவில், மூன்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. அவையாவன அல்காசர் அரண்மனை வளாகம், பேராலயம் மற்றும் இந்தீசின் பொது காப்பகம் என்பனவாகும். அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் அமைந்துள்ள செவீயா துறைமுகம் எசுப்பானியாவில் உள்ள ஒரே நதி துறைமுகமாகும். [சான்று தேவை] கோடைகாலத்தில் செவீயா நகரம் அதிக வெப்பநிலையை அனுபவிக்கிறது. சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் தினசரி அதிகபட்சம் 35 °C (95 °F) க்கு அதிகமாக இருக்கும்.
Remove ads
சொற்பிறப்பியல்
செவீயாவின் பழமையான பெயர் ஹிஸ்பால் என்பதாகும். இப்பெயர் தென்மேற்கு ஐபீரியாவில் டார்ட்டீசியன் கலாச்சாரத்தின் ஃபீனீசிய காலனித்துவத்தின் போது தோன்றியதாகத் கருதப்படுகின்றது. ஹிஸ்பால் என்பது பால் கடவுளைக் குறிக்கிறது.[1] மானுவல் பெல்லிசர் கேடலின் கூற்றுப்படி பண்டைய பெயரான ஸ்பால் இது ஃபீனீசிய மொழியில் "தாழ்நிலம்" என்று பொருள்படும். உரோமானிய ஆட்சியின் போது இந்த பெயர் இலத்தீன் மொழியில் ஹிஸ்பால் என்றும் பின்னர் ஹிஸ்பாலிஸ் என்றும் அழைக்கப்பட்டது. உமையாக்களின் படையெடுப்பிற்குப் பிறகு இந்த நகரத்தின் பெயர் அரபியில் இஷ்பிலியா என்று மாற்றப்பட்டது.[2]
Remove ads
புவியியல்
குவாடல்கிவிர் நதியின் வளமான பள்ளத்தாக்கில் இந்த நகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 7 மீட்டர் (23 அடி) உயரத்தை கொண்டுள்ளது. நகரத்தின் பெரும்பகுதி ஆற்றின் கிழக்குப் பகுதியிலும், ட்ரயானா, லா கார்டூஜா மற்றும் லாஸ் ரெமிடியோஸ் ஆகிய இடங்கள் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளன. அல்ஜராஃப் பகுதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேலும் இது பெருநகரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. நகரம் வடக்கே லா ரிங்கோனாடா, லா அல்காபா மற்றும் சாண்டிபோன்ஸ் ஆகியவற்றுடன் கிழக்கில் அல்காலே டி குவாடைராவுடன், தெற்கில் டோஸ் ஹெர்மனாஸ் மற்றும் கெல்வ்ஸ் என்பவற்றுடனும், மேற்கில் சான் ஜுவான் டி அஸ்னால்ஃபராச், டோமரேஸ் மற்றும் காமாஸ் ஆகியவற்றுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.
Remove ads
காலநிலை
செவீயா கோப்பனின் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைவாக மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்டுள்ளது.[3] இந்த நகரம் மிகவும் வெப்பமான, வறண்ட கோடைகாலங்களையும் மற்றும் லேசான, ஓரளவு ஈரமான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மத்திய தரைக்கடல் காலநிலைகளைப் போலவே செவீயா கோடைகாலத்திலும் வறண்டதாகவும், குளிர்காலத்தில் ஈரப்பதமாகவும் இருக்கும். சராசரி ஆண்டு வெப்பநிலை பகலில் 25.4 °C (78 °F) ஆகவும், இரவில் 13 °C (55 °F) ஆகவும் இருக்கும். மே முதல் அக்டோபர் கோடைக் கால பருவம் நீடிக்கும். குளிர்காலம் லேசானது. சனவரி மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 16.0 °C (61 °F) ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5.7 °C (42 °F) ஆகவும் இருக்கும். ஆண்டு மழைவீழ்ச்சி 500 முதல் 600 மி.மீ வரை (19.7 முதல் 23.6 அங்குலம்) மாறுபடும். திசம்பர் ஈரப்பதமான மாதமாகும். இம் மாதத்தில் சராசரியாக 99 மில்லிமீற்றர் (3.9 அங்குலம்) மழைவீழ்ச்சி பதிவாகும். ஆண்டிற்கு சராசரியாக 50.5 நாட்கள் மழை பெய்யும்.
பொருளாதாரம்
செவீயா தெற்கு எசுப்பானியாவில் அதிக மக்கட் தொகை கொண்ட நகரமாகும். மேலும் ஆந்துலூசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதி இந்நகரத்தினால் வழங்கப்படுகின்றது.[4] பெருநகரப் பகுதியில் உள்ள அனைத்து நகராட்சிகளும் செவீயாவின் பொருளாதாரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்துள்ளது. அதே நேரத்தில் விவசாயம் சிறிய கிராமங்களின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
கல்வி
செவீயாவில் மூன்று பொது பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவையாவன் 1505 ஆம் ஆண்டில் இல் நிறுவப்பட்ட செவீயா பல்கலைக்கழகம், 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பப்லோ டி ஒலவிட் பல்கலைக்கழகம் மற்றும் 1994 இல் நிறுவப்பட்ட சர்வதேச ஆந்தூலூசியா பல்கலைக்கழகம் என்பனவாகும்.[5] மேலும் 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கூல் ஆஃப் ஹிஸ்பானிக் அமெரிக்கன் ஸ்டடீஸ், சென்டேவில் செயற்படும் கொண்ட மெனண்டெஸ் பெலாயோ சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் லயோலா பல்கலைக்கழக ஆந்தூலூசியா என்பனவும் அமைந்துள்ளன.[6]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads