திரெந்து பொதுச்சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரெந்து பொதுச்சங்கம் (இலத்தீன்: Concilium Tridentinum), 1545 முதல் 1563 வரை இத்தாலியின் வடக்கில் அமைந்துள்ள திரெந்து நகரில் நடந்த கத்தோலிக்க திருச்சபையின் 19ஆம் பொதுச்சங்கங்கம் ஆகும்.[1] சீர்திருத்த இயக்கத்தின் வளச்சிக்கு பதிலளிக்கும் வகையில் விளைந்த இச்சங்கத்தில் கத்தோலிக்க மறுமலர்ச்சியின் சாரம் உள்ளது என்பர்.[2][3]
சீர்திருத்தத் திருச்சபையின் கோட்பாடுகளை திரிபுக் கொள்கை என கண்டித்த இச்சங்கம் அதோடு மறைநூல், திருமுறை, புனித மரபு, பிறப்பு வழி பாவம், மீட்பு, அருட்சாதனங்கள், திருப்பலி, புனிதர்களோடு உறவு முதலிய பல அடிப்படை கிறித்தவ நம்பிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தது.[4]
13 டிசம்பர் 1545 முதல் 4 டிசம்பர் 1563 வரை இச்சங்கத்தில் 25 அமர்வுகள் இருந்தன.[5] முதல் எட்டு அமர்வுகளுக்கு மூன்றாம் பவுலும் 12 முதல் 16 முடிய இருந்த அமர்வுகளுக்கு மூன்றாம் ஜூலியுஸும் 17 முதல் 25 முடிய இருந்த அமர்வுகளுக்கு நான்காம் பயஸும் தலைமை வகித்தனர்.
இந்த பொது சங்கத்தின் விளைவாக திருச்சபையின் திருவழிபாட்டில் பல மாற்றங்கள் விளைந்தன. இச்சங்கத்தில் விவிலியத்தின் இலத்தீன் மொழிபெயர்ப்பான வுல்காதா அடிப்படை பதிப்பாக ஏற்கப்பட்டது. இதனடிப்படையில் நிலையான விவிலியப் பதிப்பு ஒன்று கொண்டுவரப்பட ஆவண செய்யப்பட்டது. ஆயினும் இதனை 1590கள் வரை செயல்படுத்த இயலவில்லை.[2]
1565இல் இச்சங்கம் நிறைவுற்ற போது திருத்தந்தை நான்காம் பயஸ் திரெந்து விசுவாச அறிக்கையை வெளியிட்டார். அவருக்கு அடுத்து வந்த ஐந்தாம் பயஸ் புதிய மறை கல்வி ஏடு, திருப்புகழ்மாலை மற்றும் திருப்பலி நூலின் புதிய பதிப்புகளை முறையே 1566, 1568 மற்றும் 1570 இல் வெளிக்கொணர்ந்தார். இம்மாற்றங்கள் அனைத்தும் அடுத்த 400 ஆண்டுகளுக்கு கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி முறைக்கு அடிப்படையாக அமைந்தன.
அடுத்த பொதுச்சங்கம் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு 1869இல் நடந்த முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads