திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1] மேலும் இது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலமும் ஆகும்.
Remove ads
அமைவிடம்
இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டம்,திருநாவலூரில் அமைந்துள்ளது.
திருத்தொண்டிஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம்
திருத்தொண்டர்களான 63 நாயன்மார்களைக் குறிக்கும் விதமாகத் திருத்தொண்டிஸ்வரம் எனப்பட்டது, பின்னாளில் அச்சொல்லுக்கு ஈடான வடமொழியில் பக்தஜனேஸ்வரம் எனப்பட்டது. இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.முதலாம் பராந்தக சோழன் ஆட்சிகாலத்தில் இவனின் மூத்த மைந்தன் இராஜாதித்தன் இக்கோவிலை கற்றளியாக்கியமையால் இவனது பெயரும் இணைந்து[2] திருத்தொண்டிஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது.[3]
திருக்கோபுரம்
இக்கோயிற் கோபுரம் கி.பி. 13 நூற்றாண்டை சார்ந்தது.இக்கோபுரமும் திருமண்டபமும் வீழ்ந்துவிட அண்ணமரசர் அவசரம் அலுவலகம் நரசிங்கராய உடையார் கி.பி.1480 இல் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகிறது.[4] மேலும் கோபுரத்தை சுற்றி நான்குபுறமும் உள்ள மதிலும் திருப்பணி செய்யப்பட்டது. என்று கல்வெட்டு கூறுகிறது.[5]கோபுரத்தின் மேல் ஐந்து செப்புக்கலசங்கள் சாலைவடிவில் உள்ளது. ஐந்து நிலைமாடம் உடையது. துவார பாலகர் ஐந்து நிலைமாடத்திலும் இருபுறமும் உள்ளனர். சுமார் 80 அடி உயரம் உடையது. இதனையடுத்து உள்ளே பிள்ளையார் சிலையும், பலிபீடமும் துவஜஸ்தம்பமும் உள்ளன. துவஜஸ்தம்பத்தின் முன் நந்தி உள்ளது, இது 4 அடி உயரம் உடையது. இதற்கு முன் சிறு மண்டபம் உள்ளது. இந்நந்தி கி.பி.10 நூற்றாண்டைச் சார்ந்தது.
கோயிலின் அமைப்பு

மூலவர் கிழக்கு நோக்கிய வண்ணம் உள்ளார். விமானம், முன்மண்டபம், உள்மண்டபம், மகா மண்டபம் உடைய கற்கோவில் ஆகும். கருவரையும், உள் மண்டபமும் முதலில் கட்டப்பட்டு (கற்றளியாக்கப்பட்டது). இதனை கற்றளியாக்கியவர் முதலாம் பராந்தக சோழன் ஆவார். அவரது 28 ஆவது ஆட்சியாண்டில் கி.பி.935 இல் கற்றளியாக்கப்பட்டது இதனை இக்கோயில் கல்வெட்டு மூலம் அறியலாம்.[6] பின்னர் முன் மண்டபம் இணைக்கப்பட்டுள்ளது.[7] அதன் பின்னர் மகா மண்டபம் எடுக்கப்பட்டு முன் மண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [8] முன் மண்டபம் வரை உள்ள பகுதிகள் முதலாம் பராந்தகன் (கி.பி.10)காலத்தவை. திருத்தொண்டிஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது.[9]
Remove ads
திருச் சுற்றுமாளிகை
இத்திருச்சுற்று மாளிகையில் பல்லவர் கால கற்சிலைகள் உள்ளன, முதலில் உள்ளது பெரிய சிவலிங்கம் ஆகும். சுமார் 6 அடி உயரம் உடைய இச்சிவலிங்கத்தை மன்னர் நரசிங்க முனையரையர் வணங்கியதாக தெரிகிறது இதனை ராசா பூசித்த லிங்கம்என்று வழங்குகின்றனர்.[10] இதன் பின்னர் உள்ள லிங்கம் அகத்தியர்லிங்கம் ஆகும். இதனையடுத்து 63 நாயன்மார்களின் கற்சிலைகள் வரிசையாக உள்ளது. அடுத்து சப்த மாதர்கள், சிறிய வராகி, வீரபத்ரர் சிற்பங்கள் உள்ளன. இறுதியாக நாக கன்னியும் சூலம் உள்ள கல்லும் உள்ளன.
Remove ads
பிற கோயில்கள்
இகோயிலின் உள்ளே பல சிறிய கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது அவை பிள்ளையார் கோயில், ஆறுமுகத்தோன் கோயில், சண்டேஸ்வரர் கோயில், சுந்தரர் கோயில், மனோன்மனியம்மன் ஆலயம், வரதராசப்பெருமாள் ஆலயம் ஆகியவை மேலும் பல்வேறு பல்லவர்கால கற்சிலைகளும் பல கடவுளர்களின் சிலைகளும் வெளிப்பக்கத்தில் காணப்படுகிறது.[11]
யானைமுகத்தோன் கோயில்
கோயிலின் திருச்சுற்று மாளிகையின் மேற்குப்புறத்தில் பிள்ளையாருக்கு கிழக்கு நோக்கி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.[12] [13] பிள்ளையார் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் உள்ளார். வலது கையில் அக்கமாலையும் இடது கை ஒன்றில் சங்கும் மற்றிருகைகள் தொடையில் வைதநிலையில் உள்ளார்.சுமார் 4 அடி உயரமுடைய இச்சிலை பல்லவர் கால அமைப்புடையதாய் உள்ளது.
ஆறுமுகத்தோன் கோயில்
கருவறையின் பின்புறம் கிழக்கு நோக்கி ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும், மயில் மேல் அமர்ந்த நிலையில் ஆறுமுகத்தோன் கோயில் உள்ளது.
சண்டேஸ்வரர் ஆலயம்
மகாமண்டபத்தில் வடக்குபுறம் ஒரு பகுதியை தடுத்து அதில் இவ்வாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.[14] கல்வெட்டில் சாத்துக்குட்டி மாதேவன் என்னும் வாமசிவன் என்பவன் சண்டேஸ்வரர் கற்றளி அமைத்தான் என்றுள்ளது.[15]
சுந்தரர் ஆலயம்
வெளிச்சுற்றில் கோபுரத்தை அடுத்து, மேற்கு முகமாக அமைந்துள்ளது, இவ்வாலயம், சுந்தரர் தன்னிரு மனைவியர்களுடன் வீற்றிருக்கிறார். காலம் கி.பி.12 நூற்றாண்டாகும். சுந்தரர் கையில் தாளத்துடனும், தலையில் கொண்டை அமைப்புடனும் காணப்படுகின்றார். அருகே பரவை, சங்கிலியார் நிற்கின்றனர். இக்கோவிலை பிரித்து கட்டியுள்ளனர். இராசராசன் காலத்தில் இக்கோயிலுக்கு சித்திரை திருவிழாவும் நடந்துள்ளது. திருப்பதிகமும் ஓதப்பட்டது.[16]
மனோன்மணியம்மன் ஆலயம்
இக்கோயில் கருவறை, உள்மண்டபம், மகாமண்டபம், அலங்கார மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றது. இங்கு அம்மன் சுமார் 4 அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ளது. நான்கு கைகள் உள்ளது. உள் மண்டபத்தில் துர்க்கை சிலை உள்ளது. இது பல்லவர் காலத்தைச் சார்ந்தது.[17]
வரதராசப் பெருமாள் ஆலயம்
இக்கோயில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. சோபான அமைப்புடன் இருபக்கமும் ஏறிவர வசதியாகப் படிகள் உள்ளன இது மிகச்சிறிய கோயில் ஆகும். உள்ளிருக்கும் திருமால் தன் தேவியரான சீதேவி, பூதேவியுடன் சுமார் 6 அடி உயரத்தில் உள்ளார்.
சுந்தரர் மடம்
சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூரில் பிறந்தார். அவர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் சுந்தரர் மடம் கட்டப்பட்டுள்ளது. அம்மடத்தில் சுந்தரர் சிலை வைத்து வழிபாடு நடந்து வருகிறது.[18]
சிங்க மண்டபம்

விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன, முன்பக்கம் இரு தூண்கள் சிங்க வடிவில் உள்ளன. எனவே இது சிங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதில் உற்சவமூர்த்திக்கு அபிடேகம் நடைபெறுவதால் இதனை அபிடேக மண்டபம் என்றும் அழைப்பர்.
Remove ads
ஸ்ரீ கலிநாரை
ஸ்ரீ கலிநாரை சிற்பம் மற்றும் பல்லவ கிரந்த கல்வெட்டு
வெளிப்பிரகார மேற்குச் சுவரிடையே வைத்துக் கட்டப்பட்ட நிலையில் ஒரு 6 அடி உயரச்சிற்பம் உள்ளது. இச்சிற்பம் இருபகுதிகளாக ஒரே கல்லில் உள்ளது. கீழ்ப்பகுதி சுமார் 3 அடி உயரத்தில் யானையின் முன்புறத் தோற்றமாக அமைய, அதன் தலைக்கு மேல் பட்டையான பகுதியும், அதற்கு மேல் கிரீவத்தோடமைந்த கூடு போன்ற பகுதியும் 3 அடியில் அமைந்துள்ளது. இப்பட்டையான நடுப்பகுதியில் "ஸ்ரீ கலிநாரை" என்ற பெயர் பல்லவ கிரந்த எழுத்தமைதியுடன் பொறிக்கப்பட்டுள்ளது.[19] [20] இது கி.பி.7 நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.[21]
Remove ads
தட்சிணாமூர்த்தி
தேவகோஸ்டத்தில் தெற்குப்பக்கம் மட்டுமே சிற்பம் உள்ளது. இது புதிய வகையில் அமைந்த சிற்பமாகும். தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் உள்ளார். பின்புறம் காளை காட்டப்பட்டுள்ளது. தலையில் ஜடாமகுடமும் இடது காதில் மகர குண்டலமும், வலது காதில் பத்ர குண்டலமும் உள்ளன. வலது மேற்கையில் அக்கமாலையும், கீழ்க்கை காளையின் மீதும் ஊன்றி உள்ளன. இடது பக்க கைகளில் ஒன்று திரிசூலம் ஏந்தியும், மற்றொன்று ஏடுதங்கியும் உள்ளது, காலில் வீரக்கழல் கணப்படுகிறது. தொடை வரை ஆடை அமைப்பு உள்ளது. இச்சிலை மிகவும் அருகியே காணப்படும். இது கி.பி.7 நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.[22]
Remove ads
சிற்பங்கள்
இக்கோயிலில் முருகன், பிள்ளையார், சிவலிங்கம், நடுகல் அமைப்பில் ஒரு வீரன், சண்டேஸ்வரர், ஸ்ரீ கலிநாரை ஆகிய ஆறு சிலைகள் வழிபாடின்றி இருக்கிறது.
பல்லவர் காலக் கற்சிலைகள்
விஷ்ணு ,பிரம்மன் ,சண்டேஸ்வரர் ஆகிய மூன்று சிலைகளும் பல்லவர் காலக் கலைப்பாணியுடன் விளங்குகிறது.
விஷ்ணு
விஷ்ணு சிலை சுமார் 6 அடி உயரமாக உள்ளது, மெல்லிய புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 9ம் நூற்றாண்டு.
பிரம்மன்
பிரம்மனின் சிலை 5 அடி உயரம் உடையதாக இருக்கிறது. விஷ்ணுவின் சிலை அமைப்பை உடையதாக இருக்கிறது. மூன்று தலைகள் தெரிகிறது, நான்கு கைகள் உள்ளன. வலது கைகளில் ஒன்று தாமரை தங்கியும் மற்றொன்று அபய ஹஸ்தமாகவும் உள்ளன.இடது கைகளில் ஒன்று அக்கமாலை ஒன்று ஏந்தியும் மற்றொன்று கடிஹஸ்தத்திலும் உள்ளது.
சண்டேஸ்வரர்
இச்சிலை சுமார் 2 அடி உயரம் உடையது.சண்டேஸ்வரர் சுகாசன நிலையில் கையில் மழுவேந்தி காணப்படுகிறார்.காலம் கி.பி 9ம் நூற்றாண்டு.
நடனமாதர்கள்
கருவறை அதிட்டானப் பகுதியில் உள்ள ஆடல் மங்கையர்
நடன மாதர்கள் சிலை திருச்சுற்று மாளிகையின் அதிட்டானப் பகுதியில் உள்ளது. ஒரு நடனமாதும் அவளின் இருபுறமும் மத்தளம் கொட்டுபவர்களாகவும் சிற்பங்கள் உள்ளது, இங்கு ஆடும் நடனமானது ஒரே கரணத்திலேயே காட்டப்பட்டுள்ளது. இச்சிலைகள் கி.பி.16ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.[23]
கஜலெட்சுமி
கோயிலின் வடகோடியில் அமைந்துள்ளது, இரு பக்கமும் யானைகள் இருக்க நடுவில் தேவி அமர்ந்துள்ளார், இது கி.பி 16ம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இவருக்கு நேர் எதிரே ஏழு லிங்கங்கள் ஆவுடையார் இன்றி புதைந்த நிலையில் உள்ளது. திருச்சுற்றில் நவக்கிரகம் உள்ளது, இது கி.பி 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது.[24]
சூரியன்
நவக்கிரகத்தை அடுத்துள்ளது. பல்லவர் காலப் பாணியில் உள்ளது. சுமார் நான்கு அடி உயரம் இருக்கும். கைகளில் தாமரை மொட்டும், பின்பக்க ஒளிவட்டமும் உள்ளன.கி.பி.9ம் நூற்றாண்டைச் சார்ந்த்தாகும்.[25]
செப்புத் திருமேனிகள்
தமிழ்நாட்டில் கோயிகளில் உள்ள செப்புத்திருமேனிகள் உலகப் புகழ் வாய்ந்தவையாகும்.[26] இக்கோயிலில் பதினெட்டுக்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் உள்ளன..[27]இவற்றில் பிக்ஷடானர், நரசிங்கமுனையரையர், சுந்தரர் இருமனைவியருடன், கூத்தப்பெருமான் ஆகிய செப்புச்சிலைகள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். மேலும் சம்பந்தர், அப்பர், சடைய நாயனார், இசைஞானியார், சோமஸ்கந்தர், பிரதோஷ மூர்த்தி, சூலதேவர், தனி அம்மன், பிள்ளையார், தன்னிரு தேவியருடன் முருகன், அதிகார நந்தி, சேரமான் பெருமான் நாயனார் போன்ற செப்புத்திருமேனிகளும் அடங்கும்.இவை கி.பி.15,16 நூற்றாண்டினைச் சார்ந்ததாகும்.[28]
Remove ads
திருவிழாக்கள்
இக்கோயிலில் சித்திரை தொடங்கி பங்குனி வரை தொடர்ந்து பலவிழாக்கள் நடக்கின்றன.[29]
சிறப்பு
அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது சுந்தரர் தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்).
இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி.சடைய நாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம். அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.[30]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads