பழைமைவாதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பழைமைவாதம் (conservatism) என்பது, மரபுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் கொள்கைகளைக் குறிக்கும் ஒரு சொல். இங்கே மரபு என்பது, பல்வேறு மத, பண்பாட்டு, அல்லது நம்பிக்கைகள், வழக்கங்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறான சமூகப் பெறுமானங்கள் நிலைபெற்றிருப்பதன் காரணமாகப் பழைமைவாதம் என்பதைத் துல்லியமாக வரையறுப்பது கடினமாகும். சில பழைமைவாதிகள் அவ்வக்காலத்து நிலையைப் பேணிக்கொள்ளவோ அல்லது சீர்திருத்தங்களை மெதுவாகச் செய்யவோ விரும்புவர். வேறு சிலர் தமக்கு முந்திய காலப் பெறுமானங்களை மீள்விக்க விரும்புவர்.
ஒரு பண்பாட்டுக்கு உள்ளேயே பழைமைவாதம் என்றால் என்ன என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். சாமுவேல் பிரான்சிசு என்பவர் பழைமைவாதம் என்பது, "குறிப்பிட்ட மக்களையும், அவர்களுடைய நிறுவனப்படுத்தப்பட்ட பண்பாட்டு வெளிப்பாடுகளையும் நிலைத்திருக்கச் செய்வதும் அவற்றை மேம்படுத்துவதும் ஆகும்" என்றார். உரோஜர் சுக்கிரட்டன் என்பவர் பழைமைவாதம் என்பதை "சமுதாயச் சூழ்நிலையைப் பேணுதல்" என்றும், "சமூகத்தின் வாழ்வையும், நலத்தையும் இருக்கும் நிலையிலேயே எவ்வளவு காலத்துக்கு முடியுமோ அவ்வளவு காலத்துக்குப் பேணும் நோக்குடனான தாமதப்படுத்தும் அரசியல்" என்றும் வரையறுத்தார்.
பழைமைவாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நோக்கங்களைக் கொண்டவையல்ல. அவை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஜப்பானின் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி, சிலியின் சுதந்திர மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் பழைமைவாதக் கட்சி என்பன வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்ட பழைமைவாதக் கட்சிகள். பழைமைவாதக் கட்சிகள் பொதுவாக வலதுசாரிக் கட்சிகள் என்னும் பிரிவுக்குள் அடக்கப்படுகின்றன.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads