தேவதாசி முறை

From Wikipedia, the free encyclopedia

தேவதாசி முறை
Remove ads

தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர்.[1] இவர்கள் இறைவனுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று கடவுளுக்கு திருமணம் செய்விக்கப்பட்டனர். இவர்கள் கடவுளை திருமணம் செய்தவர்களாதலால் நித்தியசுமங்கலியாக கருதப்பட்டனர். இவர்கள் கோயில் பணியாளர்களாக இருந்தனர். இந்த பெண்கள் ஆடல், பாடல் கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தனர். பெரும்பாலான தேவதாசிகள் சதிர் கச்சேரி என்னும் நடனக் கலைஞர்களாகவே இருந்தனர். இசை, நடனம் போன்றவற்றில் திறமை அற்றவர்கள், ஆர்வம் இல்லாதவர்கள் கோயிலை தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூ கட்டுதல், மடப்பள்ளிக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் கோயில்களில் இருந்த இந்தப் பெண்கள் தேவதாசி, மாதங்கி, நாயகி, மாத்தம்மா, பசவி, சூலி மகே, ஜோகினி, ஆடல் கணிகை, ருத்ர கணிகை, தளிச்சேரி பெண்டிர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டனர்.[2] ஒரு காலத்தில் மதிப்பு மிக்கவர்களாக இவர்கள் இருந்தனர்.

Thumb
தமிழ்நாட்டில் இரு தேவதாசிகள். 1920களில் எடுக்கப்பட்ட ஒளிப்படம்.
Remove ads

பெயர்க் காரணம்

இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும்.

வரலாறு

தேவதாசி என்ற சொல் முதலில் கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் உள்ள கல்வெட்டு (கி.பி.1113) ஒன்றில் காணப்படுகிறது.[3]

தேவரடியார் முறை

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது கோயிலுக்கு 400 தளிச்சேரி பெண்டிரை நியமித்து[4] அவர்களுக்கு குடியிருப்புகளை இராஜராஜ சோழன் அமைத்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. சோழர் காலத்தில் தளிச்சேரி பெண்டிர் சமூக மதிப்பு கொண்டவர்களாகவும், தான் விரும்பியவரை மணம் புரிந்து கொள்ள உரிமை கொண்டவர்களாக இருந்தனர். பல தளிச்சேரி பெண்டிர் கோயிலுக்கு தானங்களை அளித்தவர்களாக இருந்துள்ளனர். கி.பி.985 – 1070 காலத்தில் குடந்தை பகுதிகளில் 48% நிலப்பரிமாற்றம் பெண்களால் செய்யப்பட்டன. சோழர் கால கல்வெட்டுகளில் அதிக அளவில் நில தானங்களை அளித்த பெண்கள், 14-15 ஆம் நூற்றாண்டுகளில் இருவரோ மூவரோ மட்டுமே நிலக்கொடை அளித்துள்ளனர். இது கி.பி. 1070க்கு பிறகு தமிழகத்தில் பெண்கள் நிலை குறைந்ததை காட்டுகிறது.[5]

தேவதாசி முறை

14-15 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்த தேவதாசி காலக்கட்டங்களில் பெண்கள் குறைவாகவே நிலக்கொடை அளித்துள்ளனர். தேவதாசிகள் சமூகத்திலே நான்குவகைப் பிரிவுகள் இருந்தன. ஒன்று, தாங்களாகவே விரும்பி கோயிலுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், இரண்டாவது பெற்றோரால் கோயிலுக்கு அர்ப்பணிக்கபட்டவர்கள், மூன்றாவது தீட்சைப் பெற்றவர்கள், நான்காவது கோயிலில் நடனம் ஆடும் அலங்காரதாசிகள். தமிழகத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி ஒழிந்தபிறகு தேவதாசி முறை சீரழிவுக்கு ஆளாகத் துவங்கியது. கோயில்கள் மன்னரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து ஒருகட்டத்தில் ஊர்த் தலைவர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. அதன் பிறகு தோவரடியார்கள் தங்கள் அன்றாட வாழ்கைக்கு ஊர்த் தலைவர்களை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் அவர்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கபட்டனர்.[6] தஞ்சையில் வாழ்ந்த முத்துப்பழனி எழுதிய ராதா சாந்தவனம் என்ற காதல் பிரபந்தமும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் புதினமும் தாசி மரபு குறித்து ஓரளவு உதவுகின்றன.

Remove ads

தேவதாசி முறை ஒழிப்பு

நீதிக்கட்சியின் ஆட்சியில் பெரியாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி, தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். அவரது சட்டமன்ற உரையில் தேவதாசி முறை ஒழிப்பு குறித்து பேசிய போது "தேவதாசிகள் புனிதமானவர்கள். அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள். அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்" என்று சத்தியமூர்த்தி பேசினார். அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, “தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப்பெண்களைத் தேவதாசிகள் ஆக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்கலாமே" என்று பதிலுரை கூறியிருந்தார்.

தேவதாசி முறை 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வகித்த அரசர், செல்வந்தர், நிலக்கிழார் உள்ளிட்ட மேல் வர்க்கத்தினர் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன்[7][8][9][10] அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads