பூனான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூனான் அல்லது நோக்கோர் பொனாம் (மலை கூட்டரசு) (ஆங்கிலம்: Funan; கெமர் மொழி: ហ្វូណន; அல்லது கெமர்: នគរភ្នំ; சீனம்: 夫南); என்பது கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தென்கிழக்காசியா மீகோங் சமவெளியை (Mekong Delta) மையமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு பண்டைய இராச்சியம் ஆகும்.[1]
பண்டைய இந்துக் கலாசாரத்தைக் கடைபிடித்து வந்த இந்த நிலப் பகுதிக்கு அல்லது மண்டலத்திற்கு (Mandala); பூனான் எனும் பெயர், சீன வரைபடவியலாளர்கள், புவியியலாளர்கள், எழுத்தாளர்கள் வழங்கிய பெயராகும் (Greater Indianized Kingdoms of South East Asia). பூனான் இராச்சியம் முதலாம் நூற்றான்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் இருந்ததைப் பற்றி விவரிக்கும் சீன வரலாற்று நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.[2][3]
Remove ads
பொது
மூன்றாம் நூற்றண்டின் மத்தியப் பகுதியில், பூனான் இராச்சியத்தில், நாங்கிங் 'ஊ' இராச்சியத்தின் (Eastern Wu dynasty) பிரதிநிதிகளாக காங் தாய் (Kang Tai), சூ யிங் (Zhu Ying) எனும் இரண்டு சீன அரசதந்திரிகள் தங்கியிருந்தனர்; அவர்களின் வழியாக மிக விரிவான விளக்கக் குறிப்புகள் பூனான் இராச்சியத்தைப் பற்றி மேலும் அறிய முடிகிறது.[4] :24
இப்பகுதியில் தற்பொழுது பேசும் நவீன மொழிகளான பழைய கெமெர் (Old Khmer) அல்லது நோகோர் புனோம் (Nokor Phnom); (தாய்: Fūnān); Phù Nam (வியட்நாமிய மொழி Phù Nam)ஆகிய மொழிகளில் பூனான் என்ற பெயர் காணப் பட்டாலும், அந்தக் காலத்தில் இருந்து உள்ளூர் வம்சாவளியைச் சேர்ந்த எந்தவொரு நூல்களிலும் பூனான் என்ற பெயர் காணப்படவில்லை.
பூனான் மக்கள்

மேலும் அப்போதைய பூனான் மக்கள் தங்கள் இராச்சியத்திற்கு என்ன பெயர் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை. பூனான் எனும் சொல், கெமர் மொழிச் சொல்லான புனாம் (bnaṃ) அல்லது வினாம் (vnaṃ) எனும் சொற்களுடன் தொடர்புடைய ஒரு சொல் எனவும்; அவையே பூனான் என்பதைக் குறிக்கிறது எனவும்; பண்டைய சீன அறிஞர்கள் வாதிடுகின்றனர். பூனான் என இன்று பயன்படுத்தப்படும் சொல்லுக்கு சீன மொழியில் மலை என்பது பொருளாகும். ஆயினும் பூனான் என்பது ஏதேனும் ஒரு மொழியில் இருந்து படியெடுக்கப்பட்ட சொல்லாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.
பூனான் இராச்சியத்தின் பெயரைப் போலவே, பூனான் மக்களின் இன-மொழியியல் தன்மையும் நிபுணர்களிடையே அதிக விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இதில் முக்கியமான கருதுகோள்கள் என்னவென்றால், பூனானியர்கள் (Funanese) பெரும்பாலும் மோன்-கெமர் (Mon–Khmer) அல்லது ஆஸ்திரோனீசியர்களாக (Austronesian) இருக்கலாம்; அல்லது அவர்கள் பல இன சமுதாயத்தை உருவாக்கியவர்களாகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. தற்போது கிடைக்கக்கூடிய சான்றுகளை வைத்து இதற்கு எந்தவொரு முடிவையும் எடுக்க இயலவில்லை.
கெமர் மொழியியல் ஆதிக்கம்

மைக்கேல் விக்கரி (Michael Vickery) என்பவரின் கருத்துப்படி; கிடைக்கக்கூடிய சான்றுகள் மூலமாக, பூனான் மக்கள் பேசிய பூனான் மொழியை உறுதியாக அடையாளம் காண இயலாவிட்டாலும்; பூனான் மக்கள் என்பவர்கள் கெமர் சமுதாய மக்கள் எனும் சான்றுகள் வலுவாக உள்ளன.[5]
பண்டைய பூனான் இராச்சியத்தின் துறைமுகமான ஓக் ஈயோ (Oc Eo) என்ற இடத்தில் தொல்பொருளியல் அகழ்வராய்ச்சி நடைபெற்றன. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஓக் ஈயோ மற்றும் முன்-அங்கோரிய நிலைகளுக்கு இடையில் (Pre-Angkorian Levels), பூனான் இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் கெமர் மொழிகளின் உண்மையான இடைநிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நிரூபித்துள்ளன. இது பூனான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் கெமர் மொழியியல் ஆதிக்கத்தைக் குறிக்கிறது.[6]
அரசியல் ஒற்றுமை
சீன வரலாற்றாசிரியர்களின் சான்றுகளின் அடிப்படையில், பூனான் அரச அமைப்பானது கி.மு. முதலாம் நூற்றாண்டில் மீகோங் சமவெளியில் (Mekong Delta) நிறுவப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் தொல்பொருள் ஆய்வுகள் இந்தப் பிராந்தியத்தில் விரிவான மனிதக் குடியேற்றம் கி.மு 4-ஆம் நூற்றாண்டுக்கு முனபு நடைபெற்று இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.
பூனான் இராச்சியம் என்பது ஒருங்கிணைந்த ஒரே ஆட்சி (Single Unified Polity) என சீன எழுத்தாளர்களால் கருதப் பட்டாலும், பூனான் இராச்சியம் நகர-மாநிலங்களின் தொகுப்பாக (Collection of City-States) இருந்து இருக்கலாம் என்றும் சில நவீன அறிஞர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அந்த நகர-மாநிலங்கள் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று தாக்குதல்களில் ஈடுபட்டு வந்து உள்ளன. மேலும் சில சமயங்களில் அரசியல் ஒற்றுமையைப் பேணி காத்தும் வந்துள்ளன.[7]
கண்ணாடி கால்வாய்
ஓக் ஈவ் என்ற இடத்தினை அகழாய்வு செய்ததில் ரோமானிய, சீன மற்றும் இந்தியப் பொருட்களை உள்ளடக்கிய, பெரும்பான்மையான பண்டைய காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்தத் தொல்பொருள் சான்றுகளில் இருந்து, தெற்கு வியட்நாமில் "கண்ணாடி கால்வாய்" என்று பொருள்படும் பண்டைய வணிக மையமான ஓக் ஈயோ (Óc Eo) துறைமுக நகரமானது பூனான் இராச்சியத்தின் ஒரு சக்திவாய்ந்த வர்த்தக மையமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது.[8]
தெற்கு கம்போடியாவில் (Southern Cambodia) அங்கோர் போரே (Angkor Borei) என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி ஒரு முக்கியமான தீர்வுக்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது. இன்றும் ஓக் ஈயோ நகரமானது அங்கோர் போரே நகரத்தின் கால்வாய்களின் அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பூனானின் மையப் பகுதியாக அமைந்திருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads