சைவ சமயத்தின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைவ சமயம் சிவனை முழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவநெறியானது, தனக்குள் பல பிராந்தியவாரியான வேறுபாடுகளையும், சிற்சில தத்துவ வேறுபாடுகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது.[1] சைவத்தின் காலத்தை வரையறுப்பது கடினமானது.

உடலில் சாம்பலைப் பூசிக்கொள்ளுதல் (விபூதி), கற்களை (இலிங்கம்) வழிபடல், விலங்காடை புனைதலும் மாமிசம் புசித்தலும் (இன்றைய அகோரிகளிடம் தொடர்வது) என்று பழங்குடிப் பண்புகள் பலவற்றை இன்றும் சைவத்தில் காணமுடிவதிலிருந்து, அதன் தொன்மையை ஊகித்துக் கொள்ளமுடியும்.
சிந்து நாகரிகம் (பொ.மு 2500-2000) நிலவிய மொகஞ்சதாரோ கரப்பா மற்றும் வடமேற்கு இந்தியாவின் தொல்லியல் பகுதிகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, அங்கெல்லாம் சைவம் நிலவியிருக்கலாம் எனும் ஒரு கருதுகோள் உண்டு.[2] இதற்கு ஆதாரமாக, அங்கு கிடைத்த சான்றுகளுள், "முந்துசிவன்" என ஆய்வாளர் கூறும் பசுபதி முத்திரையும்[3], இலிங்கத்தையொத்த கற்களும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Remove ads
தமிழிற் சிவந்தவன், செம்மையானவன் எனப் பொருள் தரும் "சிவன்" எனும் சொல், வடமொழியில் பண்டுதொட்டு அன்பானவன், மங்களவடிவினன் போன்ற பொருள்களிலேயே ஆளப்பட்டு வந்திருக்கிறது.[4][5] மங்களம் எனப் பொருள் தரும் உருத்திரன் எனும் பெயரில் ஈசன் சிலவேளைகளில் குறிப்பிடப்படுவதுடன், வேதத்தில் "திருவுருத்திரம்" (ஸ்ரீருத்ரம்) பகுதியில் போற்றப்படுபவன் ஈசனே என்ற நம்பிக்கையும் சைவர் மத்தியிலுண்டு.
இருக்கு வேதத்தில் அஞ்சத்தகுந்தவனாக சித்தரிக்கப்படும் உருத்திரன், யசுர் மற்றும் சாமவேதங்களில் கொண்டுள்ள பெரும் இடம், உருத்திர வழிபாடு மெல்ல மெல்ல சிவவழிபாடாக மாறியதை, அல்லது இருவேறு வழிபாடுகளும் ஒன்றாக இணைந்ததற்கு ஆதாரமாக விளங்குகின்றது. புகழ்பெற்ற இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்பனவற்றில் பல சிவவழிபாடு தொடர்பான சுவாரசியமான கதைகளும், சைவ தத்துவக் கோட்பாடுகளும் உண்டு.[6][7] பொ.மு நான்காம் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கணிக்கப்படும்[8] சுவேதாசுவதர உபநிடதம், முழுக்க முழுக்க சிவவழிபாடு பற்றிய மிகப்பழைய ஆவணமாகக் கொள்ளப்படுகிறது. பொ.மு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலியின் சங்கத இலக்கண நூலான மாபாடியம், விலங்குத்தோலாடை அணிந்து இரும்பு ஈட்டியொன்றைக் காவித் திரியும் ஈசனின் அடியவன் ஒருவன் பற்றி வர்ணிக்கின்றது.[7][9]
Remove ads
புராணங்களில் சைவம்
குப்தர் காலத்தின் (பொ.பி 6ஆம் நூற்றாண்டு) பிற்பகுதியில் தொடங்கிய புராண மரபு பல்கிப்பெருகி, வடநாட்டுப் பக்தி இயக்கத்துக்கு வழிவகுத்த ஒன்று. சைவம், வைணவம் என்பன பெருமதங்களாக வளர்ச்சியடைந்தது இக்காலகட்டம் தான்..[7] .[10] இந்துமரபில் மகாபுராணங்கள் எனப் புகழ்பெற்ற பதினெட்டிலும், பத்து புராணங்கள் சிவபுராணங்கள் ஆகும். ஏழாம் நூற்றாண்டளவில், வாரணாசி, காந்தாரம் (கந்தஹார்), கராச்சி முதலான இருபது இடங்களில் தான் கண்ட மிகப்பெரிய சிவாலயங்கள் பற்றி, சீனப்பயணியான ஹுவான் சாங் கூறியுள்ளார்..[11] இதை அண்மித்த காலப்பகுதியில் தான் சைவத்தின் சிறப்பு நூல்களான சிவாகமங்கள் எழுந்தன. எட்டாம் நூற்றாண்டிலேயே "பிரக்ய பிஞ்ஞை" எனும் தத்துவப்பிரிவாகக் கொள்ளப்படும் "காசுமீரசைவம்" வடநாட்டில் வசுகுப்தரால் பூரணத்துவம் பெற்றது.
தென்னகப் பக்தி இயக்கம்
சமணமும் பௌத்தமு செழித்திருந்த தமிழகத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலானோர் தலைமையில் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பித்த பக்தி இயக்கம், சோழப்பேரரசு காலம் வரை நின்று நீடித்து, தென்னகத்தில் சைவ எழுச்சிக்கு பெரும் உதவி புரிந்தது. அதேவேளை, 12ஆம் நூற்றாண்டில் பசவண்ணர் தலைமையில் கன்னடத்தில் எழுந்த வீரசைவ இலிங்காயதப் பிரிவு, இன்னொரு முக்கியமான சைவ எழுச்சி இயக்கமாகும். தமிழ்ச் சைவ எழுச்சி, 14ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம் எனும் தத்துவப் பிரிவு தோன்ற வழிவகுத்ததுடன், ஐரோப்பியர் காலத்தில் தென்னகத்தில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் வரை , தமிழ் இலக்கிய மற்றும் சமய இலக்கியங்களில் பெரும்பங்காற்றிய ஒன்றாகும்.
Remove ads
குறிப்பு
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads