தேசிக விநாயகம் பிள்ளை
தமிழகத்தில் வாழ்ந்த கவிஞர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவிமணி தேசிக விநாயகம் (Kavimani Desigavinayagam, 27 சூலை 1876 – 26 செப்டம்பர் 1954) 20ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாகத் தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்குப்பின் பிறந்த ஆண் மகவுக்குத் தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து, தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901-இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியைக் குட்டி, பிள்ளாய் என்று அழைத்துக் கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியைத் தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தன் அக்காள் மகன் சிவதாணுவைத் தன் மகன் போல வளர்த்தார்.[1]
Remove ads
ஆசிரியர் பணி
நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
குழந்தை இலக்கியப் பணி
தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 -இக்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.[2][3]
மொழிபெயர்ப்பாளர்
எட்வின் ஆர்னால்டின் என்பவர் எழுதிய Light of Asia என்ற நூலினைத் தழுவித் தமிழில் ஆசிய ஜோதியை எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவித் தமிழில் எழுதினார்.
ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.[4].
விருதுகள்

24 திசம்பர் 1940-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.[5]. 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954-இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005-இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.[1]
கவிமணியின் நூல்கள்
- அழகம்மை ஆசிரிய விருத்தம்
- மலரும் மாலையும், (1938)
- ஆசிய ஜோதி, (1941)
- மருமக்கள்வழி மான்மியம், (1942)
- உமார் கய்யாம் பாடல்கள், (1945)
- கதர் பிறந்த கதை, (1947)
- தேவியின் கீர்த்தனங்கள்
- குழந்தைச்செல்வம்
- கவிமணியின் உரைமணிகள்
- காந்தளூர் சாலை (ஆய்வு நூல்)
- தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads