திருடப்பட்ட தலைமுறைகள்

From Wikipedia, the free encyclopedia

திருடப்பட்ட தலைமுறைகள்
Remove ads

திருடப்பட்ட தலைமுறைகள் (Stolen Generations) எனப்படுவது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெசு நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் அப்போதைய அரசுகளின் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய கிட்டத்தட்ட 1869 முதல் (அதிகாரபூர்வமாக) 1969 வரையான காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் தலைமுறைகளை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயராகும். பெப்ரவரி 13, 2008இல் கெவின் ரட் தலைமையிலான ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்தது. கெவின் ரட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் சார்பாக அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்[1].

Thumb
சிறுவர்களை எடுத்துச் செல்லல்: சிட்னியின் விக்டோரியா மகாராணி கட்டிடத்தில் உள்ள ஓவியம்
Remove ads

வரலாறு

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பழங்குடிகள் தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்டனர். 1788இல் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளாக ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி, இப்பழங்குடிகளைக் கட்டாயமாக துப்பாக்கி முனையில் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றினார்கள். இந்நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கானவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

1910 முதல் 1969 வரையில் கிட்டத்தட்ட 100,000 வரையிலான சிறுவர்கள் காவற்துறையினராலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய தம் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள்.

இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள்[2].

Remove ads

விசாரணைகள்

மனித உரிமைவாதிகள், மற்றும் பழங்குடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல்களின் பலனாக, "வீட்டுக்குக் கொண்டு வாருங்கள்" (Bringing them Home) என்ற விசாரணை, "ஆஸ்திரேலிய மனித உரிமை மற்றும் சம உரிமை ஆணை"யின் தலைவர் சேர் ரொனால்ட் வில்சன், மற்றும் பழங்குடியினரின் பொதுநல உரிமை ஆணையாளர் மிக் டொட்சன் ஆகியோரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவர்கள் தமது விசாரணைகளில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து மொத்தம் 535 பழங்குடியனரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சுமார் 600ற்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். இவ்விசாரணையின் அறிக்கை 700 பக்கங்களில் மே 26, 1997 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது[3]. இந்த ஆவணத்தில் வழங்கப்பட்ட 54 பரிந்துரைகளில் முக்கிய மூன்று பரிந்துரைகளாவன:

  • அவுஸ்திரேலிய பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு முறைமையை ஏற்படுத்தல்.
  • பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல்.
  • அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல்.

இந்த ஆவணம் வழங்கப்பட்ட காலத்தில் ஜோன் ஹவார்ட் தலைமையிலான பழமைவாத ஆஸ்திரேலிய லிபரல் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தது. ஜோன் ஹவார்ட் இவ்வாறு பொது மன்னிப்புக் கேட்பதினால் இத்தலைமுறையினருக்கு பெரும் நட்டஈடு வழங்கப்பட வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் பொது மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். ஆனாலும் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வட மாநிலம் ஆகியவை அவற்றிற்குரிய மாநில நாடாளுமன்றங்களில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டன.

Remove ads

ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோரல்

Thumb
கெவின் ரட்டின் நாடாளுமன்ற மன்னிப்பு உரையின் நேரடி ஒளிபரப்பை அடிலெய்ட் மக்கள் எல்டர் பூங்காவில் காண்கின்றனர்.

டிசம்பர் 11, 2007 இல் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கெவின் ரட் தலைமையிலான தொழிற் கட்சி அரசு திருடப்பட்ட தலைமுறையினரிடம் தமது முறையான மன்னிப்பைக் கோரும் என அறிவித்தது. மன்னிப்பு வாசகங்களில் இடம்பெறக்கூடிய செய்திகளை பழங்குடித் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்தது[4]. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்[5].[6]

இம்மன்னிப்பு வாசகங்களின் மூலம் நட்டஈடு வழங்கல் தவிர்க்கப்பட்டுள்ளது என கெவின் ரட் உறுதியளித்தார்[7].

பெப்ரவரி 13, 2008 இல் பழங்குடியின மக்களுக்கு துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ள அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் என்பவற்றிற்காக அனைத்துப் பழங்குடியின மக்களிடமும் பிரதமர் கெவின் ரட் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்[8].

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads