திருக்கோளக்குடிக் குடைவரை
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குடவரைக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கோளக்குடிக் குடைவரை, தமிழ்நாட்டின்,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட உள்ள திருக்கோளக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில் ஆகும். இவ்வூரைத் "திருக்களக்குடி" என்றும் அழைப்பதுண்டு. பொன்னமராவதியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. இது ஒரு பாண்டியர் காலக் குடைவரை. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில்கள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கீழ் உள்ளது.[1] இக்குடைவரைக்கு அண்மையிலும், அதற்குச் செல்லும் வழியிலும் பல காலகட்டங்களையும் சேர்ந்த பிற்காலக் கோயில்களும், கட்டுமானங்களும் காணப்படுகின்றன. குடைவரையே இப்பகுதியில் அமைக்கப்பட்ட முதற் கோயில்.[2]
Remove ads
அமைப்பு
குடைவரையின் மண்டபம், ஒரு தூண் வரிசையாலும், தளமட்ட வேறுபாட்டாலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன இவற்றை முகமண்டபம், உள்மண்டபம் எனலாம். இங்கே இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும், இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களுடன் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும் அமைந்துள்ளன. இத்தூண்கள் ஒவ்வொன்றும் மேலும் கீழும் சதுர அமைப்பையும் நடுவில் எண்பட்டை அமைப்பையும் கொண்டவை. தூண்களின் சதுரப்பகுதிகளில் தாமரைப் பதக்கங்களைச் செதுக்கி அழகூட்டியுள்ளனர். தூண்களுக்கு மேல் தரங்க அமைப்புடன் கூடிய போதிகைகள் உத்தரத்தைத் தாங்கியிருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. உள் வரிசைத் தூண்களுக்கு மேலுள்ள போதிகைகளில் தரங்க அமைப்பு இல்லை.[3]
உள் மண்டபத்தின் பின்பக்கச் சுவரில் ஒரு கருவறை குடையப்பட்டுள்ளது. சதுரவடிவான இக்கருவறையின் நடுவில் தாய்ப் பாறையில் செதுக்கப்பட்ட ஆவுடையாருடன் கூடிய இலிங்கம் உள்ளது. இது தவிரக் கருவறையின் உட்பக்கச் சுவர்களிலோ கூரையிலோ எவ்வித வேலைப்பாடுகளும் இல்லை. கருவறை வாயிலை அண்டி இரு பக்கங்களிலும் இரண்டு அரைத்தூண்கள் உள்ளன. இதே வரிசையில் பக்கத்துக்கு இரண்டாக மேலும் நான்கு அரைத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரைத்தூண்கள் மண்டபத்தில் உள்ள தூண்களைப் போலன்றி, மூன்று சதுரங்களையும் அவற்றிடையே இரண்டு எண்பட்டைகளையும் கொண்டு வேறுபட்ட வடிவமைப்பில் காணப்படுகின்றன.[4]
இரண்டு தூண் வரிசைகளுக்கும் இடையே கருவறைக்கு எதிரில், அதைப் பார்த்தபடி தாய்ப்பாறையில் செதுக்கப்பட்ட நந்தியின் உருவம் உள்ளது.
Remove ads
தற்போதைய நிலை
திருப்பணிகள் என்ற பெயரில் இக்குடைவரையில் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் இதன் அழகைக் குறைத்துள்ளதுடன், இதன் முழுமையான கலையழகைப் பார்க்க முடியாமல் மறைத்தும் உள்ளன. தவிர இங்குள்ள கல்வெட்டுக்கள் சிலவற்றையும் படிக்கமுடியாதபடி மறைத்துள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads