நாட்டு நலப்பணித் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme) என்பது இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். இது 1969ல் தொடங்கப்பட்டது.
வரலாறு
இந்திய விடுதலைக்குப் பிறகு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையில் இருந்து வந்த பல்கலைக்கழக மானியக் குழு தன்னார்வ அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த கருத்தின் பல்வேறு அம்சங்களையும், இந்த துறையில் மற்ற நாடுகளின் அனுபவங்களையும் ஆய்ந்த பிறகு, ஜனவரி, 1950 ல் நடந்த மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் மாணவர்கள் தங்களது நேரத்தின் ஒரு பகுதியை செலவிட வேண்டும் என்றும் அதற்கு ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 1952 ல் இந்திய அரசின் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் வரைவில், இந்திய மாணவர்களுக்கு சமூக மற்றும் தொழிலாளர் சேவையின் தேவை வலியுறுத்தப்பட்டது. 1958 இல், முதலமைச்சர்களுக்கு, தனது கடிதத்தில் ஜவகர்லால் நேரு சமூக சேவை பட்டம் பெறுவதற்கு ஒரு முன்நிபந்தனையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.அவர் இதை செயல்படுத்துவதற்கான தக்க திட்டத்தை வரையும்படி மத்திய கல்வித்துறையை வலியுறுத்தினார்.[1].
1959 இல், இந்த திட்டத்தின் ஒரு வரைவு வெளிக்கோடு மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் முன் வைக்கப்பட்டது. மேலும் அம்மாநாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை நியமனம் செய்ய பரிந்துரைத்தது. இதன் விளைவாக, ஒரு தேசிய சேவை குழு, தேஷ்முக்கின் நிர்வாக பொறுப்பின் கீழ் ஆகஸ்ட் 1959,28 அன்று நியமிக்கப்பட்டது. அக்குழு ஒன்பது மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அனால் நிதி தாக்கங்கள் மற்றும் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[1].
1960 ல் இந்திய அரசு உலகின் பல்வேறு நாடுகளில் மாணவர்களின் தேசிய சேவை எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வுசெய்ய, கே. ஜீ. சையுதீனை நியமித்தது. அவர் இந்திய மாணவர்கள் சமூக சேவை திட்டத்தை சாத்தியமாக்க பல்வேறு பரிந்துரைகளை "இளைஞர் தேசிய சேவை" என்ற தலைப்பின் கீழ் அரசிடம் சமர்ப்பித்தார். பின்னர், டாக்டர் டி.எஸ் கோத்தாரி (1964-66) தலைமையில் அமைக்கப்பட்ட கல்வி ஆணைக்குழு கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் சமூக சேவையுடன் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்திய அரசின் கல்வி பற்றிய தேசிய கொள்கை அறிக்கையில், பணி அனுபவம் மற்றும் தேசிய சேவை கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று அடித்தளம் அமைக்கப்பட்டது.இறுதியாக திட்ட குழு நான்காவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தேசிய சேவை திட்டத்திற்கு 5 கோடி வழங்கப்பட்டது. இந்த தேசிய சேவை திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு வெள்ளோட்ட திட்டமாக துவங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 24 செப்டம்பர் 1969 அன்று அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் வீ. கே. ஆர் .வீ ராவ் அனைத்து மாநிலங்கள் அமைந்துள்ள 37 பல்கலைக்கழகங்களில் நாட்டு நலப்பணித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தற்போது, இத்திட்டம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.[1].
Remove ads
குறிக்கோள்
நாட்டு நலப்பணித் திட்டம் "நான் அல்ல, நீ" என்பதை கோட்பாட்டாக கொண்டது. இது ஜனநாயக வாழ்க்கை முறையின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் தன்னலமற்ற சேவையின் தேவையை வலியுறுத்துகிறது. இது ஒரு தனிப்பட்ட மனிதனின் நலன் முழு சமூகத்தின் பொதுநலத்தையே சார்ந்து இருப்பதை காட்டுகிறது.
நோக்கம்
நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கிய நோக்கம் சமூக சேவை மூலம் ஆளுமையை வளர்ப்பதே ஆகும்.இந்த திட்டம் மாணவர்களுக்கு சமூக நல எண்ணங்களை கற்பிக்கவும்,எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் அமைக்கப்பட்டது.உதவி தேவைப்படுபவர்களுக்கு தக்க நேரத்தில் உதவி புரிந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி இச்சமூகத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ இத்திட்டத்தில் பணிபுரியும் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர்.இதன் மூலம் தொண்டர்கள் கிடைக்கக்கூடிய பழக்கவழக்கங்களை சிறப்பாக கையாண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கற்றுகொள்கின்றனர்.
அமைப்பு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொண்டர்கள் உள்ளடக்கிய தேசிய சேவை திட்டப்பிரிவுகள் இருக்கின்றன. தனியார் நிறுவனங்கள் கூட தேசிய சேவை திட்டப்பிரிவுகள் அமைக்க அறிவுறுத்தப்படுகின்றன.ஒரு பிரிவு பொதுவாக 20 முதல் 40 மாணவர்கள் வரை உள்ளடக்கி இருக்கும்.
முகாம்கள்
முகாம்கள் ஆண்டிற்கு ஒரு முறை அமைக்கப்படுகின்றன. இம்முகாம் இந்திய அரசு நிதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முகாம்கள் பொதுவாக ஒரு கிராமத்திலோ, புறநகர் பகுதியிலோ அமைக்கப்படும். தன்னார்வலர்கள் கீழ் குறிப்பிடப்பட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்:
- தூய்மை செய்தல்
- மரம் வளர்ப்பு
- மேடை நிகழ்ச்சிகள் அல்லது சமூக பிரச்சினைகள், கல்வி, சுத்தம் முதலியன பற்றிய விழிப்புணர்வை உருவாக்க ஊர்வலம்
- சுகாதார முகாம்களுக்கு மருத்துவர்களை அழைத்தல்
- மற்றும் பல
முகாம்கள் பொதுவாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் நீடிக்கும்.பல குறுகிய கால முகாம்களும் நடத்தப்படுகின்றன.
Remove ads
முக்கிய திட்டங்கள்
- கிராமங்களை தத்தெடுத்தல்
- சாலைகள் கட்டுமானம் மற்றும் சீர்செய்தல்
- மரம் வளர்ப்பு
- எழுத்தறிவு வகுப்புகள் நடத்துதல்
- ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டம்
- நெகிழி ஒழிப்பு
மற்ற திட்டங்கள்
சில நிறுவனங்களில், தன்னார்வ தொண்டர்கள் செயல்பாடுகளை நெரிசலை கட்டுப்படுத்துதல், கோவில்களில் வரிசைகளில் செல்ல மக்களை வலியுறுத்துவது,போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் போன்ற செயல்களிள் ஈடுபடுகின்றனர்.இது தேசிய மாணவர்படை,சாரணர்படை மற்றும் தேசிய நலனுக்காக உருவாக்கப்பட்ட மற்ற திட்டங்களுக்கு சமமாக கருதப்படுகிறது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads