பிரித்தானியச் சண்டை

From Wikipedia, the free encyclopedia

பிரித்தானியச் சண்டை
Remove ads

பிரித்தானியச் சண்டை (ஆங்கிலம்: Battle of Britain; ஜெர்மன்: Luftschlacht um England அல்லது Luftschlacht um Großbritannien) 1940ல் இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. நாசி ஜெர்மனியின் விமானப்படையான லுஃப்ட்வாஃபே பிரிட்டனின் விமானப்படையைத் தாக்கி அழிக்க மேற்கொண்ட முயற்சி “பிரித்தானியச் சண்டை” என்றழைக்கப்படுகிறது. இப்பெயர் பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு பேருரையிலிருந்து உருவானது. "பிரான்சுக்கான சண்டை முடிந்து விட்டது. அடுத்து பிரிட்டனுக்கான சண்டை ஆரம்பமாகும்” என்று அவர் பேசிய வார்த்தைகளே இச்சண்டையின் பெயர்காரணமாகின. ஜூலை-அக்டோபர், 1940 காலகட்டத்தில் பிரிட்டனின் வான்பிரதேசங்களில் நடைபெற்ற இச்சண்டை, முழுவதும் விமானப்படைகள் மட்டுமே மோதிய முதல் போராகக் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் பிரித்தானியச் சண்டை, நாள் ...

மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றிய பின் நாசி ஜெர்மனியின் படைகள் அடுத்து பிரித்தானியா தீவுகளைக் கைப்பற்றத் திட்டமிட்டன. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனின் கடற்கரைகளில் படைகளைத் தரையிறக்க பிரித்தானிய விமானப்படை பேரிடராக இருக்கும் என்பதால், தரைவழி படையெடுப்பு தொடங்கும் முன் அதை அழிக்க வேண்டும் என்பதற்காக ஹிட்லரும், லுஃப்ட்வாஃபே தலைமைத் தளபதி கோரிங்கும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதன் இலக்கு பிரித்தானியா விமானப்படையின் அழிவாக மட்டும் இருந்தது. ஆனால் சண்டையின் இடையில் ஹிட்லர் பிரிட்டனின் நகரங்களின் மீது குண்டு வீசி அழிக்க உத்தரவிட்டார். இவ்வாறு மாறுபட்ட இலக்குகளை லுஃப்ட்வாஃபேவால் நிறைவேற்ற முடியாமல் ஜெர்மனியின் தாக்குதல் தோல்வியடைந்தது. லுஃப்ட்வாஃபே விமானங்களின் இழப்புகள் மிகவும் அதிகமானதால் ஜெர்மனி வான்வழித் தாக்குதலை நிறுத்திக்கொண்டது. பிரித்தானியா மீது படையெடுக்க வகுக்கப்படிருந்த சீ லயன் நடவடிக்கைத் திட்டமும் கைவிடப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி சந்தித்த முதல் தோல்வி இதுவே.

Remove ads

பின்புலம்

Thumb
பிரிட்டனின் ராடார் சங்கிலி அரண்

1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி விட்டன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் நாசிப் போர் எந்திரத்தின் வலிமையின் முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக சரணடைந்தன. ஜூன் 1940ல் பிரான்சு சண்டை முடிந்து பிரான்சும் ஜெர்மனியிடம் சரணடைந்தது. மேற்கு ஐரோப்பாவில் நாசிகளுக்கு மீதமிருந்த ஒரே எதிரி பிரித்தானியா மட்டுமே. பிரிட்டனின் படை பிரான்சு போர்க்களத்தில் படுதோல்வியடைந்து ஜெர்மனி படைகளால் சிறைபிடிக்கப் படுவதிலிருந்து மையிரிழையில் தான் தப்பியிருந்தன. வீரர்கள் தப்பினாலும், பிரிட்டனின் பீரங்கிகள், டாங்குகள், தளவாடங்கள் ஆகியவற்றில் மிகப்பெரும்பகுதி ஜெர்மன் படையின் கையில் சிக்கிக் கொண்டது. இதனால் மனமுடைந்த பிரித்தானியா விரைவில் அமைதி கோரி பேச்சுவார்த்தைக்கு இணங்கிவிடும் என்று ஹிட்லர் நம்பினார். சோவியத் யூனியன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று அவசரப்பட்டார். ஆனால் பிரிட்டனில் பிரதமர் நெவில் சாம்பர்லேனின் ஆட்சி கவிழ்ந்து வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமரானதால், அந்நாடு சமாதானப் பேச்சுக்கு வரமறுத்து விட்டது. இதனால் பிரித்தானியா மீதான படையெடுப்பு பற்றி ஜெர்மன் போர்த் தலைமையகம் திட்டமிடத் தொடங்கியது.

Thumb
பிரித்தானிய-ஜெர்மன் விமானங்களிடையே “நாய்ச் சண்டை

பிரிட்டனைத் தாக்க எத்தனிக்கும் எந்தவொரு தரைப்படையும் அதனை ஐரோப்பிய நிலப்பரப்பிலிருந்து பிரிக்கும் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தே செல்ல வேண்டும். வலிமை வாய்ந்த பிரித்தானியா கடற்படை ஆங்கிலக் கால்வாயைப் பாதுகாத்து வந்ததால் ஜெர்மனி தரைப்படை தளபதிகள் படையெடுப்பினால் பெரும் இழப்புகள் உண்டாகுமென்று ஹிட்லரை எச்சரித்தனர். ஜெர்மனியின் கடற்படை தளபதி அட்மைரல் எரிக் ரைடர் இதற்கு முன்னால் நார்வே நாட்டின் மீது படையெடுத்த போது தமது படை பெரும் சேதமடைந்து விட்டதாகவும், பிரிட்டனின் கடற்படையைச் சமாளிக்கும் பலம் அதற்கு இல்லையெனவும் எச்சரித்தார். இதனால் ஜெர்மன் தரைப்படைகள் பிரித்தானியா கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகாமல் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க ஜெர்மன் விமானப்படையின் (லுஃப்ட்வாஃபே) குதி குண்டுவீசி விமானங்களின் (டைவ் பாம்பர்கள்) துணை வேண்டுமென்பது புலனானது. இது நடக்கவேண்டுமெனில் முதலில் பிரிட்டனின் விமானப்படை அழிக்கப்பட வேண்டும். ஏனென்றால் ஜெர்மன் குண்டுவீசி விமானங்களை அதனைவிட வேகமாகச் செல்லக் கூடிய பிரித்தானிய சண்டை விமானங்கள் (ஃபைட்டர்ஸ்) எளிதில் சுட்டு வீழ்த்திவிடும். இந்த சூழலை கருத்தில் கொண்டு ஜூலை 16, 1940ல் ஹிட்லர் தனது 16வது ஆணையைப் பிறப்பித்தார்: பிரித்தானியா மீது படையெடுக்க வேண்டும்; அப்படையெடுப்பு நிகழும் போது ஆங்கிலக் கால்வாயில் பிரித்தானிய விமானப்படையால் இடையூறு ஏற்படக்கூடாது. எனவே படையெடுப்பு நிகழும் முன் பிரித்தானிய விமானப்படை நொறுக்கப்பட வேண்டும். ஆங்கிலக் கால்வாயின் வான்பிரதேசங்களில் லுஃப்ட்வாஃபே ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்த வான் ஆதிக்க நிலையை அடைவதற்கு கொரிங்கின் லுஃப்ட்வாஃபேவிற்கு ஆகஸ்ட் மத்திவரை அவகாசம் தரப்பட்டது.

Remove ads

நிகழ்வுகள்

Thumb
1940ல் ஆங்கிலக் கால்வாயின் மேல் ஜெர்மனியின் ஹென்கல் ஹெ. இ. 111 வகை குண்டுவீசி விமானங்கள்

லுஃப்ட்வாஃபே ஜூலை மாதம் பிரித்தானிய விமானப்படையின் மீது தனது தாக்குத்லைத் தொடங்கியது. அடுத்த மூன்று மாதங்கள் இடைவிடாது நடைபெற்ற இச்சண்டையை நான்கு முக்கிய கட்டங்களாகப் பிரிக்கலாம்:

  1. ஜுலை 10 - ஆகஸ்ட் 11 : கால்வாய் மோதல்கள்
  2. ஆகஸ்ட் 12 - ஆகஸ்ட் 23: “கழுகுத் தாக்குதல்” கரையோர விமானத்தளங்களின் மீதான லுஃப்ட்வாஃபே தாக்குதல்கள்
  3. ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 6 : பிரித்தானிய விமானப்படைத் தளங்களின் மீதான் உச்சகட்ட தாக்குதல்கள்
  4. செப்டம்பர் 6 முதல் : பிரிட்டனின் நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள்

ஆரம்பத்தில் லுஃப்ட்வாஃபே ஆங்கிலக்கால்வாய் மீது சரக்குக் கப்பல்கூட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்தன. தங்கள் விமானங்கள் மற்றும் விமானிகளின் பலங்களையும் பலவீனங்களையும், பிரிட்டனனின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அறிந்து கொள்ள ஜெர்மன் தளபதிகள் ஸ்பெர்லேயும் கெச்சல்ரிங்கும் இத்தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொண்டனர். இத்தாக்குதல்கள் லுஃப்ட்வாஃபேக்கு பெரும் வெற்றியில் முடிவடைந்தன. சரக்குக் கப்பல்களின் இழப்புகள் அளவுக்கதிகமானதால் பிரித்தானியா ஆங்கிலக் கால்வாயில் சரக்குக் கப்பல்கூட்டங்கள் செல்வதை தடை செய்துவிட்டது. இந்த மோதல்கள் இரு தரப்பினரும் எதிரிகளின் உத்திகளைத் தெரிந்து கொள்ள உதவின.

Thumb
பிரிட்டனின் பிரிஸ்டல் பிளன்ஹெய்ம் எம். கே. 4 வகை விமானம்

கால்வாய் மோதல்களில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து லுஃப்ட்வாஃபே கரையோர பிரித்தானிய விமானப்படைத் தளங்களை குறிவைக்கத் தொடங்கியது. அட்லரான்கிர்ஃப் (கழுகுத் தாக்குதல்) என்று சங்கேதப்பெயரிடப்பட்ட இத்தாக்குதல் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது. ராடார் நிலையங்கள், கரையோர ஓடுதளங்கள் ஆகியவை குண்டுவீசி தகர்க்கப்பட்டன. ஆகஸ்ட் 24 வரை நடைபெற்ற இத்தாக்குதல்களில் இருதரப்பிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. யாருக்கும் வெற்றி ஏற்படாத நிலையில் கோரிங் தனது படையினருக்கு வேறொரு உத்தரவைப் பிறப்பித்தார்.

Thumb
குண்டுவீச்சின் பின்பு கோவண்ட்ரி நகரம்

ஆக்ஸ்ட் 24ல் கோரிங்கின் உத்தரவின்படி லுஃப்ட்வாஃபே உள்நாட்டிலுள்ள பிரித்தானிய விமானத்தளங்களை, விமானங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் தாக்கத் தொடங்கின. அடுத்த இருவாரங்கள் பிரித்தானியச் சண்டையின் அதிமுக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. இரு புறமும் பெருத்த சேதம் ஏற்பட்டு, படைகள் சோர்வடையத் தொடங்கின. இருப்பினும் சண்டையின் உக்கிரம் மேலும் தீவிரமடைந்தது. அதுவரை ஹிட்லரின் நேரடி உத்தரவின்படி பிரிட்டனின் மக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீசுவதை லுஃப்ட்வாஃபே விமானிகள் தவிர்த்து வந்தனர். ஆனால் தவறுதலாக லண்டனின் சுற்றுப்புறங்களில் இருந்த சில விமானதளங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக சர்ச்சில் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லின் மீது குண்டு வீச ஆணையிட்டார். இதனால் கோபமடைந்த ஹிட்லர் தனது முந்தைய ஆணையை விலக்கிக் கொண்டார். பிரிட்டனின் நகரங்களை தரைமட்டமாக்கும்படி கோரிங்க்கு உத்தரவிட்டார். இதனால், ஜெர்மனியின் போர் இலக்கு பிரிட்டனின் விமானப்படையை அழிப்பதிலிருந்து பிரிட்டனின் நகரங்களை அழிப்பதற்கு மாற்றப்பட்டது. இம்மாற்றம், பிரித்தானிய விமானப்படைக்குச் சாதகமாகிப் போனது. செப்டம்பர் மாதம் முழுவதும் லண்டன் முதலிய பிரித்தானிய நகரங்கள் கடுமையான குண்டுவீச்சுக்கு உள்ளாகின. ஆனால் பிரித்தானிய விமானத்தளங்கள் தாக்குதலிருந்து தப்பித்தன. இது எதிர்த் தாக்குதல் நிகழ்த்த பிரித்தானிய விமானப்படைக்குப் பெரிதும் உதவியது. தாக்குதலில் ஈடுபட்ட லுஃட்ஃபுளோட்டுகளுக்கு (ஜெர்மன் விமானப்படைப் பிரிவுகள்) பேரிழப்பு ஏற்பட்டது. பிரித்தானியா சரணடையவும் இல்லை, அதன் விமானப்படைக்குப் பெரும் அழிவு ஏற்படவும் இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்ட ஹிட்லர் அக்டோபர் 13ல் சீ லயன் நடவடிக்கையை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்தார். இத்துடன் பிரித்தானியச் சண்டை நிறைவுக்கு வந்தது.

Remove ads

விளைவுகள்

Thumb
பிரிட்டனுக்காகப் போரிட்ட போலந்து நாட்டு விமானப்படையின் 303வது ஸ்குவாட்ரன் விமானிகள்

லுஃப்ட்வாஃபேவினால் பிரிட்டனின் வான்வெளியில் வானாதிக்க நிலையை அடைய முடியாததால், திட்டமிடப்பட்டிருந்த ஜெர்மனியின் பிரித்தானியா படையெடுப்பு கைவிடப்பட்டது. நாசி போர் எந்திரத்தை எதிர்த்து ஒரு நாடு தப்பிப் பிழைக்கமுடியுமென்பதை பிரிட்டனின் இந்த வெற்றி உலகுக்கு உணர்த்தியது. இவ்வெற்றிக்குப் பின்னர், பிரிட்டனுக்கு உதவுவது பற்றியான அமெரிக்காவின் நிலை பிரிட்டனுக்குச் சாதகமாக மாறியது. மேற்குப் போர்முனையில் இன்னும் ஒரு எதிரி மீதமிருக்கும்போதே கிழக்குப் போர்முனை நோக்கி ஹிட்லர் தன் கவனத்தைத் திசை திருப்ப வேண்டியதாயிற்று. இதனால் அடுத்த நான்காண்டுகள் சோவியத் யூனியனுடனான போரில் அவரால் ஜெர்மனியின் முழுபலத்தை பிரயோகிக்க முடியவில்லை. பிரிட்டனைத் தளமாக பயன்படுத்திக் கொண்ட நேச நாடுகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த ஐரோப்பா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி தொல்லை கொடுத்து வந்தன. 1944ல் பிரான்சு மீது நேச நாடுகள் படையெடுக்கவும் பிரித்தானியா தளமாக உதவியது. இதனால் இருமுனைகளிலும் போரிடும் நிலைக்கு ஜெர்மனி தள்ளப்பட்டது. எனவே பிரித்தானியச் சண்டையில் ஜெர்மனியின் தோல்வி பெரும் போரியல் உபாயத் தவறாகக் கருதப்படுகிறது.

பிரித்தானியச் சண்டையில் லுஃப்ட்வாஃபேவைத் தோற்கடித்த பிரித்தானிய விமானிகள் பிரித்தானியா ஆட்சியாளர்களாலும், மக்களாலும் பெருமளவில் கொண்டாடப்படுகின்றனர். சர்ச்சில் நாடாளுமன்றத்துக்கு ஆற்றிய உரையொன்றில் ”நமது வரலாற்றில் இதற்கு முன்னர் இதுபோல இத்தனை மக்கள், ஒரு சிலருக்கு (விமானிகள்) கடமைப்பட்டிருக்கும் நிலை இருந்ததில்லை” என்று அவர்களைப் பாராட்டினார். அன்று முதல் பிரித்தானியச் சண்டையில் ஈடுபட்ட பிரித்தானிய விமானிகள் “அந்த ஒரு சிலர்” (The Few) என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் நாள் பிரிட்டனில் “பிரித்தானியச் சண்டை தினமாக” அனுசரிக்கப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads