சைமன் குழு
இந்திய விடுதலைப் போராட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைமன் குழு (சைமன் கமிஷன், Simon Commission) பிரித்தானிய இந்தியாவில் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று கண்டறியவும், அடுத்த கட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரை வழங்கவும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு குழுவாகும்.
1919ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் (மொண்டேகு-கெம்சுஃபோர்ட் சீர்திருத்தங்கள்) இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்து, சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசு இதை ஏற்கவில்லை; தேர்தலில் போட்டியிடவும் இந்தியாவின் நிருவாகத்தில் பங்கேற்கவும் மறுத்துவிட்டது. நீதிக்கட்சி போன்ற கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்று ஆட்சி செய்தன. இந்திய அரசுச் சட்டத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் நிறைகுறைகளை ஆராய ஒரு குழுவொன்றை அமைக்க வழிவகை செய்திருந்தது. அதன்படி 1927ல் பிரித்தானிய அரசாங்கம் ஏழு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்றக் குழு ஒன்றை அமைத்தது. இதன் தலைவர் சர் ஜான் சைமனின் பெயரால் இது சைமன் கமிசன் என்று வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு வந்து ஆட்சியாளர்கள், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என பல தரப்பினருடன் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளை கேட்டறிவதும், அடுத்த எந்த மாதிரியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம் என்பது குறிந்து பரிந்துரை செய்வதும் இக்குழுவுக்குத் தரப்பட்டிருந்த பணிகள். பெப்ரவரி 3, 1928ல் பம்பாய்க்கு சைமன் குழு முதல் முறையாக இந்தியா வந்திறங்கியது.
இந்தியர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறாததால் பெரும்பாலான இந்தியர்கள் அதிருப்தி கொண்டனர். இந்திய தேசிய காங்கிரசு, சுயாட்சி கட்சி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் சைமன் குழுவினை புறக்கணிக்க முடிவு செய்தன. சைமன் குழு இந்தியாவுக்கு வந்த போது அதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். “சைமன் திரும்பிப் போ” (Simon Go Back) என்ற கோசமிட்டபடி சைமன் குழு சென்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கருப்புக் கொடி போராட்டங்கள் நடத்தினர். நீதிக்கட்சி போன்ற சில கட்சிகள் சைமன் கமிசனுக்கு ஒத்துழைப்பு அளித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தன. அக்டோபர் 30, 1928ல் மீண்டும் சைமன் கமிசன் இந்தியா வந்த போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. அத்தகைய லாகூர் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் காயமடைந்த லாலா லஜபத் ராய் மரணமடைந்தார். சைமன் குழுவின் அறிக்கைக்குப் போட்டியாக மோதிலால் நேரு நேரு அறிக்கை என்ற அறிக்கையை வெளியிட்டார். அதில் இந்தியாவுக்கு மேலாட்சி நிலை வழங்கும்படி கோரப்பட்டிருந்தது.
இங்கிலாந்து திரும்பிய சைமன் குழு 1930ல் மே மாதம் தனது அறிக்கையை சமர்பித்தது. அதில் இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, இந்தியர்களுக்கு முழு பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரை செய்தது. மேலும் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் தனித் தனி வாக்காளர் தொகுதிகளைத் தொடரவும் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரைகளின் அடிப்படையிலும் வட்ட மேசை மாநாட்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டு 1937ல் இந்தியாவுக்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டது.
Remove ads
சைமன் குழு உறுப்பினர்கள்
- சர் ஜான் சைமன்
- கிளமண்ட் அட்லி
- ஹென்ரி-லெவி லாசன், பர்னாம் பிரபு
- எட்வர்ட் காடோகன்
- வெர்னான் ஹார்ட்ஷோம்
- ஜார்ஜ் லேன்-ஃபாக்சு
- டோனால்ட் ஹோவார்ட்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads